Friday, December 25, 2015

சிறப்பு விருந்தினர் பகிர்வு - 31- திருமதி பாத்திமா இப்ராஹிம் - நர்கிஸ் கோஃப்தாவும் கிரிஸ்பி உன்னியப்பமும் / Guest Post 31 - Mrs. Fathima Ibrahim / Nargis Kofta and Crispy Unniappam

இன்றைய சிறப்பு விருந்தினர் திருமதி.பாத்திமா இப்ராஹிம் நெல்லையில் பிறந்து, பெங்களூருவில் வளர்ந்தவர், தற்சமயம் கணவரின் பணி நிமித்தமாக கொச்சியில் வசித்து வருகிறார். அன்பான கணவர், மாமியார், இனிமையான மகள்கள்  என்ற அழகான குடும்பம்.
இவர்  சமையலில் தனக்கு அதிக ஊக்கம் கொடுத்தவர்களாக தன்னுடைய அம்மாவையும், மாமியாரையும் குறிப்பிடுகிறார். சமையல் தவிர தையலிலும் அவருக்கு ஆர்வம் இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.
நல்வாழ்த்துக்கள் பாத்திமா.
இவர் இன்று நம்மோடு பகிரவிருக்கும் குறிப்பு நர்கிஸ் கோஃப்தா  மற்றும் கிரிஸ்பி உன்னியப்பம்.
பொதுவாக இந்த கோஃப்தா இறைச்சியில் செய்வதுண்டு. ஆனால் இவர் புதுமையாக முட்டையில் செய்து அசத்தியிருக்கிறார்.

இனி குறிப்பிற்குச் செல்வோம். 

நர்கிஸ் கோஃப்தா:

தேவையான பொருட்கள்;
வேகவைத்த முட்டை - 3
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
பொடியாக நறுக்கிய மீடியம் சைஸ் தக்காளி - 3
நறுக்கிய பச்சை மிளகாய் -1 அல்லது  2
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -ஒன்னரை டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
ப்ரெட் துண்டுகள் - 2
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
நறுக்கிய மல்லி இலை சிறிது.(அலங்கரிக்க)

செய்முறை:
தேவையான பொருட்களை நறுக்கி தயார் செய்து கொள்ளவும்.
அவித்த முட்டையை தோல் எடுத்து பாதியாக வெட்டி வைக்கவும்.
ப்ரெட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து நன்கு பிழிந்து எடுத்து வைக்கவும். அத்துடன் முட்டை மஞ்சள் கரு சிறிது வெங்காயம், நருக்கிய பச்சை மிளகாய் ,நெய்,சிறிது உப்பு  சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
ரெடி செய்த ப்ரெட் கலவையை முட்டை வெள்ளைக்கருவின் மேல் நிரப்பி பொதிந்து வைக்கவும். இதனை ஒவனை முற்சூடு செய்து 180 டிகிரில் பொன்னிறமாக   பேக் செய்து எடுக்கவும்.
இனி ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும், அடுத்து இஞ்சி பூண்டு போட்டு வதக்கியவுடன் தக்காளி, மிளகாய்த்தூள்,கரம் மசாலா சேர்த்து பிரட்டி தேவைக்கு உப்பு சேர்த்து மசிய விடவும்.அரை கப் தண்ணீர் சேர்த்து மசாலாவை நன்கு கொதிக்க விடவும்.
தயாரான மசாலாவை பேக் செய்த முட்டை கோஃப்தாவில் விட்டு மீண்டும் 10 நிமிடம் பேக் செய்யவும்.
பத்து நிமிடம் கழித்து எடுத்து மல்லி தூவி அலங்கரித்து பரிமாறவும்.
சுவையான  நர்கிஸ் கோஃப்தா ரெடி.
வித்தியாசமான முறையில் நர்கிஸ் கோஃப்தாவை  முட்டை மற்றும் ப்ரெட் வைத்து செய்து அசத்தியாச்சு. நீங்களும் செய்து பாருங்க.

இதனை நாண், ரொட்டி,பரோட்டாவுடன் பரிமாறலாம்.

அடுத்து பார்க்கப் போகும் குறிப்பு:

கிரிஸ்பி உன்னியப்பம்:

தேவையான பொருட்கள்;
அரிசி மாவு - 3 கப்
சிறிய வாழைப்பழம் - 6
 வெல்லப்பாகு - 2 கப்
காய்ந்த தேங்காய் - 1 கப் ( பொடியாக நறுக்கி பொன்னிறத்தில் வறுத்து வைக்கவும்)
ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் அல்லது நெய் - சுடுவதற்கு
செய்முறை:
தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளவும்.


அரிசி மாவுடன் வாழைப்பழம் சேர்த்து பிணைந்து ,அத்துடன் வறுத்த தேங்காய், வெல்லப்பாகையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.45 நிமிடம் மாவை மூடி வைக்கவும்.
பின்பு பனியாரச் சட்டியை சூடு செய்து நெய் அல்லது தேங்காய் எண்ணெய் விட்டு, மாவை பனியாரச் சட்டியில்  குழியில் முக்கால் அளவு விட்டு மூடி,கவனமாக  பொன்னிறாமாகச் சுட்டு எடுக்கவும்,.
ஆறிய பின்பு எடுத்துப் பரிமாறவும்.
சுவையான கிரிஸ்பி உன்னியப்பம் ரெடி.
இது கேரளாவில் பிரசித்தி பெற்ற ஸ்நாக் அயிட்டமாகும்.
நீங்களும் இம்முறையில் செய்து பாருங்க.அசத்தலாக வரும்.

இரண்டு அருமையான குறிப்புகளைப் பகிர்ந்த பாத்திமாவிற்கு நம்முடைய மனமார்ந்த மகிழ்ச்சி மற்றும் நன்றியைத் தெரிவிப்போம்.
மீண்டும் அடுத்த வாரம் நல்லதொரு சிறப்பு விருந்தினர் பகிர்வில் சந்திப்போம்.
என்றென்றும் அன்புடன்,
உங்கள் ஆசியா உமர்.

2 comments:

பரிவை சே.குமார் said...

சூப்பர் ரெஸிபி அக்கா...
வாழ்த்துக்கள்.

மனோ சாமிநாதன் said...

நர்கிஸ் கோப்ஃப்தா செய்முறை மிகவும் வித்தியாசமாக இருக்கிறது ஆசியா! விரைவில் செய்து பார்க்கிறேன். நல்லதொரு குறிப்பைக் கொடுத்ததற்கு அன்பு நன்றி!!