Friday, June 5, 2015

சிறப்பு விருந்தினர் பகிர்வு -26 / திருமதி நிஷா காஜா / ஸ்டஃப்ட் கோவைக்காய் மசாலா / Guest Post -26 / Stuffed Ivy gourd Masala

இன்றைய சிறப்பு விருந்தினர்.திருமதி நிஷா காஜா, இவர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். அன்பான குடும்பத்தலைவி. கணவர் காஜா அப்துல்லா ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இரண்டு மகன்கள் என்ற இனிமையான குடும்பம். 
தன்னுடைய பொழுதுபோக்காக  தையல், வீடு மற்றும் தோட்டத்தை மிக அழகாக பராமரிப்பது  மற்றும் இவருக்கு யோகாவில் அதீத ஆர்வம் என்கிறார். 
நிஷா அக்காவிடம் எனக்கு பிடித்தது, பரந்த மனப்பான்மையுடையவர், கடின உழைப்பாளி, எது செய்தாலும் புதுமையாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர்.

இவர் இன்று நம்முடன் பகிரவிருக்கும் குறிப்பு  மைக்ரோவேவில் சுலபமாகச் செய்யக் கூடிய ஸ்டஃப்ட் கோவைக்காய் மசாலா. வீட்டில் இருக்கும் பொருளை வைத்து சில நிமிடத்தில் செய்து அசத்தக் கூடிய குறிப்பு.
மைக்ரோவேவில் தான் செய்ய வேண்டும் என்றில்லை. அடுப்பிலும் செய்யலாம்.



தேவையான பொருட்கள்;



கோவைக்காய் - கால் கிலோ
வீட்டில் இருக்கும் இட்லி மிளகாய்ப்பொடி - தேவைக்கு.
நல்ல எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
புளித்தண்ணீர் - 50 மில்லி
உப்பு - சிறிது தேவைக்கு.
செய்முறை:
 அவர் தோட்டத்தில் விளைந்த கோவைக்காய் வைத்து செய்திருப்பதாக தெரிவிக்கிறார்.






முதலில் கோவைக்காயை நன்கு அலசி கீழே தொடுப்பு இருக்குமாறு மேலிருந்து நான்காக கீறிக் கொள்ளவும்.
கீறிய காயில்  இட்லி மிளகாய்ப்பொடியை எடுத்து வைக்கவும்.இப்படியே எல்லாக்காயிலும் நிரப்பிக் கொள்ளவும்.
ஒரு மைக்ரோவேவ் பவுலில் எண்ணெய் விடவும். ஸ்டஃப்ட்  செய்த கோவைக்காயை போடவும்.
2 நிமிடம் மைக்ரோவேவில் வைத்து  எடுக்கவும்.
பின்பு புளித்தண்ணீர் தேவைக்கு சிறிது உப்பு சேர்க்கவும்.
மீண்டும் 2 நிமிடம் மைக்ரோவேவ் செய்து எடுக்கவும்.
சுலபமாக செய்யக் கூடிய சுவையான மைக்ரோவேவ் ஸ்டஃப்ட் கோவைக்காய் மசாலா  ரெடி. 
இதனை சூடான சாதத்துடன் பரிமாறலாம். செமையாக இருக்கும். உடன் பொரித்த பப்படம் இருந்தால் கூட போதும்.பிடித்திருந்தால் செய்து பாருங்க. இதே முறையில் உங்களுக்கு பிடித்த மசாலா ஸ்டஃப் செய்தும் செய்து பார்க்கலாம்.

அக்கா இந்தக் குறிப்பை என்னிடம் வாட்ஸ் அப்பில் பகிர்ந்திருந்தார், நான் இதனை சிறப்பு விருந்தினர் பகிர்வில் சேர்த்து விட்டேன். பகிர்விற்கு மிக்க மகிழ்ச்சி.மனமார்ந்த நன்றி அக்கா.
மீண்டும் ஒரு இனிய சிறப்பு விருந்தினர் பகிர்வில் சந்திப்போம்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

கோவைக்காயை இன்று வீட்டில் வேறுவிதமாக செய்து இருந்தார்கள்...

நன்றி...