Sunday, May 31, 2015

கேரள கூட்டுக்கறி / Kerala Kootukari


 தேவையான பொருட்கள்;
நறுக்கிய வாழைக்காய் - 1 கப்
நறுக்கிய சேனைக்கிழங்கு - 1 கப்
நறுக்கிய கேரட் & பீன்ஸ் - 1 கப்
வேக வைத்த கொண்டைக்கடலை அல்லது கடலை பருப்பு - அரை கப்
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை - 1 டீஸ்பூன்
உப்பு தேவைக்கு.
அரைக்க: 
தேங்காய் துருவல் - 3 - 4 டேபிள்ஸ்பூன் , சீரகம் 1 டீஸ்பூன் , இரண்டு பச்சை மிளகாய்.
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு  & உ.பருப்பு - 1 டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 3, பெருங்காயம் - கால் டீஸ்பூன்,கருவேப்பிலை
நறுக்கிய சின்ன வெங்காயம்  - 3 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
 நறுக்கிய காய்கறிகள், தேவைக்கு தண்ணீர், மஜ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.
 வெந்து வரும் பொழுது மிளகுத்தூள் உப்பு சேர்க்கவும்.நன்கு ஒரு  சேர பிரட்டி   விடவும்.
 வேகவைத்த கொண்டைக்கலை சேர்க்கவும்.
 அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்.
 நன்கு பிரட்டி மசித்து விடவும்.

 தாளிக்க கடாயில்  கடுகு உளௌத்தம் பருப்பு,வற்றல், கருவேப்பிலை,பெருங்காயம் தாளிக்கவும்.
 வெங்காயம் சேர்த்து நன்கு சிவற வதக்கவும்.
 வேக வைத்து மசித்த கூட்டுக்கறியில் சேர்க்கவும். உப்பு சரி பார்க்கவும்.
 ஒரு சேர பிரட்டி விடவும்.
 சுவையான சத்தான  கேரள கூட்டுக்கறி ரெடி. 
ஓணம் சத்யா,விஷூ விருந்தில் நிச்சயம் இடம் பெறும் இந்த அசத்தலான  கூட்டுக்கறி.பிடித்திருந்தால் செய்து பாருங்க.

Friday, May 29, 2015

சிறப்பு விருந்தினர்கள் பகிர்வு - 25 திருமதி ரஃபீகா & திருமதி அஸ்மா / மதுரை ஸ்டைல் மட்டன் பிரியாணி / மட்டன் தால்ச்சா / Guest Post / Madurai Style Mutton Briyani & Mutton Dalcha

இன்றைய சிறப்பு விருந்தினர்கள் அல் ஐன் தமிழ்குடும்பத்தைச் சேர்ந்த திருமதி ராஜி வேல்முருகன், திருமதி ரஃபீகா, திருமதி அஸ்மா, திருமதி பானு, அப்புறம் நான் ஹி ஹி. என்னையும் சேர்த்துக் கொள்ளவேண்டும் தானே.நானும் தான் சேர்ந்து சமைத்து அசத்தினேன்.
இந்த சமையல் தளத்தில் நான் பகிர்ந்த குறிப்புகள் 700 எழுநூறை இன்றைய நாளில் தாண்டிவிட்டது. என்பது எனக்கு பெரிய மகிழ்ச்சி. அந்த கொண்டாட்டத்தையும்  இத்துடன் உங்களிடம் பகிர்கிறேன்.
குழந்தைகள் பள்ளி சென்ற ஒரு நாளில் நாங்கள் ஐவரும் கூடி சமைத்து அசத்துவதாய் ஒரே நாளில் தீடீரென முடிவாகியது, அது இனிதே நடந்தேறியது தான் பெரும் மகிழ்ச்சி.  என் சமையறை அன்று மிகவும் களைகட்டியது என்று தான் சொல்ல வேண்டும்.

மண் மணக்கும் மதுரையின் சமையல் கமகமக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை தானே. எனவே இன்று மதுரை சமையல். திருமதி ரஃபீகாவின் பக்குவத்தில் மதுரை இஸ்லாமிய இல்லத்தில் சமைக்கக்கூடிய  மட்டன் பிரியாணி , திருமதி அஸ்மாவின் கைபக்குவத்தில் மட்டன் தால்ச்சா, என் கைப்பக்குவத்தில் ஈசியாக  செய்யும் சிக்கன் 65, வெஜ் ரைத்தா, ப்ரெட் ஹல்வா என்று முடிவு செய்தோம்.அனைவரும் ஒரு போல் சேர்ந்து வேலை செய்தோம். காய்நறுக்குவதில் இருந்து சமைத்தது,முடிவில் பாத்திரம் கழுவியது வரை வேலைகளை பகிர்ந்து செய்தோம். இதற்கிடையில் பள்ளிக்கூடம் செல்லாத செல்லக் குழந்தைகளையும் இடை  இடையே கவனிக்க வேண்டும். காலை 11 மணிக்கு வேலை ஆரம்பித்து 2 மணிக்கு முடித்தோம். எல்லாமே மிகவும் ருசியாக அமைந்தது. சமைத்த அனைத்தையும் ஐந்தாகப் பகிர்ந்து எடுத்துக் கொண்டோம். எல்லாப் புகழும் இறைவனுக்கே !

இதோ பொருட்கள் எல்லாம் ரெடியாக இருக்கு. எல்லோரும் வந்த பின்பு சமைக்க ஆரம்பிக்க வேண்டும்.

இனி குறிப்பிற்கு செல்லலாமா?
நாங்கள் கொஞ்சம் அதிகமாக செய்தோம். நான் ஒரு கிலோ அளவிற்கு இங்கே பகிர்கிறேன். நான் பார்த்தவற்றை வைத்து அளவு பகிர்கிறேன். நீங்க உங்க டேஸ்டிற்கு செய்து பார்த்துக் கொள்ளவும்.

மதுரை மட்டன் பிரியாணி:
தேவையான பொருட்கள்;
சீரக சம்பா அரிசி - ஒரு கிலோ
ஆட்டு இறைச்சி - ஒன்னேகால் அல்லது ஒன்னரை கிலோ
பெரிய வெங்காயம் - கால் கிலோ
சின்ன வெங்காயம் - கால் கிலோ 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 4 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா பொடி - ஒன்னரை டீஸ்பூன் (ஏலம் பட்டை கிராம்புத்தூள்)
ஹோல் கரம் மசாலா - ஏலக்காய் - 3 ,கருப்பு ஏலக்காய் - 3, கிராம்பு - 5, பட்டை - 3 பெரிய துண்டு,நட்சத்திர மொக்கு - 2, அன்னாசிப்பூ - 1 ,பிரியாணி இலை - 2.ஷாகி ஜீரா - கால் டீஸ்பூன்(விரும்பினால்)
தக்காளி - கால் கிலோ
தயிர் - 400 மில்லி
மீடியம் சைஸ் எலுமிச்சைப்பழம் - 1
பச்சை மிளகாய் - 6
தேங்காய்ப்பால் - 1 கப்
மிளகாய்த்தூள் - 1 - 2 டீஸ்பூன் 
மல்லித்தூள் - 2-3 டீஸ்பூன்
மல்லி புதினா - தலா ஒரு கட்டு.
எண்ணெய் - 150 மில்லி
நெய் - 150 மில்லி.
உப்பு - தேவைக்கு.
செய்முறை:
 முதலில் இந்த பிரியாணிக்கு பெரிய வெங்காயம் நீள்வாக்கில் நறுக்கி எண்ணெய் விட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்.இது மிகவும் முக்கியம்.

அடுத்து சின்ன வெங்காயம் உரித்து மிக்ஸி ஜாரில் கொரப்பாக அரைத்து எடுத்து வைக்கவும்.

நறுக்க வேண்டியவைகளை நறுக்கி தயார் செய்து கொள்ளவும். கறியை மூன்று தண்ணீர் விட்டு அலசி தண்ணீர் வடித்து வைக்கவும். பொரித்த வெங்காயம்,இந்த சின்ன வெங்காயம் முக்கியம். 

ஹோல் கரம் மசாலா தயார் செய்து கொள்ளவும்.

 தண்ணீர் வடித்த மட்டனை ஒரு பாத்திரத்தில் எடுத்து அத்துடன், ஒன்ன்ரை - 2டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு, 200 மில்லி தயிர், 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள், உப்பு தேவைக்கு, நறுக்கிய மல்லி புதினாவில் கொஞ்சம் சேர்த்து விரவி வைக்கவும்.

அரிசியை கழைந்து தண்ணீர் இறுத்துவிட்டு ஒன்றிற்கு இரண்டு அளவு தண்ணீர் அளந்து ஊற வைக்கவும்.
இனி பிரியாணிக்கு கறி தாளிக்க வேண்டும். உங்களுக்கு நேரம் இருந்தால் நீங்க பிரியாணி செய்யப் போகும்  பாத்திரத்திலேயே தாளிக்கலாம்.இல்லையெனில் கறியை குக்கரில் தாளித்தும் வேக வைக்கலாம்.
 குக்கரில் வெங்காயம் பொரித்த எண்ணெய்,  நெய் ஊற்றிக் கொள்ளவும்.


 ஹோல் கரம் மசாலா சேர்க்கவும்.
 சிவறும் பொழுது தட்டி வைத்த சின்ன வெங்காய்த்தை சேர்க்கவும்.நன்கு மணம் வரும் படி வதக்கவும்.
 இஞ்சி பூண்டு சேர்க்கவும்.அடுப்பை குறைத்து வதக்கவும்.
 கொஞ்சம் மல்லி புதினா பச்சை மிளகாய் சேர்க்கவும்.வதக்கவும்.
 தக்காளி சேர்த்து சிறிது உப்பும் சேர்த்து நன்கு மசிய விடவும்.

 கரம் மசாலா மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
மல்லித்தூள் சேர்க்கவும்.
 நன்கு ஒரு சேர பிரட்டவும்.
 ஊறிய கறியை சேர்த்து பிரட்டி குக்கரை மூடி 3 விசில் மீடியம் ஃப்லேமில் வைத்து அடுப்பை அணைக்கவும். அரிசி ஊறிய தண்ணீர் ஒரு கப் சேர்த்து கறிய வேக வைக்க வேண்டும்.

அத்துடன் மீதி உள்ள 200 மில்லி தயிரை சேர்க்கவும்.கொதி வரட்டும்.உப்பு சரி பார்க்கவும்.
குக்கர் ஆவியடங்கியவுடன் திறக்கவும். பிரியாணி செய்யும் பெரிய அடிகனமான சட்டியில் பிரியாணிக்கு ரெடியான கறியை குக்கரில் இருந்து எடுக்கவும்.


 கறியில் தண்ணீர் ஊறியிருக்கும். ஊற வைத்த அரிசியை தண்ணீர் அளவு பார்த்து சேர்க்கவும்.
 அரிசி வெந்து மேலே வரும் பொழுது தேங்காய்ப்பால்விட்டு பிரட்டவும். எலுமிச்சப்பழம் தேவைக்கு பிழிந்து விடவும்.
 வறுத்து வைத்த வெங்காயம் சேக்கவும். இது தான் பிரியாணிக்கு அந்த அழகான நிறத்தை கொடுக்கக் கூடியது,
 நன்கு பிரட்டி விடவும்.
 மீதியுள்ள மல்லி புதினா சேர்க்கவும்.
 அடுப்பை குறைக்கவும். காட்டன் துணியை தண்ணீரில் நனைத்து நன்கு பிழிந்து முடியை கவர் செய்து பிரியாணி பாத்திரத்தை தம் போட ரெடி செய்யவும்.விரும்பினால் பாத்திரத்தின் அடியில் ,அடி பிடிக்காமல் இருக்க பழைய தோசைக்கலம் போடலாம்.மேலே ஒரு சிறிய சட்டியில் தண்ணீர் வெயிட்டிற்கு வைக்கவும்.
கால் மணி நேரம் அடுப்பைக் குறைத்து தம் போடவும்.
 மீண்டும் கால் மணி நேரம் கழித்து திறக்கவும்.
ஒரு சேர பிரட்டி எடுத்து பரிமாறவும்.
 சூப்பர் மணமும் சுவையும் மிக்க இஸ்லாமிய இல்லாத்தில் செய்யக் கூடிய மதுரை மட்டன் பிரியாணி ரெடி.

பிரியாணியுடன்   மட்டன் தால்ச்சா, வெஜ் ரைத்தா, சிக்கன் ப்ரை, அவித்த முட்டை, ஸ்வீட் உடன் பரிமாறலாம்.
பிரியாணி முறை இது தான்,சேர்க்கும் பொருட்கள் கூட்டியோ குறைத்தோ உங்க சுவைக்கு ஏற்ப சேர்த்து செய்து பாருங்க.

இனி திருமதி அஸ்மாவின் மட்டன் தால்ச்சா செய்முறை ;

தேவையான பொருட்கள்;
மட்டன் அரைக்கிலோ 
துவரம் பருப்பு - 150 கிராம்
கடலை பருப்பு - 50 கிராம்
கத்திரிக்காய் - கால் கிலோ
வாழைக்காய் - 2
நறுக்கிய சுரைக்காய் அல்லது பூசணி - ஒரு கப்
மாங்காய் - 1
தக்காளி -2
சின்ன வெங்காயம் - 150 கிராம்
கருவேப்பிலை.
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
தாளிக்க - ஏலம் பட்டை கிராம்பு சிறிது.
இஞ்சி பூண்டு 2+ 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன் அல்லது சாம்பார் பொடி
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - கால் டீஸ்பூன்
புளித்தண்ணீர் - ஒரு கப்
உப்பு - தேவைக்கு.

செய்முறை:
முதலில்  கறியை கழுவி மஞ்சள் தூள்,பாதி இஞ்சி பூண்டுசிறிது உப்பு, தேவைக்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து வெந்து எடுக்கவும்.
பின்பு தால்ச்சா ரெடி செய்ய  பருப்பு,தேவைக்கு மஞ்சள் தூள், தக்காளி,வெங்காயம், தேவைக்கு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
பாதி வெந்து வரும் வரும் ப்ழொது வாழைக்காய்,சுரைக்காய் சேர்க்கவும்.
குக்கரை மூடி இரண்டு விசில் விடவும்.


தால்ச்சா ரெடி செய்ய எண்ணெய் விட்டு தாளிக்க ஏலம் பட்டை கிராம்பு சேர்க்கவும்.
 சின்ன வெங்காயம் சேர்த்து லேசாக சிவற வதக்கவும்,இஞ்சி பூண்டு 2 டீஸ்பூன் சேர்த்து நல்ல வதக்க வேண்டும்.
வேக வைத்த கறியை சேர்க்கவும்.
 பின்பு  தான் கத்திரிக்காய் மாங்காய் சேர்க்கவேண்டும்.
 மல்லிப்பொடி சேர்க்கவும்.
 
மிளகாய்த்தூள்  சேர்க்கவும்.ஒரு சேர கொதிக்க விடவும்.கத்திரிக்காய் மாங்காய் வெந்து வரட்டும்.
 வேக வைத்த பருப்பு வாழைக்காய்,சுரைக்காய் கலவை சேர்க்கவும்.
 மூடி போட்டு ஒரு சேர வேக விடவும். சுவைக்கேற்ப் புளித்தண்ணீர் சேர்க்க வேண்டும்.தக்காளி,மாங்காய் சேர்த்திருப்பதால் பார்த்து சேர்க்கவும்.உப்பு  சரி பார்த்து சேர்க்கவும்.
 கரம் மசாலா தூள் சேர்க்கவும்.சிம்மில் வைத்து கொதிக்கட்டும்.
வெந்த பின்பு திறக்கவும்.
மண மணக்கும் மதுரை மட்டன் தால்ச்சா ரெடி,
பிரியாணியுடன் பரிமாறவும். சூப்பராக இருக்கும். செய்து பாருங்க.


அல் அய்ன் தமிழ் குடும்பத் தோழிகளுக்கு மனமார்ந்த நன்றி. அழைப்பை ஏற்று என் வீட்டிற்கு வந்து சமைத்து அசத்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி.


மீண்டும் நல்லதொரு சிறப்பு விருந்தினர் பகிர்வில் சந்திப்போம்.
அன்பார்ந்த நட்புள்ளங்கள்  முன்பு போல் கருத்திடாவிட்டாலும் பார்வையிடுவதால் என் குறிப்பு பகிர்வு இங்கே தொடர்ந்து கொண்டிருக்கிறது. என் சமையல் வலைப்பூ 700 குறிப்புகளை தாண்டி வெற்றி நடை போடுவதற்கு அன்பார்ந்த நட்புகள் உங்கள் அனைவரின் வருகையே காரணம். அனைவருக்கும் மகிழ்ச்சி கலந்த மனமார்ந்த நன்றி.

வெள்ளி தோறும் சிறப்பு விருந்தினர் பகிர்வு இங்கு கொடுத்து வருகிறேன்.இடையே தடைபட்டாலும் தொடர்ந்து தர முயற்சி செய்கிறேன்.சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள்,  குறிப்புளை அனுப்ப விபரம் அறிய இங்கே கிளிக்கவும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.