Wednesday, May 6, 2015

செட்டிநாடு கோழிக் குழம்பு / Chettinad chicken kuzhambu


தேவையான பொருட்கள்;
சிக்கன் - 1 மீடியம் சைஸ்
இஞ்சி பூண்டு விழுது  - 2 +1 (குவியலாக)
மீடியம் சைஸ் வெங்காயம் - 2
மீடியம் சைஸ் தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2 (விரும்பினால்)
மல்லி கருவேப்பிலை - சிறிது.
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
நல்ல எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

வறுத்துப் பொடிக்க;
முழு மல்லி - 1டேபிள்ஸ்பூன்
சீரகம், சோம்பு, மிளகு - தலா 1 டீஸ்பூன்
கல்பாசிப்பூ - 1 ( பேப்பர் கசக்கியது போல் வெள்ளையும் கருப்புமாக இருக்கும்)
நட்சத்திர மொக்கு - சிறியது 1
மிளகாய் வற்றல் - 4 பெரியது
ஏலம் - 2, கிராம்பு - 4, பட்டை - ஒரு துண்டு

வெறும் வாணலியில் மணம் வரும் படி வறுத்து ஆற வைத்து பொடித்துக் கொள்ளவும்.முழுமல்லி,வற்றல் அளவு  சுவைக்கு தக்க வேண்டுமானால் கூட்டிக் கொள்ளலாம்.

அரைக்க:
தேங்காய் அரை கப் + முந்திரி பருப்பு - 5 அல்லது கசகசா 2 டீஸ்பூன்,தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். கசகசா கிடைக்காதவங்க முந்திரி பருப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
செய்முறை:
சிக்கனுடன்  அரைடீஸ்பூன் மஞ்சள் தூள் , ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு , தயிர் 1 டேபிள்ஸ்பூன்,தேவைக்கு சிறிது உப்பு  சேர்த்து விரவி வைக்கவும். 
நறுக்க வேண்டியவற்றை தயார் செய்து கொள்ளவும்.
மசாலா வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். இத்துடன் தேங்காய் கசகசா சேர்த்து வறுத்து அரைத்துப் போடலாம்.நான் தேங்காய் கசகசா தனியாக அரைத்துக் கொண்டேன்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சூடு செய்யவும். சோம்பு அரைடீஸ்பூன் ,கருவேப்பிலை சேர்க்கவும்.வெங்காயம் சேர்த்து நன்கு சிவற வதக்கவும்.விரும்பினால் பட்டி கிராம்பு கல்பாசி தாளிக்கவும் சேர்க்கலாம்.நான் வறுத்துப் பொடித்ததால்  தாளிக்க சேர்க்கவில்லை.
வெங்காயம் இஞ்சி பூண்டு வதங்கிய பின்பு தக்காளி ,மிளகாய் சேர்த்து உப்பு சேர்த்து வதங்க விடவும்.
விரவி வைத்த சிக்கன் சேர்க்கவும்.
நன்கு பிரட்டி விடவும். வெங்காயம்,இஞ்சி பூண்டு  தக்காளி ,சிக்கன் எல்லாம் ஒன்று சேர வேண்டும்.
வறுத்துப் பொடித்த மசாலா சேர்க்கவும்.நன்கு பிரட்டி விடவும். ஒரு கப் தண்ணீர் சேர்த்து மூடி வேக விடவும். குழம்பு கொதிக்கும் பொழுது வீடே மணக்கும்.
வெந்து இப்படி காணப்படும்.
அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும். தேவைக்கு சிறிது தண்ணீர் சேர்த்து உப்பும் சரி பார்த்து நன்கு கொதிக்க விடவும்.

நன்கு கொதிக்கும் பொழுது அடுப்பைக் குறைக்கவும். சிறிது மூடி போடவும்.தேங்காய் வாடை மடங்க வேண்டும்.
எண்ணெய் மேலே வரும். நறுக்கிய மல்லி கருவேப்பிலை சேர்க்கவும்.
அடுப்பை அணைக்கவும்.
சுவையான கமகமக்கும் செட்டிநாடு சிக்கன் குழம்பு ரெடி. வறுத்து செய்தால் அதன் மணமும் ருசியும் தனிதான்.
சூடாக சாதம், இடியாப்பம்,இட்லி,தோசை,ஆப்பத்துடன் பரிமாறலாம்.
இக்குழம்பை சாதம்,ரசம்,மோர்,கீரைக்கூட்டு , அப்பளம், கோழிவறுவலுடன்  பரிமாறியிருக்கேன்.
இக்குறிப்பு ட்ராஃப்டில்  இருந்தது,சமைத்தவுடன் படத்தை மட்டும் அப்லோட் செய்து ட்ராஃப்டில் வைத்து விடுவேன்.நேரம் கிடைக்கும் செய்முறை எழுதி போஸ்ட் செய்வது தான் என் வழக்கம். இப்பொழுது தான் பகிர முடிந்தது. பொதுவாக நான் செய்தவுடன் இங்கே பகிர்ந்து விடுவேன் இல்லையெனில் சில சமயம் என்ன என்ன பொருட்கள் சேர்த்து செய்தேன் என்று எனக்கே மறந்து விடும். எப்பொழுதும் எங்க ஊர் மசாலாவில் சமைப்பேன்,ஒரு நேரம் மாற்றமாக இப்படியும் செய்வதுண்டு. நீங்களும் செய்து பாருங்க,இது என் ஸ்டைல்.