Monday, July 20, 2015

மட்டன் உலர்த்தியது / Mutton Ularthiyathu / Mutton Chukka / Beef Ularthiyathu


தேவையான பொருட்கள்;
வேக வைக்க:
போன்லெஸ் மட்டன் - அரைக்கிலோ
மஞ்சள் தூள் - கால் - அரை டீஸ்பூன் 
மல்லித்தூள்  - 1 டீஸ்பூன் 
(விரும்பினால் மிள்காய்த்தூள் - அரைடீஸ்பூன், சீரகத்தூள் -அரைடீஸ்பூன், கரம் மசாலா - கால் டீஸ்பூன் சேர்க்கலாம்.)
கருவேப்பிலை - 1 இணுக்கு
இஞ்சி பூண்டு பேஸ்ட் குவியலாக - 1 - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் கீறியது - 2
உப்பு - தேவைக்கு.
தாளித்து உலர்த்த :
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் அல்லது ரீபைண்ட் ஆயில்
கடுகு - அரை - 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் நறுக்கியது - 100 கிராம்
நறுக்கிய இஞ்சி - 2 டீஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய் - 1
கருவேப்பிலை - 1 இணுக்கு
கொரகொரப்பாக பொடித்த மிளகுத்தூள் - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கு.
(விரும்பினால் தேங்காய் நறுக்கியது அல்லது துருவியது)


செய்முறை:
மட்டன் துண்டுகளை சுத்தம் செய்து நன்கு அலசி தண்ணீர் வடித்துக் கொள்ளவும். அத்துடன் மேற்சொன்ன பொருட்கள் சேர்த்து விரவி கால் மணி நேரம் வைக்கவும்.

குக்கரில் எடுத்து வைத்து அரை கப் தண்ணீர் சேர்த்து 5 விசில் மீடியம் ப்லேமில் அல்லது நன்கு வேக விட்டு எடுக்கவும்.
வெந்த பின்பு இப்படியிருக்கும். தண்ணீர் ஊறியிருந்தால் வற்ற வைக்கவும்.
மட்டனை உலர்த்த தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விடவும். எண்ணெய் சூடானவுடன் விரும்பினால் கடுகு அரை டீஸ்பூன் சேர்க்கலாம். பச்சை மிளகாய் ,இஞ்சி சேர்க்கவும்.
வதக்கவும்.
நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து நன்கு பிரட்டி விடவும் .சிறிது தேவைக்கு உப்பு சேர்க்கவும்.விரைவில் வெங்காயம் வதங்கி விடும்.
வேக வைத்த மட்டன் சேர்க்கவும்.
நன்கு சுருள வதக்கவும்.
மிளகுத்தூள் சேர்க்கவும்.நன்கு பிரட்டவும்.

நறுக்கிய மல்லியிலை அலங்கரித்து பரிமாறவும்.

சுவையான மட்டன் உலர்த்தியது ரெடி.

ப்லைன் ரைஸ் ,கட்டிப்பருப்பு,ரசம் உடன் பரிமாறலாம் அல்லது விருந்தின் போது இதனையும் ஒரு வகையாக செய்து அசத்தலாம்.
இதே முறையில் பீஃப் -இல் கூட முயற்சிக்கலாம்.


1 comment:

பரிவை சே.குமார் said...

மட்டன் செய்து பார்க்கலாம் அக்கா..