Sunday, April 26, 2015

சுட்ட கத்திரிக்காய் மசியல் / Grilled Brinjal Masiyal

 இந்த சுட்ட கத்திரிக்காய் மசியலில் புளியோ,தக்காளியோ காரத்திற்கு எந்த மசாலாவோ சேர்க்கலை,ஆனாலும் சிம்ப்ளி சூப்பர்ப். இது தோழி அமைதிச்சாரல் சாந்தி மாரியப்பன் பகிர்ந்தது. கத்திரிக்காய் என்றால் எனக்கு கொண்டாட்டம். நான் செய்து பார்த்தேன் எனக்கு  பிடிச்சிருந்தது. நன்றி சாந்தி.
தேவையான பொருட்கள்;
கத்தரிக்காய் -1
பெரிய வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 4 , பூண்டு - 5 பல் , இஞ்சி- 1 இஞ்ச் துண்டு - சேர்த்து தட்டி வையுங்க.
மஞ்சள்பொடி - 1 சிட்டிகை.
கடுகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

செய்முறை:
இப்படி பெரிய கத்திரிக்காய் எடுத்துக் கொள்ளவும்.
 அடுப்பில் அல்லது கிரிலில் திருப்பி திருப்பி எல்லாப் பக்கமும் சுட்டு எடுக்கவும். கத்திரிக்காய் வெந்து அப்படியே சுருங்கி வரும், தோல் வெடித்து தண்ணீர் வடிய ஆரம்பிக்கும்.
 அடுப்பை அணைக்கவும்.
 தோல் எடுத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் சூடு செய்யவும். கடுகு,சீரகம் வெடிக்க விடவும்.
தட்டிய  இஞ்சி,,பூண்டு, பச்சை மிளகாய் சேர்க்கவும். வெங்காயம்  சேர்த்து வதக்கவும்.மஞ்சள் தூள் சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.தேவைக்கு உப்பு சேர்க்கவும்.
 சுட்ட கத்திரிக்காய் சேர்க்கவும்.அடுப்பை சிம்மில் வைத்து பிரட்டவும்.
 நன்கு மசித்து விடவும். அடுப்பை அணைக்கவும்.
சுவையான சுட்ட கத்திரிக்காய் மசியல் ரெடி. சாதம் சப்பாத்திக்கு சைட் டிஸ் ஆக பரிமாறலாம். ஈசியாக செய்யக் கூடியது. நோன்பு கஞ்சிக்கு கூட தொட்டுக் கொள்ளலாம்.

Friday, April 24, 2015

சிறப்பு விருந்தினர் பகிர்வு - 24 - திருமதி பத்மப்ரியா செந்தில் / அசைவ ஸ்பெஷல்/ Guest Post - Mrs Padmapriya Senthil / Non Veg Special


இன்றைய சிறப்பு விருந்தினர் திருமதி பத்மப்ரியா செந்தில் காரைக்குடியைச் சேர்ந்தவர்.கணினி அறிவியல் பட்டப் படிப்பை முடித்தவர், இனிமையான இல்லத்தரசி, கணவர் திரு.செந்தில் முருகன் அவர்களின் பணி நிமித்தம் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் ராசல்கைமாவில் வசித்து வருகிறார்கள். வர்ஷா,ஜெனிஷா என்ற அழகான இரு செல்லக் குழந்தைகள். பத்மா தன்னுடைய பொழுது போக்குகளாக புத்தகம் வாசிப்பது, பாடல்கள் கேட்பது, சமையல் மற்றும் வீட்டை அழகாக பராமரிப்பது என்று குறிப்பிடுகிறார்.

இவர் தன்னுடைய  ப்ரஃபைல் படமாக அனுப்பி வைத்த குடும்ப புகைப்படம் உங்களுக்காக ! அவர்கள்  எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்வாங்கு வாழ வாழ்த்துவோம் !


சிறப்பு விருந்தினர் பகிர்வுக்காக திருமதி பத்மா இன்று நம்முடன்  நாட்டு கோழிக் குழம்பு, இறால் பிரட்டல், செட்டிநாடு மீன் வறுவல், மிளகு ரசம் என்று மொத்தம் நான்கு குறிப்புகள் பகிர்ந்து இருக்காங்க.

முதலில் நாம் பார்க்கப் போவது..

நாட்டு கோழிக் குழம்பு :


தேவையான பொருட்கள்;
நாட்டுக்கோழி - முக்கால் கிலோ
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 150 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 - 3  டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள்  - 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய மல்லிக்கீரை - சிறிது.
தாளிக்க :
நல்ல எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 3
கல்பாசி - சிறிதளவு
சோம்பு - 1 டீஸ்பூன்
பிரிஞ்சி இலை - 1
கருவேப்பிலை - 2 இணுக்கு

அரைத்துப்பால்  எடுக்க :
தேங்காய் - அரை அல்லது ஒரு கப் ( விருப்பம் போல்)
அத்துடன் அரைடீஸ்பூன் சோம்பு, அரைடீஸ்பூன் சீரகம் சேர்த்து அரைத்து கெட்டியாக பால் எடுக்கவும்.

 செய்முறை:
கோழித்துண்டுகளை நன்கு சுத்தம் செய்து நன்கு அலசி கடைசித்தண்ணீரில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு மீண்டும் அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.

ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விடவும்.
எண்ணெய் சூடானவுடன் தாளிக்க மேற்சொன்ன பொருட்களைச் சேர்க்கவும்.
அடுத்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக  நன்கு வதக்கவும்.
அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். நன்கு பச்சை வாடை போக வதக்கவும்.
தக்காளி சேர்க்கவும். சிறிது உப்பு சேர்த்து வதங்க விடவும். தக்காளி வதங்கியதும்  கோழித்துண்டுகளைச் சேர்க்கவும்.பிரட்டி விடவும்.
மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்க்கவும். நன்கு பிரட்டி ஒரு கப் தண்ணீர் சேர்த்து கோழியை மூடி போட்டு வேக விடவும். இடையே திறந்து பிரட்டி விடவும். தேவைக்கு உப்பு சேர்க்கவும்.
கோழிக்கறி வெந்த பின்பு எடுத்து வைத்த தேங்காய்ப்பால் சேர்க்கவும்.நன்கு கலந்து விடவும்.
அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விடவும். நன்கு குழம்பு கொதித்து ஒன்று சேர்ந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
சுவையான நாட்டு கோழிக் குழம்பு ரெடி.
சுடச் சுட சாதத்துடன் செம டேஸ்டாக இருக்கும். இட்லி,தோசை, சப்பாத்தி,ஆப்பம்,இடியாப்பத்துடனும் பரிமாறலாம்.

அடுத்த குறிப்பு: 

செட்டிநாடு மீன் வறுவல் :


தேவையான பொருட்கள்;
மீன் -1 கிலோ
சுத்தம் செய்த மீனை மஞ்சள் தூள் போட்டு நன்கு அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.
மசாலா அரைக்க :
மிளகு,சீரகம்,சோம்பு தலா - ஒரு டீஸ்பூன்
பூண்டு - 5 பல்
இஞ்சி - சிறு துண்டு
சின்ன வெங்காயம் - 6
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
மல்லித்தூள் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும்.
அத்துடன் பெரிய பாதி எலுமிச்சை பிழியவும். நன்கு கலந்து கொள்ளவும்.
ஒவ்வொரு துண்டாக எடுத்து மசாலாவை கையால் நன்கு சாறும் படி தாராளமாக மீனில் தடவி வைக்கவும். ஒரிரு மணி நேரம் ஊறட்டும்.

மீன் பொரிக்க ஒரு கடாயில் எண்ணெய் விட்டு டீப் ஃப்ரை செய்து எடுக்கவும்.மீன் மசாலா எண்ணெய் அடியில் தங்குவதை அகப்பையால் எடுத்து விட்டு அடுத்த முறை மீனை போட்டு இப்படியே அனைத்து துண்டுகளையும் முறுக பொரித்து எண்ணெய் வடித்து எடுத்து வைக்கவும்.

வாவ் ! அசத்தலான செட்டிநாடுமீன் வறுவல்  ரெடி. நீங்களும் செய்து பாருங்க.

அடுத்து இறால் பிரட்டல் செய்முறைக்குச் செல்வோம்.
இறால் பிரட்டல் :
தேவையான பொருட்கள்;
இறால் ஒன்னரை கிலோ - தோல் எடுத்து சுத்தம் செய்து கொள்ளவும்.பின்பு நன்கு அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.
ஃபிஷ் ஃப்ரைக்கு ரெடி செய்த செட்டிநாடு மசாலா மீதமிருக்கும்,
இறாலில் பிரட்டி ஊற வைக்கவும்.
தாளிக்க :
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
 பட்டை -2,சோம்பு - 1டீஸ்பூன், கிராம்பு -3,
கருவேப்பிலை -2 இணுக்கு

பெரிய வெங்காயம் - ஒன்னரை  நறுக்கியது
பெரிய தக்காளி  நறுக்கியது  1 அல்லது ஒன்னரை
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2  டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 2 - 3 டீஸ்பூன்
மல்லித்தூள் - 4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
நறுக்கிய மல்லி இலை - ஒரு கைப்பிடி
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க சொன்னவற்றை சேர்க்கவும்.
வெங்காயம் சேர்த்து வதக்கவும்,இஞ்சி பூண்டு சேர்த்து மீண்டும் நன்கு வதக்கி தக்காளி சேர்த்து பிரட்டி உப்பு சேர்த்து வதங்க விடவும்.
விரவி வைத்த இறால் சேர்க்கவும். பிரட்டவும்.மசாலா தூள் வகைகள் சேர்க்கவும். நன்கு பிரட்டவும்.
இறாலில் தண்ணீர் ஊறி வரும். அந்த தண்ணீர் வற்றும் வரை நன்கு பிரட்டி வேக விடவும்.
தண்ணீர் நன்கு வற்றி வரும் பொழுது நறுக்கிய மல்லி இலை தூவி  ஒரு சேர பிரட்டி அடுப்பை அணைக்கவும்.

 சுவையான இறால் பிரட்டல் ரெடி.
கார சாரமாக மசாலா சார்ந்து சூப்பராக இருக்கும்.

அடுத்து  சுலபமாகச் செய்யும்  மிளகு ரசம் குறிப்பு:
மிளகு ரசம் :
தேவையான பொருட்கள்;
தக்காளி - 1
பூண்டு தட்டியது - 4 பல்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகு பொடித்தது - 1 டீஸ்பூன்
நறுக்கிய மல்லி இலை - சிறிது.
புளிக்கரைசல் - சிறிய எலுமிச்சையளவு புளியில்
உப்பு - தேவைக்கு.
தாளிக்க :
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு,உ.பருப்பு,வெந்தயம்,சீரகம் - தலா அரை டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
பெருங்காயம் - கால் டீஸ்பூன்.
கருவேப்பிலை - 2 இணுக்கு

செய்முறை:
புளி தேவைக்கு தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.தக்காளி நறுக்கிக் கொள்ளவும்.மிளகு பொடித்துக் கொள்ளவும்.
ரசம் செய்ய ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன் தாளிக்கச் சொன்ன பொருட்கள் சேர்க்கவும்.
நறுக்கிய தக்காளி,மஞ்சள் தூள் சேர்த்து வதங்க விடவும்.
புளிக்கரைசல் சேர்க்கவும். மிளகு பொடித்தது சேர்க்கவும்.
தட்டிய பூண்டு சேர்க்கவும்.
அடுப்பை குறைத்து வைக்கவும். சிறிது கொதி வரட்டும்.மல்லி இலை சேர்க்கவும்.அடுப்பை அணைக்கவும்.
பொதுவாக நாம் ரசம் நுரை கூடி வரும் பொழுது இறக்கி விடுவோம்,ஆனால் இங்கு ரசம் கொதி வந்து அணைக்க வேண்டும்.கொஞ்சம் திக்காக இருக்குமாம். கடைசியில் தான் ரசத்திற்கு உப்பு சேர்க்க வேண்டும்.
மல்லியிலை தூவி அலங்கரிக்கவும்.


மணக்க மணக்க சுவையான மிளகு ரசம் ரெடி.
சமையல் முடிந்தது. இனி ரசித்து ருசித்து சாப்பிட வேண்டியது தான்.

இதோ செமையாய் சமைத்த அனைத்தும் அசத்தலான பரிமாறலுடன்  உங்களுக்காக. செய்து பாருங்க,அருமையாக இருக்கும்.

என் கணவர் வேலை நிமித்தமாக ராசல்கைமா சென்ற பொழுது என்னையும் உடன் அழைத்துச் சென்றார்.அங்கு என் கணவரின் நண்பர் திரு. செந்தில் முருகன் அவர்கள்  வீட்டின் அருமையான விருந்தோம்பல் தான் இது. 
எங்களுக்கு பாரம்பரியமாக தலைவாழையில் பரிமாறினாங்க. சாப்பிடும் ஆர்வத்தில் அதனை கிளிக்க மறந்து விட்டேன்.


இந்தச் சமையல் அவர்கள் வீட்டில்  நானும் உடன் இருந்து பத்மா சமைக்கும் பொழுது மொபைலில்  கிளிக்கியது.
என்னவொரு பொறுமை, எனக்கேத்தமாதிரி என் கேள்விக்கும் பதில் சொல்லிகிட்டு யதார்த்தமாக சமைத்த விதம் கண்டு எனக்கு மிகுந்த ஆச்சரியம். 


இதனை என் வலைப்பூவில் பகிரட்டுமா என்று பத்மாவிடம் கேட்டேன், அம்மா நீங்களே எழுதி போஸ்ட் செய்திடுங்கன்னு சொல்லிட்டாங்க, கரும்பு தின்னக் கூலியா  என்ன ? உடனே போஸ்டிங் ரெடி செய்து விட்டேன். பத்மா சமைக்கும் பொழுது பார்த்ததை வைத்து மசாலா அளவுகள் கொடுத்துள்ளேன். நீங்கள் உங்கள் சுவைக்கேற்ப பொருட்கள்  சேர்த்து இதே முறையில் செய்து பாருங்க.சூப்பராக இருக்கும்.

பத்மா  வீட்டின் பால்கனியில் இருந்து பார்த்தால் முன்னாடி Mangroves பக்கவாட்டில்  கடல் என்று அழகான காட்சிகள், அவர்கள் வீட்டினருகில் இருந்த ஹோட்டலில் தான் நாங்கள் தங்கியிருந்தோம். கீழ்காணும் படங்கள் வீட்டின் பால்கனியில் இருந்து மொபைலில் கிளிக்கியது. 

இந்த வாரம் சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து கொண்டு நமக்காக சமைத்து அசத்திய திருமதி பத்மபிரியாவிற்கு நம்முடைய  மனமார்ந்த நன்றி மற்றும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.
சிறப்பு விருந்தினர் பகிர்வில் நீங்களும் கலந்து கொள்ள விரும்பினால்  விபரமறிய இங்கே  கிளிக்கவும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

Tuesday, April 21, 2015

கேப்பை முருங்கையிலை ரொட்டி / ராகி முருங்கையிலை ரொட்டி / Ragi drumstick leaves roti

 தேவையான பொருட்கள்;
ராகி மாவு - 200 கிராம்
நறுக்கிய வெங்காயம் - 1
முருங்கையிலை - 1 கப்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
.உப்பு ,தண்ணீர் தேவைக்கு.
விரும்பினால் பச்சை மிளகாய் அல்லது மிளகாய்த்தூள் காரத்திற்கு சேர்க்கலாம்.நான் சேர்க்கவில்லை.
பரிமாறும் அளவு - 2 நபர்.

முருங்கைக்கீரை என்று இல்லை,எந்தக்கீரை வேண்டுமானாலும் சேர்த்து செய்யலாம்.
செய்முறை:
ஆய்ந்த முருங்கைக்கீரையை அலசிக் கொள்ளவும்,வெங்காயம் நறுக்கிக் கொள்ளவும். 
 வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விடவும்,வெங்காயம் கீரை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.வதங்கிய பின்பு சிறிது ஆறட்டும்.
 ராகி மாவு,  தேங்காய்த்துருவல் தேவைக்கு தண்ணீர் ,உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் குழைத்துக் கொள்ளவும்.அரை மணி நேரம் மூடி வைக்கவும்.
 நான்கு உருண்டைகளாகப் பிரிக்கவும்.
 சிறிது எண்ணெய் தொட்டுக் கொண்டு கையால் ரொட்டி போல் தட்டி இரு பக்கமும் நன்கு வேக வைத்து எடுக்கவும்.விரும்பினால் சிறிது எண்ணெய் தடவி சுடவும்.

 சுவையான சத்தான ராகி முருங்கையிலை ரொட்டி ரெடி.
விருப்பாமான பக்க உணவுடன் பரிமாறலாம்.அல்லது அப்படியே சும்மாவே சாப்பிடலாம்.
மிருதுவாக அபாரச் சுவையுடன் இருக்கும்.

Friday, April 17, 2015

ஊதா முட்டைகோஸ் பொரியல் / Purple Cabbage Poriyal

தேவையான பொருட்கள்;
ஊதா கோஸ் - 200 கிராம்
வேக வைத்த பாசிபருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு ,உளுத்தம் பருப்பு - த்லா அரை  டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன் (விரும்பினால்)
கிள்ளிய மிளகாய் வற்றல் - 1
கருவேப்பிலை - 2இணுக்கு
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
கொரகொரப்பாக அரைக்க:
தேங்காய் துருவல்  - 3 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1


 கோஸை இப்படி மெலிதாக நறுக்கி கொள்ளவும். அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.
 ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன் கடுகு,உ.பருப்பு,சீரகம்,வற்றல்,கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்,அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
நறுக்கிய கோஸ் சேர்த்து  பிரட்டி விடவும்.

 தேவைக்கு உப்பு சேர்க்கவும். மூடி போட்டு நன்கு வதங்க விடவும். தேவைப்பட்டால் தண்ணீர் சிறிது தெளிக்கவும்.
 வதங்கிய பின்பு திறந்து பாசிப்பருப்பு சேர்க்கவும்.
 ஒரு சேர பிரட்டவும்.
 தேங்காய் அரைத்தது சேர்க்கவும். கலந்து விட்டு சிம்மில் வைத்து நன்கு பிரட்டி அடுப்பை அணைக்கவும்.
சுவையான சத்தான ஊதா முட்டைகோஸ் பொரியல் ரெடி.

 சாதத்துடன், சாம்பார்,குழம்பிற்கு பக்க உணவாகப் பரிமாறலாம்.இதன்
ருசி துவர்ப்பில்லாத வாழைப்பூ போல் அருமை.
இதனை சாலட் போலும் சாப்பிடலாம்.

Thursday, April 16, 2015

சேனைக்கிழங்கு சாப்ஸ் / Yam Chops

தேவையான பொருட்கள்:
சேனைக்கிழங்கு - அரைக்கிலோ
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட்  2 - 3  டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
வறுத்து அரைக்க :
சோம்பு - 2 டீஸ்பூன்
சீரகம் - 1டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 4 அல்லது 6
கிராம்பு - 4
பட்டை - 2 துண்டு
கிராம்பு பட்டை  அளவு அவரவர் விருப்பம், நான் முன்பெல்லாம் இந்த மணம்  குழந்தைகளுக்காக குறைவாக சேர்ப்பேன். இப்ப டேஸ்ட் மாறிவிட்டது, அதனால் கொஞ்சம் மணமாக இருக்கட்டும் என்று கொஞ்சம் அதிகப் படுத்துக் கொண்டேன். விரும்பினால் இத்துடன் மல்லியும் சேர்த்துக் கொள்ளலாம்.


இதனை லேசாக வெறும் வாணலியில் வெதுப்பி பொடித்துக் கொள்ளவும்.

இத்துடன் ஒரு வெங்காயம் ,ஒரு தக்காளி, 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல் சேர்த்து அரைக்கவும்.
செய்முறை:

சேனைக்கிழங்கை தோல் சீவி மண் போக அலசவும். ஒரு போல  சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

மஞ்சள் தூள், தேவைக்கு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
சுவைக்கு ஏற்ப உப்பு சேர்க்கவும்.
நன்கு வெந்த பின்பு வடிக்கட்டவும்.
வாணலியில் எண்ணெய் சூடு செய்யவும்.இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். கருவேப்பில்லை சேர்க்கவும்.அரைத்த விழுது சேர்க்கவும்.
நன்கு பச்சை வாடை போக வதக்கவும்.
வேக வைத்த கிழங்கு சேர்த்து பிரட்டவும்.
கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் தெளித்து பிரட்டி சிம்மில் வைத்து மசாலா கிழங்கில் ஒட்டும் வரை மூடி வைக்கவும்.

பிரட்டி விட்டு அடுப்பை அணைக்கவும்.
நறுக்கிய மல்லி இலை தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.
சுவையான சேனை சாப்ஸ் ரெடி,
இது ப்லைன் சாதம்,வெரைட்டி ரைஸ், சப்பாத்தியுடன் பரிமாறலாம்.