Monday, May 4, 2015

கோங்கூரா சிக்கன் / Gongura Chicken

தேவையான பொருட்கள்:
சிக்கன் - 300 கிராம் (அரைக்கிலோ கூட உபயோகிக்கலாம், காரம் மட்டும் அதற்குத்தக்க கூட்டிக் கொள்ளவும்)
புளிச்சக்கீரை / கோங்குரா  - 1 கட்டு
பெரிய வெங்காயம் - 1+1 
பச்சை மிளகாய் - 4
இஞ்சி பூண்டு நறுக்கியது - தலா 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் குவியலாக
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள். சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
எண்ணெய் - 2 + 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

செய்முறை:
கீரையை நன்றாக மண் போக அலசிக் கொள்ளவும். பின்பு இலையின் காம்பை நறுக்கி எடுத்து கீரையை மட்டும் உபயோகிக்கவும்.
முதலில் கீரையை வதக்கி அரைக்க வேண்டும்.
வதக்கத் தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன் விட்டு,இஞ்சி,பூண்டு,பச்சை மிளகாய் வெங்காயம் போட்டு வதக்கவும்.
அத்துடன் சுத்தம் ஆய்ந்த கீரையை சேர்க்கவும்.
சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.இது வெண்டைக்காய் மாதிரியே கொஞ்சம் கொழ கொழன்னு வரும்.கீரை நல்ல புளிப்பாக இருக்கும்.
நன்கு வதக்கி ஆற வைக்கவும்.

மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
அரைத்ததை தனியாக எடுத்து வைக்கவும்.
இனி சிக்கன் தயார் செய்ய வேண்டும்.அதற்கு ஒரு வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சூடு செய்யவும்.

வெங்காயம் சேர்த்து சிவற வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.
மஞ்சள் தூள் சேர்க்கவும்.பிரட்டி விடவும்.
சிக்கன் சேர்த்து மீண்டும் பிரட்டி வதக்கவும்.
மிளகாய்த்தூள், சீரகத்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள் சேர்க்கவும்.
பிரட்டி விடவும். சிக்கன் சுவைக்கு  உப்பு சேர்க்கவும்.

அரை கப் தண்ணீர் சேர்த்து சிக்கனை மூடி வேக விடவும்.
சிக்கன் வெந்த பின்பு தயார் செய்த கோங்குரா விழுதை சேர்க்கவும்.

ஒரு சேர கலந்து விடவும்.நன்கு பிரட்டி விடவும்.நல்ல கொதித்து சிக்கனும் கீரை விழுதும் சேர வேண்டும். கீரையே புளிக்கும், தயிரோ தக்காளியோ சேர்க்க தேவையில்லை. இதற்கு காரம்,உப்பு சிறிது அதிகமாகத் தேவைப்படும்.
விரும்பினால் பொடியாக நறுக்கிய மல்லி இலை சேர்த்து பிரட்டி அடுப்பை அணைக்கவும்.
சுவையான ஆந்திரா கோங்கூரா சிக்கன் ரெடி.
இது சாதம்,சப்பாத்தி,பரோட்டா,நாண், பிரியாணியுடன் கூட பரிமாறலாம். பருப்பு சோற்றுடன் சூப்பர். அப்படியே  வெருஞ்சோறில் பிரட்டியும் சாப்பிடலாம்.

இங்கு வாக்கிங் போகும் பொழுது கல்வாழையின் மத்தியில் ஒரு செடி தென்பட்டது. பரிச்சயமான செடியாக தெரிகிறதே என்று யோசித்துக் கொண்டு போய் விட்டேன், வரும் பொழுது ஒரு இலையை எடுத்து வந்து சுவைத்து பார்த்தால் செம புளிப்பு.ஆஹா இது புளிச்சக்கீரையாச்சென்னு
உடனே திரும்ப போய் எடுத்துட்டு வந்தேன்.
சூப்பர் சுவை.இதே மாதிரி நீங்க மட்டன், பனீர்,முட்டை சேர்த்தும் செய்து பார்க்கலாம். இன்னும் நான் அரைத்த விழுதில் மீதி  இருக்கு.
முட்டை அல்லது பனீர் சேர்த்து செய்து பார்க்க வேண்டும்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

படங்களுடன் விளக்கம் அருமை... நன்றி...