Friday, November 6, 2015

சிறப்பு விருந்தினர் பகிர்வு -28 -திருமதி. சண்முகவடிவு - ஆரோக்கிய உணவுகள் பற்றிய பகிர்வு - Healthy Foods - Guest Post by Mrs. Shanmugavadivu

இன்றைய சிறப்பு விருந்தினர்,திருமதி சண்முக வடிவு, கோவையைச் சேர்ந்தவர். முகநூல் மூலம் இவருடன் எனக்கு நட்பு ஏற்பட்டது.
இவர் ஆரோக்கிய உணவு மேசை (மெனு டேபிள்) படங்களை அன்றாடம் இவர் மேசையில் பரிமாறியதை  மங்கை முகநூல் பக்கத்தில் பகிர்ந்து வந்தார். அதனில் ஈர்க்கப்பட்ட நான் அவரின் அனுமதி பெற்று படங்களை சேமித்து வந்தேன். சண்முகவடிவு அக்காவிடம்  சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து கொள்ள முடியுமா என்று கேட்டேன். அவர்களும் நேரம் கிடைக்கும் பொழுது கலந்து கொள்கிறேன் என்றார்கள். சொன்னபடி இந்த வாரம் சம்மதம் தெரிவித்தார்கள்.
திருமதி சண்முக வடிவு அவர்களின் பகிர்வு இதோ! 
 முகநூலில் நாங்கள் ஒரு சிலர் கடைப் பிடிக்கும் ஆரோக்கிய உணவு வகைகள் பற்றிப் பதிவுகள் /பகிர்வுகள் போட்டுக் கொண்டு வருகிறோம் . அது யாரையும் அவர்களின் உணவுப் பழக்கங்களைக் கேலி செய்யவோ அல்லது எங்களின் உணவு வகைகளைப் பறை சாற்றிக் கொள்ளவோ நிச்சயமாக இல்லை . எதையும் எதிர்த்தோ அல்லது ஆதரித்தோ செய்யும் பிரச்சாரமும் அல்ல . பகிர்வுகள் மட்டுமே . " நான் நல்லா இருக்கேன் வா நீயும் நல்லா இருக்கலாம் "என்று சொல்வதுதான் அது

அதே போல இந்த ஆரோக்கிய உணவு வகைகள் மிகவும் விலை உயர்ந்தவைகள் என்ற ஒரு தவறான கருத்தும் நிறையப் பேரின் மனதில் இருக்கிறது . கம்பு ராகி சோளம் போன்ற தானிய வகைகள் ,கீரைகள் மற்றும் அந்தந்தப் பருவத்தில் அதிகம் விளையக் கூடிய காய் மற்றும் பழவகைகள் இவையெல்லாம் விலை அதிகம் என்றோ கட்டுப்படி ஆகாது என்றோ ஒரேயடியாக சொல்லிவிட முடியாது.

(இதோ சண்முக வடிவு அக்கா பகிர்ந்த ஆரோக்கிய உணவு மேசைப்படங்களை இங்கே ஸ்லைட் ஷோவாக பகிர்ந்திருக்கிறேன். எத்தனை நேர்த்தியாக பரிமாறி படம் எடுத்து இருக்கிறார்கள். இதைப்பார்த்தால் யாருக்குத்தான் ஆசை வராது. நமக்கெல்லாம் இப்படி யாராவது பரிமாறினால் மிக்க மகிழ்ச்சி தான் இல்லையா? )
smile emotஇந்த ஆரோக்கிய உணவு வகைகள் மிகவும் விலை உயர்ந்தவைகள் என்ற ஒரு தவறான கருத்தும் நிறையப் பேரின் மனதில் இருக்கிறது . கம்பு ராகி சோளம் போன்ற தானிய வகைகள் ,கீரைகள் மற்றும் அந்தந்தப் பருவத்தில் அதிகம் விளையக் கூடிய காய் மற்றும் பழவகைகள் இவையெல்லாம் விலை அதிகம் என்றோ கட்டுப்படி ஆகாது என்றோ ஒரேயடியாக சொல்லிவிட முடியாது . காப்பி, டீ ,ஹார்லிக்ஸ் ,பூஸ்ட் போன்ற பானங்களை விட ராகிக் கூழுக்கும் கம்பங்கூழுக்கும் அதிகம் செலவாகப் போவது இல்லை . ஹோட்டலில் சாப்பிடும் சிக்கன் சூப்பை விடக் கொள்ளு ரசத்திற்குக் கூடுதல் செலவில்லை . கோக் பெப்சியை விட இளநீர் எல்லாவிதத்திலும் உடம்புக்கு நல்லது . பட்டை தீட்டிப் பாலீஷ் போட்ட அரிசியை விட மட்டை அரிசி விலை குறைவுதான் . 

கத்தாழையும் கற்பூர வல்லியும் கிள்ளி வைத்தாலே தழைக்கும் . மணிப்ப்ளேண்ட் செடியோடு ஒரு பசலைக் கீரைக் கொடியையும் படர விடலாம் ...! வீட்டிலே, தொட்டியிலே ,மொட்டை மாடியிலே என்று கிடைத்த இடத்தில் முடிந்த அளவுக்கு காயும் கீரையும் விளைவிப்பவர்கள் உண்டு . மருத்துவருக்குக் கொடுக்கும் பணத்தைக் காய்கறியும் பழங்களும் வாங்க செலவு செய்வோமே.

நம் அடுக்களையில் இருக்கும் அஞ்சரைப் பெட்டிக்குள்ளேயே நம் நலம் காக்கும் அத்தனை ஆரோக்கியப் பொருட்களும்..இருக்கின்றன .
உடல் உள் உறுப்புக்கள் சீராக இயங்கச் செய்ய... சீர்+ அகம்- சீரகம்,
புற்று நோய்க் கிருமிகளை எதிர்க்கவும், நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டவும் ..மஞ்சள்
பித்தத்தை சரியாக்கவும், வாயுத்தொல்லை நீக்கவும்... சுக்கு,
உணவில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்கவும், உணவை செரிக்க வைக்கவும்.... மிளகு,
கெட்ட கொழுப்பைக் கரைக்கக்... கடுகு,
வாத பித்த கப நிலைகளைச் சீர்ப் படுத்த ..மல்லி
என சமையலில் நாம் சேர்க்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன.. 

உணவின் சுவை கூட்ட மட்டுமல்ல இவை எல்லாம். நம் நலம் காக்கவும் தான் எனும் விழிப்புணர்வோடு நம் சமையல் அமையட்டும். 

ஆரோக்கியத்துக்காகச் செலவழிப்பது பணமானாலும் நேரமானாலும் அது விலை மதிப்பில்லாத ஒரு சேமிப்புத்தான் . இன்றைய தேதியில் இரத்தக் கொதிப்பும் சர்க்கரையும் இல்லாத நடுத்தர வயதினர் மிகவும் குறைவு . சரியான உணவுப் பழக்கம் ,முறையான உடற்பயிற்சி , நல்ல ஆரோக்கியமான எண்ணங்கள் மற்றும் செயல்கள் இவை நமக்கு நலமாக வாழ உதவி செய்யும் . 
இந்தப் பதிவுகள் போட ஆரம்பித்த பிறகு இன்பாக்ஸில் வந்து குறிப்புக்கள் கேட்டவர் அநேகம் பேர் . தினமும் இதேபோல சமைக்க முடியவில்லை என்றாலும் குறைந்தது வாரம் ஒரு மூன்று வேளைக்காவது செய்யலாமே . யாராவது செய்து கொடுத்தால் சாப்பிடலாம்தான் நம்மால் எங்கே முடிகிறது என்று நினைக்காமல் நாமே செய்து பார்க்க முயற்சிக்கலாமே
இட்லி ,தோசை ,பிரியாணி என்று எதையும் உண்ணலாம் ,அவை ஜீரணிக்கும் அளவுக்கு நாம் வேலை செய்தால்.

பிஜ்ஜா பர்கர் KFC உணவு வகைகள் போன்ற  வகைகளை முடிந்த வரை தவிர்ப்போமே . நம் இளைய தலைமுறைக்கு எது healthy எது unhealthy என்று சொல்லிக் கொடுத்து வளர்ப்போமே. 
நல்லவை நினைப்போம்!
நல்லவை செய்வோம்! 
நன்றாய் இருப்போம்! 

ஒரு எளிய சமையற்குறிப்பு :
ராகி சேவை இட்லி செய்முறை:

**********************************
ராகி சேவையைத் தண்ணீரில் நனைத்து, 
அதோடு தோசை மாவோ அல்லது இரண்டு ஸ்பூன் தயிரோ சேர்த்து, கொஞ்சம் உப்பு சேர்த்துப் பிசறி .. 
எண்ணெய் தடவிய இட்லித் தட்டில் வேக வைத்து எடுத்தால்,
(
அதிலே கொஞ்சம் வெங்காயம் கறிவேப்பிலையை வதக்கிக் கொட்டிக் கலக்கினால் இன்னும் கூடுதல் சுவை) 
ராகி சேவை இட்லி தயார்.
இதே போல எல்லா தானிய சேவைகளிலும் செய்யலாம்..
எளிதான செய்முறை....
வித்தியாசமான சுவை.. 
என்னதான் பழங்கள், காய்கறிகள், கீரைகள், மீன், முட்டை, சிறுதானியங்கள் என ஆரோக்கியமான உணவு வகைகளை நாம் எடுத்துக்கொண்டாலும்... அவை நன்கு செரித்து உடலுக்கு ஊட்டம் தரும் வகையிலே நம் உடல் உழைப்பும் இருத்தல் மிக முக்கியம்.
அவரவரின் உடல்நிலை, வயது இதற்குத் தகுந்த மாதிரி உடற்பயிற்சி, நடைப்பயிற்சி யோகா என எதாவது பயிற்சிகளைத் தினமும் செய்வது மிகவும் அவசியம்.
முறையான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு முறை , சரியான ஓய்வு மற்றும் நேர்மறை எண்ணங்கள் நிறைந்த மனது.. இவை அனைத்தும் சரியான விகிதத்தில் இருந்தால் நமது ஆரோக்கியம் மேம்படும்.
அப்படி இல்லாமல், " நான் பழமும் காயுமாத்தானே சாப்பிடறேன்.. உடற்பயிற்சி எல்லாம் எதுக்கு...?" என்ற எண்ணம் இருந்தால் மாற்றிக் கொள்வோம்.
"
குந்தித் தின்றால் தொந்தி மட்டுமே முந்தி முந்தி வளரும்..
ஓடி ஓடி இளைத்தால்.. ஓல்டு ட்ரஸ்ஸெல்லாம் ஃபிட் ஆகும்" சரிதானே? 

நிறையக் காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் சிறுதானிய உணவு வகைகளை உண்ணுதல்,கூடவே தேவையான உடற்பயிற்சிகளையும் செய்தல்...., இவை உடலின் தேவையற்ற கொழுப்புக்களைக் கரைத்து, உள்ளே இருக்கும் கசடுகளை வெளியேற்றி, ஆரோக்கியமான முறையில் உடல் எடை குறைந்து நலமாய் வாழ வழி வகுக்கும்.. அளவாய், ஆரோக்கியமான உணவாய் உண்போம்.. நம் நலம் பேணுவோம்!

பாருங்களேன்... இனிமே எல்லோரும் எங்க வீட்டிலே லேட்டஸ்ட் மாடல் ப்ரிட்ஜாக்கும்.. பெரிய்ய்ய காராக்கும்னு புத்தம் புது ஐ போனாக்கும்னு சொல்லிக்கிட்டா, யாரும் பெரிசாக் கண்டுக்க மாட்டாங்க.. 
ஆனா, என்னோட வீட்டுத் தோட்டத்திலே காயும் பழமும் கீரையுமா விளைஞ்சிருக்குன்னு சொன்னோம்னா, கண்டிப்பா லேசா ஏக்கத்தோட நம்மைப். பார்ப்பாங்க... 
பெருமையா... சந்தோஷமா.... கர்வத்தோட சொல்லிக்கலாம் இது நான் விளைவிச்ச காய்கறிகள்னு. 
smile emoticon


விளைநிலங்கள் எல்லாம் விலைநிலங்களாய் மாறிக் கொண்டிருக்கும் சூழலில்.. ஆங்காங்கே காணக் கிடைக்கும் பசுமையான தோட்டங்கள் மாபெரும் ஆறுதல்.

ஆனால்.. இவற்றை மனதார ரசித்துக் கொண்டிருக்கும்போதே.. என்னென்னவோ எண்ணங்கள்.

இதே பசுமை இன்னும் பத்துப் பதினைந்து வருடங்கள் கழித்தும் இருக்குமா? இல்லை இவற்றிலும் கட்டிடங்கள் முளைத்து நிற்குமா? 

இந்த விவசாயக் குடும்பத்தின் வாரிசுகள் எல்லோருமே வேறு வேலை தேடி சென்று கொண்டிருக்கும் நிலையில்.. இந்தத் தொழில் இன்னும் எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்கும்?

ஏன் எந்த அரசுமே இந்த விவசாயிகளைக் கண்டு கொள்வதில்லை?
உழவர் சந்தை என்ற ஒன்றை ஆரம்பித்ததன் நோக்கமே.. விவசாயிகள் அவர்களின் உற்பத்திப் பொருட்களை நேரடியாக மக்களிடம் விற்று, சிறிதளவேனும் லாபம் ஈட்டவும், நுகர்வோருக்கு நியாயமான விலையில் உணவுப் பொருட்கள் கிடைக்கவும்தானே?

ஆனால்.. இன்று உழவர் சந்தையில் வியாபாரம் செய்பவரில் எத்தனை பேர் விவசாயிகள்? 90% வியாபாரிகள் தானே?
அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் ஏன் இல்லை? அவரவரின் சுயலாபம் மட்டுமே குறிக்கோளாய்ப் போனது ஏன்?
இதெல்லாம் எங்கே போய் நிற்கும்..? விவசாயி என்ன ஆவான்? அதில் கல் நடப் படுமா நெல் நடப் படுமா என வேதனையான மனதோடு, தாக்குப் பிடிக்க முடியாத சூழலில் நிலத்தை விற்க வேண்டிய அவலம். இனி வரும் காலங்களில்
உணவுக்கு எங்கே போவது? .....
இன்னும் ....இன்னும் எத்தனை எத்தனையோ யோசனைகள்...
பின்னாளில், விவசாயம் என்பது லாபமீட்டும் தொழிலாக மாறும் என்பதில் ஐயமில்லை...
ஆனால் அதன் பலன் யாருக்குப் போய்ச் சேரும் .... ???? frown emoticon


இப்போது இல்லையென்றாலும்....
இனி வரும் காலத்தில்.. 
விவசாயம் என்பது, மிகுந்த மரியாதைக்குரிய மற்றும் அதிக பட்ச லாபமீட்டும் தொழிலாக மாறப்போவது சர்வ நிச்சயம்.


திருமதி.சண்முக வடிவு அவர்கள் என் அழைப்பையேற்று  சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து கொண்டு கண்ணியப்படுத்தி தன்னுடைய கருத்துக்களைத் தெரிவித்தமைக்கு மனமார்ந்த நன்றி, மகிழ்ச்சி.பாராட்டுக்கள், நல்வாழ்த்துக்கள் அக்கா.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

3 comments:

கோமதி அரசு said...

மிக மிக அருமை. படங்கள், பகிர்ந்து கொண்ட செய்திகள் அனைத்தும் அருமை. உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

Shamee S said...

பயனுள்ள கட்டுரை...
சுவைக்கு சாப்பிடும் எதிலும் சத்து இல்லை என்பது உண்மைதான் போல.
இருவருக்கும் வாழ்த்துக்கள்..

Jaleela Kamal said...

மிக மிக அருமையான பகிர்வு ஆசியா, உங்களுக்கும் ஷன்முக வடிவுக்கும் வாழ்த்துக்கள்