Monday, April 13, 2015

பலதானிய சிரட்டை புட்டு & கொழுக்கட்டை / Multigrain Chirattai Puttu & Kozhukattai


தேங்காய் துருவி விட்டு அந்த சிரட்டையில் வைத்து புட்டு அவித்து பரிமாறியது வழக்கத்தில் இருந்தது. தற்காலம் சிரட்டை மாதிரியே புட்டு அவிக்க மூடி போட்ட கிண்ணம் வந்திருக்கிறது. பொதுவாக நாம் எல்லோரும் அரிசி மாவு புட்டு, கோதுமைப்புட்டு, ராகிப் புட்டு  தான் சாதாரணமாக அவிப்போம், இப்ப மார்க்கெட்டில் மல்டிகிரைன் மாவு ரெடிமேடாகவே கிடைக்கிறது. அதை வாங்கி புட்டு அவித்துப் பார்த்தேன் சூப்பராக இருந்தது.
அதில் கொழுக்கட்டையும் அவிக்கலாம். இரண்டுமே சூப்பர், காலை இரவு டிஃபனுக்கு ஏற்றது.


இது தான் சிரட்டைப் புட்டு செய்யும் புட்டுக் கிண்ணம்.


தேவையான பொருட்கள்;
மல்டிகிரைன் புட்டு மாவு - 1 கப்
நெய் - 1 - 2 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2 - 4  டேபிள்ஸ்பூன்
தேவைக்கு தண்ணீர்,உப்பு .
செய்முறை:

 மாவில் தேவைக்கு உப்பு சேஎர்க்கவும். நன்கு கலந்து விடவும்.
 தேவைக்கு தண்ணீர் தெளித்து  நன்கு விரவவும். 5-10 நிமிடம் மூடி வைக்கவும்.
 அது கொஞ்சம் கட்டியும் மாவுமாக இருந்தால் மிக்ஸியில் போட்டு 3 பல்ஸ் சுற்றி எடுக்கவும்.
 பூ மாதிரி மாவு உதிரியாகிவிடும்.

 புட்டு கிண்ணத்தில் உள் தட்டு போட்டு  நெய் தடவவும்.
 மாவை நிரப்பவும். தேங்காய்த்துருவல் வைத்தும் பின்பு மாவை வைக்கலாம்.அல்லது மாவை மட்டும் வைத்து அவித்து விட்டு தேங்காய்த்துருவல் சேர்த்து பரிமாறலாம்.
 புட்டு அவிக்கும் பாத்திரம் அல்லது குக்கரில் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.ஆவி வரும் பொழுது வெயிட் போடும் இடத்தில் இந்த புட்டுக் கிண்ணத்தை வைக்கவும்.

 3-5 நிமிடத்தில் ஆவி பறக்கும் புட்டு ரெடியாகி விடும்.
 கிண்ணத்தை எடுத்து திறந்து தலை கீழாக கவிழ்த்து ஒரு தட்டில் வைத்து எடுத்தால் அழகான சத்தான சிரட்டை புட்டு ரெடி.


 


 சிரட்டை புட்டுவை பழம், பயறு, பப்படத்துடன் பரிமாறலாம்.பழத்துடன் சீனி சேர்த்து பிசைந்தும் சாப்பிடலாம் அல்லது பயறு பப்படம் கலந்தும் சாப்பிடலாம்.


கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள்;
மாவு - 1 கப்
நறுக்கிய சின்ன வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துருவல் 1 மிளகாய் சேர்த்து சுற்றியது - 2  டேபிள்ஸ்பூன்
நறுக்கிய மல்லி கருவேப்பிலை -சிறிது
உப்பு தண்ணீர் தேவைக்கு.
மேற்கூறிய அனைத்து பொருட்களும் கலந்து தண்ணீர் தெளித்து விரவி சிறித்து நேரம் வைக்கவும்.பின்பு கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி சட்டியில் வைத்து அவித்து எடுக்கவும்.



சத்தான கொழுக்கட்டை ரெடி.தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
இந்த மல்டிகிரைன் மாவில் மசாலா கொழுக்கட்டையும் செய்தேன்.சூப்பராக இருந்தது.
விரைவில் இந்தக் குறிப்பை பகிர்கிறேன்.

2 comments:

ராமலக்ஷ்மி said...

அருமையான குறிப்புகள் ஆசியா. மிக்க நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

சத்துள்ள குறிப்பு... நன்றிங்க...