Wednesday, November 25, 2015

மீன் வடை / Fish Vadai


தேவையான பொருட்கள்;
மீன் – 400 கிராம்(சுத்தம் செய்து அலசி தண்ணீர் வடித்தது)
(மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன் தேவைக்கு உப்பு போட்டு பிரட்டிய மீனை அவித்து அல்லது சும்மா பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைத்த முள் நீக்கிய மீன் – 2 கப் வரும் 
(தண்ணீர் இல்லாமல் புட்டு மாதிரி இருக்க வேண்டும்)
முட்டை – 1
சின்ன வெங்காயம் நறுக்கியது – 1 கையளவு
நறுக்கிய பச்சை மிளகாய் – 2
நறுக்கிய மல்லி இலை – சிறிது.
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், பெருஞ்சீரகதூள்- தலா அரை டீஸ்பூன்
கரம் மசாலா – கால் டீஸ்பூன்
உப்பு – சிறிது
தவா ஃப்ரை செய்ய தேங்காய் எண்ணெய் – 3 - 4 டேபிள்ஸ்பூன் ( தவா ஃப்ரை செய்ய)

செய்முறை:
ஒரு தட்டில் உதிர்த்த மீனோடு எண்ணெய் தவிர அனைத்து பொருட்களும் சேர்த்து நன்கு கையால் விரவி கொள்ளவும்.
சிறிய உருண்டையாக பிரித்து லேசாக தட்டி வைக்கவும்.


தவாவில் எண்ணெய் சூடு செய்து தட்டிய வடையை போட்டு இருபுறமும் சிவற பொரித்து எடுக்கவும்.

மீன் வடை ரெடி.



குறிப்பு:
அவித்த மீனில் தண்ணீர் இல்லாமல் இருக்க வேண்டும், இல்லையெனில் தவாவில் பொரிக்கும் பொழுது எண்ணெய் பொங்கும். முட்டை சேர்த்து விரவினால் சிக்கென்று இருக்க வேண்டும். அப்படி லூசாகிவிட்டால் பொடித்த பொட்டுக்கலடலை மாவு சேர்த்து கலந்து சுடவும்.

Friday, November 20, 2015

சிறப்பு விருந்தினர் பகிர்வு - 29. திருமதி நிஷா சலீம் - தஞ்சாவூர் தம்ரூட் -Guest Post -Mrs.Nisha Saleem /Tanjore Dumroot

இன்றைய சிறப்பு விருந்தினர், திருமதி. நிஷா சலீம், தஞ்சாவூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அன்பான கணவர், அருமை மகன் என்ற இனிமையான குடும்பம். இவர் எனக்கு, ஐக்கிய அரபு அமீரகம், அல் ஐன் தமிழ் குடும்பம் மூலம்  அறிமுகமானவர். ஆனால் இவருக்கோ என்னை முன்பே தெரியுமாம். என்னுடைய வலைப்பூவை நீண்ட காலமாகத் தொடர்ந்து பார்வையிட்டு வருவதாகச் சொன்னார்.
கேட்பதற்கே மகிழ்ச்சியாக இருந்தது. மிக்க நன்றிமா.

இவரை ஒரு கிச்சன் கில்லாடின்னு சொல்லலாம். நிஷாவிற்கு சமையல் போட்டிகள் பலவற்றில் கலந்து கொண்டு பரிசுகளை தட்டிச் சென்ற அனுபவம்  உண்டு. இவர் ஒரு ஆல்ரவுண்டர்னு சொல்லலாம். இவருக்கு பயணம் செய்வது குறிப்பாக மிகவும்  பிடிக்குமென்கிறார்.
அல் ஐயினில் கடந்த தீபாவளி ஒன்றுகூடலின் போது  அவரிடம் தற்செயலாக அவரை  சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து கொள்ள முடியுமா என்று கேட்டேன். அவங்க  ஊர் பக்கம் எது பிரசித்தமோ அந்த ரெசிப்பியைப் பகிரலாம்னு சொன்னேன்,உடனே  ஒப்புக் கொண்டதோடல்லாமல் பெருந்தன்மையாக  தஞ்சாவூர் தம்ரூட் குறிப்பை நமக்காகச் சுவையாக செய்து அசத்தியிருக்கிறார்.
நல்வாழ்த்துக்கள் நிஷா. 
இனி தம்ரூட்  குறிப்பிற்கான பொருட்களைப் பார்ப்போம்.



தேவையான பொருட்கள்;
ரவை - 500 கிராம்
(நைசாக இருந்தால் நல்லது)
சீனி - 600 கிராம்
முட்டை - 9
(சிறியதாக இருந்தால் - 9 அல்லது மீடியம் சைஸ் என்றால் 7 எண்ணம் போதுமானது)
வெண்ணெய் -250 கிராம்
எண்ணெய் - 50 மில்லி
ஸ்வீட் கண்டென்ஸ்ட் மில்க் - 150 மில்லி
முந்திரி பருப்பு -  தேவைக்கு அலங்கரிக்க
ஏலக்காய் - 5
உப்பு - பெரிய பின்ச்.

செய்முறை:

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.



முதலில் முட்டை,சீனியை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.சீனி நன்கு கரைய வேண்டும்.அத்துடன் ரவை, கண்டென்ஸ்ட் மில்க், சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
ஏலக்காயை பொடித்து அதன் தோலை நீக்கி விட்டு பொடித்த விதையை மட்டும் சேர்க்கவும்.கலந்து விடவும்.பின்ச் உப்பும் சேர்த்து கலக்கவும்.
தம்ரூட்டிற்கான மாவுக் கலவை தயார் ஆகிவிட்டது.


பின்பு ஒரு அடிகனமான பாத்திரத்தில் பட்டர் உருக்க வேண்டும், அதனுடன்  மேற்குறிப்பிட்ட அளவு எண்ணெயும் சேர்க்கவும். சூடானவுடன் அதனில் முந்திரியை லேசாக வறுத்து எடுக்கவும்.
அதே பாத்திரத்தில்  தயார் செய்த தம்ரூட்  கலவையை விடவும்.மீடியம் நெருப்பில் வைத்து கைவிடாமல் கிளற வேண்டும்.கீர் போன்ற பதம் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.


ஒரு ஓவன் சேஃப் பவுலில் வெண்ணெய் தடவவும். அதனில் நாம் அடுப்பில் வைத்து தயார் செய்த தம்ரூட் கலவையை விடவும்.
மேலே வறுத்த முந்திரியை அழகாக எல்லா இடத்திலும் வருமாறு வைக்கவும்.
அலுமினியம் ஃபாயில் கொண்டு பவுலை கவர் செய்யவும்.

பின்பு குக்கிங் ரேஞ்ச் அல்லது அவனில் 180 டிகிரி வெப்பநிலையில் கன்வென்ஷனில் அதாவது கீழ் தட்டில் 20 நிமிடம்   மேல் தட்டில் 10  நிமிடம்  (கிரில் மோட்) வைத்து எடுக்கவும்.
கவனமாக வெளியே எடுத்து ஈரமில்லாத இடத்தில் வைக்கவும்.
ஆறிய பின்பு திறக்கவும்.
சூப்பர் மணத்துடன் சாஃப்டாக தஞ்சாவூரின் பாரம்பரிய தம்ரூட் தயார்.
விரும்பிய வடிவில் துண்டு போட்டுப் பரிமாறவும்.

கல்யாணமான புதிய மாப்பிள்ளைக்கு இப்படி ஸ்பெஷலாக செய்து தம்ரூட் பரிமாறுவார்களாம்.

ஆஹா ! கெஸ்ட் போஸ்டிற்காக நிஷா செய்த  அந்த டக்கரான தம்ரூட்டை எனக்கும் சுவைக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிரமம் பாராமல் வீட்டிற்கு எடுத்து வந்து அன்புடன் தந்தாங்க. செமையாக இருந்தது. மனமார்ந்த நன்றி, மகிழ்ச்சி.
டயட் இருந்த என்னை இந்த தம்ரூட் திரும்பி பார்க்க வைத்து விட்டது என்பது தான் உண்மை.
மீண்டும் ஒரு நல்லதொரு சிறப்பு விருந்தினர் பகிர்வில் சந்திப்போம்.
என்றென்றும் அன்புடன், 
ஆசியா உமர்.

Tuesday, November 17, 2015

காளிஃப்ளவர் சுக்கா / Cauliflower Chukka

தேவையான பொருட்கள்;-
காளிஃப்ளவர் – அரைக்கிலோ
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் – 2
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
மல்லித்தூள் – 2 டீஸ்பூன்
நறுக்கிய மல்லி இலை – ஒரு கைப்பிடி.

செய்முறை:

காளிஃப்ளவரை சிறு சிறு பூக்களாகப் பிரித்து வைக்கவும்.
கொதிக்க வைத்த நீரில் காளிஃப்ளவர், உப்பு மஞ்சள் தூள் சேர்த்து ஒரு 5 நிமிடம் மூடி வைக்கவும். பின்பு வடிகட்டி விடவும்.
ஒரு கடாயில்  எண்ணெய் சூடு செய்யவும். நறுக்கிய வெங்காயம் போட்டு சிவற விடவும். இஞ்சி பூண்டு சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.
காளிஃப்ளவர் துண்டுகள் சேர்க்கவும்.
நன்கு பிரட்டி விடவும். மேற்குறிப்பிட்ட  மசாலா பொருட்கள் மிளகாய்த்தூள், மிளகு சீரகத்தூள், மல்லித்தூள் அனைத்தும் சேர்க்கவும். பிரட்டி விட்டு சிறிது தண்ணீர் தெளிக்கவும். 
மூடி போட்டு 5 நிமிடம் வேக விடவும். அடுப்பை குறைத்து வைக்கவும். உப்பு  சேர்த்து சரி பார்க்கவும்.மசாலா வாடை நன்கு அடங்கி காளிஃப்ளவர் சுருண்டு வர வேண்டும். 
நறுக்கிய மல்லி இலை சேர்த்து பிரட்டு விடவும். அடுப்பை அணைக்கவும்.
சுவையான காளிஃப்ளவர் சுக்கா ரெடி.
இதனை பக்க உணவாகப் பயன்படுத்தலாம்.
இதனை சப்பாத்தி, ப்லைன் ரைஸ், ஃப்ரைட் ரைஸ் மற்றும் பிரியாணி வகைகளுடன் பரிமாறவும்.


Tuesday, November 10, 2015

முழுக்கோழி வறுவல் / Whole Chicken fry

முழுக்கோழி வறுவல் ஈசியாக வீட்டிலேயே செய்து விடலாம். எப்பவும்  கிரில் செய்வதுண்டு, பொரித்துப் பார்த்தேன் செமை.நீங்களும் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்;
 கோழி - 800 கிராம்
சிக்கன் 65 மசாலா - 4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
லெமன் ஜூஸ் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
பொரிக்க - தேங்காய் எண்ணெய்.
அலங்கரிக்க ~ வறுத்த கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், லெமன் ஸ்லைஸ்.

செய்முறை:
தோல் நீக்கி சுத்தம் செய்த சிக்கனை நன்கு 4 தண்ணீர் வைத்து அலசிக் கொள்ளவும். சிக்கனை அங்கங்கு கத்தியால் கோடு (கீறி  விட்டுக்)போட்டுக் கொள்ளவும்.இறுதியாக மஞ்சள் பொடி கலந்த  நீரில் அலசி நன்றாக  தண்ணீர் வடித்து வைக்கவும்.

பின்பு மேற்சொன்ன மசாலா கலந்து  சிக்கன் மீது பூசி ஊற வைக்கவும்.உப்பு சரி பார்க்கவும்.அல்லது தங்கள் விருப்பப்படி மசாலா சேர்க்கலாம்.
 ஃப்ரிட்ஜில் குறைந்தது 3-4 மணி நேரம் ஊற விடவும்.
பொரிக்க 1 மணி நேரம் முன்பு ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து வைக்கவும்.


ஒரு நான்ஸ்டிக் கடாயில் எண்ணெய் சூடு செய்யவும்.இரண்டு பக்கமும் நன்கு வெந்து வருமாறு சிவற பொரித்து எடுக்கவும்.
எண்ணெய் வடித்து எடுக்கவும்.
சிக்கனை அலங்கரித்துப் பரிமாறவும்.
பின்பு துண்டு செய்து சாப்பிடவும்.சும்மாவே சாப்பிடலாம். செமையாக இருக்கும்.தேங்காய் எண்ணெயில் பொரிப்பது தான் இந்த ஃப்ரைக்கு அதிக சுவையையும்  மணத்தையும் கொடுக்கும்.

நிச்சயம் செய்து பாருங்க. சூப்பராக இருக்கும்.

Monday, November 9, 2015

முட்டை சேவை / Egg Sevai


தேவையான பொருட்கள்;
உதிர்த்த இடியாப்பம் - 2  அல்லது 3 (மீடியம் சைஸ்)
முட்டை - 2
தாளிக்க :
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு ,உ.பருப்பு - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
கருவேப்பிலை - 1இணுக்கு
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
மிளகுத்தூள் - அரை -1டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
நறுக்கிய மல்லி இலை - சிறிது.

செய்முறை:
அவித்த இடியாப்பத்தை உதிர்த்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன் தாளிக்க சொன்னவறை சேர்க்கவும்.
வெங்காயம் லேசாக வதங்கி வரும் பொழுது அடித்த முட்டையை சேர்க்கவும்.சிறிது உப்பு தூவி பிரட்டி விடவும்.
முட்டை வெந்து வரும் பொழுது உதிர்த்த இடியாப்பம் சேர்க்கவும்.
மிளகுத்தூள் சேர்க்கவும்.


கடாயில் எல்லாம் ஒன்று சேருமாறு நன்கு  பிரட்டவும்.
நறுக்கிய மல்லி சேர்க்கவும்.
பிரட்டி எடுத்து சூடாகப் பரிமாறவும்.
காலை இரவு நேர டிஃபனுக்கு ஏற்றது. விருப்பமானால் தாளிக்கும் பொழுது முந்திரிபருப்பும் சேர்க்கலாம். ஸ்பைசியாக வேண்டும் என்றால் நறுக்கிய பச்சை மிளகாய் ஒன்றும் சேர்க்கலாம்.
சூப்பர் முட்டை சேவை ரெடி. செய்து பாருங்க செமையாக இருக்கும்.

Friday, November 6, 2015

சிறப்பு விருந்தினர் பகிர்வு -28 -திருமதி. சண்முகவடிவு - ஆரோக்கிய உணவுகள் பற்றிய பகிர்வு - Healthy Foods - Guest Post by Mrs. Shanmugavadivu

இன்றைய சிறப்பு விருந்தினர்,திருமதி சண்முக வடிவு, கோவையைச் சேர்ந்தவர். முகநூல் மூலம் இவருடன் எனக்கு நட்பு ஏற்பட்டது.
இவர் ஆரோக்கிய உணவு மேசை (மெனு டேபிள்) படங்களை அன்றாடம் இவர் மேசையில் பரிமாறியதை  மங்கை முகநூல் பக்கத்தில் பகிர்ந்து வந்தார். அதனில் ஈர்க்கப்பட்ட நான் அவரின் அனுமதி பெற்று படங்களை சேமித்து வந்தேன். சண்முகவடிவு அக்காவிடம்  சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து கொள்ள முடியுமா என்று கேட்டேன். அவர்களும் நேரம் கிடைக்கும் பொழுது கலந்து கொள்கிறேன் என்றார்கள். சொன்னபடி இந்த வாரம் சம்மதம் தெரிவித்தார்கள்.
திருமதி சண்முக வடிவு அவர்களின் பகிர்வு இதோ! 
 முகநூலில் நாங்கள் ஒரு சிலர் கடைப் பிடிக்கும் ஆரோக்கிய உணவு வகைகள் பற்றிப் பதிவுகள் /பகிர்வுகள் போட்டுக் கொண்டு வருகிறோம் . அது யாரையும் அவர்களின் உணவுப் பழக்கங்களைக் கேலி செய்யவோ அல்லது எங்களின் உணவு வகைகளைப் பறை சாற்றிக் கொள்ளவோ நிச்சயமாக இல்லை . எதையும் எதிர்த்தோ அல்லது ஆதரித்தோ செய்யும் பிரச்சாரமும் அல்ல . பகிர்வுகள் மட்டுமே . " நான் நல்லா இருக்கேன் வா நீயும் நல்லா இருக்கலாம் "என்று சொல்வதுதான் அது

அதே போல இந்த ஆரோக்கிய உணவு வகைகள் மிகவும் விலை உயர்ந்தவைகள் என்ற ஒரு தவறான கருத்தும் நிறையப் பேரின் மனதில் இருக்கிறது . கம்பு ராகி சோளம் போன்ற தானிய வகைகள் ,கீரைகள் மற்றும் அந்தந்தப் பருவத்தில் அதிகம் விளையக் கூடிய காய் மற்றும் பழவகைகள் இவையெல்லாம் விலை அதிகம் என்றோ கட்டுப்படி ஆகாது என்றோ ஒரேயடியாக சொல்லிவிட முடியாது.

(இதோ சண்முக வடிவு அக்கா பகிர்ந்த ஆரோக்கிய உணவு மேசைப்படங்களை இங்கே ஸ்லைட் ஷோவாக பகிர்ந்திருக்கிறேன். எத்தனை நேர்த்தியாக பரிமாறி படம் எடுத்து இருக்கிறார்கள். இதைப்பார்த்தால் யாருக்குத்தான் ஆசை வராது. நமக்கெல்லாம் இப்படி யாராவது பரிமாறினால் மிக்க மகிழ்ச்சி தான் இல்லையா? )
smile emotஇந்த ஆரோக்கிய உணவு வகைகள் மிகவும் விலை உயர்ந்தவைகள் என்ற ஒரு தவறான கருத்தும் நிறையப் பேரின் மனதில் இருக்கிறது . கம்பு ராகி சோளம் போன்ற தானிய வகைகள் ,கீரைகள் மற்றும் அந்தந்தப் பருவத்தில் அதிகம் விளையக் கூடிய காய் மற்றும் பழவகைகள் இவையெல்லாம் விலை அதிகம் என்றோ கட்டுப்படி ஆகாது என்றோ ஒரேயடியாக சொல்லிவிட முடியாது . 



காப்பி, டீ ,ஹார்லிக்ஸ் ,பூஸ்ட் போன்ற பானங்களை விட ராகிக் கூழுக்கும் கம்பங்கூழுக்கும் அதிகம் செலவாகப் போவது இல்லை . ஹோட்டலில் சாப்பிடும் சிக்கன் சூப்பை விடக் கொள்ளு ரசத்திற்குக் கூடுதல் செலவில்லை . கோக் பெப்சியை விட இளநீர் எல்லாவிதத்திலும் உடம்புக்கு நல்லது . பட்டை தீட்டிப் பாலீஷ் போட்ட அரிசியை விட மட்டை அரிசி விலை குறைவுதான் . 

கத்தாழையும் கற்பூர வல்லியும் கிள்ளி வைத்தாலே தழைக்கும் . மணிப்ப்ளேண்ட் செடியோடு ஒரு பசலைக் கீரைக் கொடியையும் படர விடலாம் ...! வீட்டிலே, தொட்டியிலே ,மொட்டை மாடியிலே என்று கிடைத்த இடத்தில் முடிந்த அளவுக்கு காயும் கீரையும் விளைவிப்பவர்கள் உண்டு . மருத்துவருக்குக் கொடுக்கும் பணத்தைக் காய்கறியும் பழங்களும் வாங்க செலவு செய்வோமே.

நம் அடுக்களையில் இருக்கும் அஞ்சரைப் பெட்டிக்குள்ளேயே நம் நலம் காக்கும் அத்தனை ஆரோக்கியப் பொருட்களும்..இருக்கின்றன .
உடல் உள் உறுப்புக்கள் சீராக இயங்கச் செய்ய... சீர்+ அகம்- சீரகம்,
புற்று நோய்க் கிருமிகளை எதிர்க்கவும், நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டவும் ..மஞ்சள்
பித்தத்தை சரியாக்கவும், வாயுத்தொல்லை நீக்கவும்... சுக்கு,
உணவில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்கவும், உணவை செரிக்க வைக்கவும்.... மிளகு,
கெட்ட கொழுப்பைக் கரைக்கக்... கடுகு,
வாத பித்த கப நிலைகளைச் சீர்ப் படுத்த ..மல்லி
என சமையலில் நாம் சேர்க்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன.. 

உணவின் சுவை கூட்ட மட்டுமல்ல இவை எல்லாம். நம் நலம் காக்கவும் தான் எனும் விழிப்புணர்வோடு நம் சமையல் அமையட்டும். 

ஆரோக்கியத்துக்காகச் செலவழிப்பது பணமானாலும் நேரமானாலும் அது விலை மதிப்பில்லாத ஒரு சேமிப்புத்தான் . இன்றைய தேதியில் இரத்தக் கொதிப்பும் சர்க்கரையும் இல்லாத நடுத்தர வயதினர் மிகவும் குறைவு . சரியான உணவுப் பழக்கம் ,முறையான உடற்பயிற்சி , நல்ல ஆரோக்கியமான எண்ணங்கள் மற்றும் செயல்கள் இவை நமக்கு நலமாக வாழ உதவி செய்யும் . 
இந்தப் பதிவுகள் போட ஆரம்பித்த பிறகு இன்பாக்ஸில் வந்து குறிப்புக்கள் கேட்டவர் அநேகம் பேர் . தினமும் இதேபோல சமைக்க முடியவில்லை என்றாலும் குறைந்தது வாரம் ஒரு மூன்று வேளைக்காவது செய்யலாமே . யாராவது செய்து கொடுத்தால் சாப்பிடலாம்தான் நம்மால் எங்கே முடிகிறது என்று நினைக்காமல் நாமே செய்து பார்க்க முயற்சிக்கலாமே
இட்லி ,தோசை ,பிரியாணி என்று எதையும் உண்ணலாம் ,அவை ஜீரணிக்கும் அளவுக்கு நாம் வேலை செய்தால்.

பிஜ்ஜா பர்கர் KFC உணவு வகைகள் போன்ற  வகைகளை முடிந்த வரை தவிர்ப்போமே . நம் இளைய தலைமுறைக்கு எது healthy எது unhealthy என்று சொல்லிக் கொடுத்து வளர்ப்போமே. 
நல்லவை நினைப்போம்!
நல்லவை செய்வோம்! 
நன்றாய் இருப்போம்! 

ஒரு எளிய சமையற்குறிப்பு :
ராகி சேவை இட்லி செய்முறை:

**********************************
ராகி சேவையைத் தண்ணீரில் நனைத்து, 
அதோடு தோசை மாவோ அல்லது இரண்டு ஸ்பூன் தயிரோ சேர்த்து, கொஞ்சம் உப்பு சேர்த்துப் பிசறி .. 
எண்ணெய் தடவிய இட்லித் தட்டில் வேக வைத்து எடுத்தால்,
(
அதிலே கொஞ்சம் வெங்காயம் கறிவேப்பிலையை வதக்கிக் கொட்டிக் கலக்கினால் இன்னும் கூடுதல் சுவை) 
ராகி சேவை இட்லி தயார்.
இதே போல எல்லா தானிய சேவைகளிலும் செய்யலாம்..
எளிதான செய்முறை....
வித்தியாசமான சுவை.. 
என்னதான் பழங்கள், காய்கறிகள், கீரைகள், மீன், முட்டை, சிறுதானியங்கள் என ஆரோக்கியமான உணவு வகைகளை நாம் எடுத்துக்கொண்டாலும்... அவை நன்கு செரித்து உடலுக்கு ஊட்டம் தரும் வகையிலே நம் உடல் உழைப்பும் இருத்தல் மிக முக்கியம்.
அவரவரின் உடல்நிலை, வயது இதற்குத் தகுந்த மாதிரி உடற்பயிற்சி, நடைப்பயிற்சி யோகா என எதாவது பயிற்சிகளைத் தினமும் செய்வது மிகவும் அவசியம்.
முறையான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு முறை , சரியான ஓய்வு மற்றும் நேர்மறை எண்ணங்கள் நிறைந்த மனது.. இவை அனைத்தும் சரியான விகிதத்தில் இருந்தால் நமது ஆரோக்கியம் மேம்படும்.
அப்படி இல்லாமல், " நான் பழமும் காயுமாத்தானே சாப்பிடறேன்.. உடற்பயிற்சி எல்லாம் எதுக்கு...?" என்ற எண்ணம் இருந்தால் மாற்றிக் கொள்வோம்.
"
குந்தித் தின்றால் தொந்தி மட்டுமே முந்தி முந்தி வளரும்..
ஓடி ஓடி இளைத்தால்.. ஓல்டு ட்ரஸ்ஸெல்லாம் ஃபிட் ஆகும்" சரிதானே? 

நிறையக் காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் சிறுதானிய உணவு வகைகளை உண்ணுதல்,கூடவே தேவையான உடற்பயிற்சிகளையும் செய்தல்...., இவை உடலின் தேவையற்ற கொழுப்புக்களைக் கரைத்து, உள்ளே இருக்கும் கசடுகளை வெளியேற்றி, ஆரோக்கியமான முறையில் உடல் எடை குறைந்து நலமாய் வாழ வழி வகுக்கும்.. அளவாய், ஆரோக்கியமான உணவாய் உண்போம்.. நம் நலம் பேணுவோம்!

பாருங்களேன்... இனிமே எல்லோரும் எங்க வீட்டிலே லேட்டஸ்ட் மாடல் ப்ரிட்ஜாக்கும்.. பெரிய்ய்ய காராக்கும்னு புத்தம் புது ஐ போனாக்கும்னு சொல்லிக்கிட்டா, யாரும் பெரிசாக் கண்டுக்க மாட்டாங்க.. 
ஆனா, என்னோட வீட்டுத் தோட்டத்திலே காயும் பழமும் கீரையுமா விளைஞ்சிருக்குன்னு சொன்னோம்னா, கண்டிப்பா லேசா ஏக்கத்தோட நம்மைப். பார்ப்பாங்க... 
பெருமையா... சந்தோஷமா.... கர்வத்தோட சொல்லிக்கலாம் இது நான் விளைவிச்ச காய்கறிகள்னு. 
smile emoticon


விளைநிலங்கள் எல்லாம் விலைநிலங்களாய் மாறிக் கொண்டிருக்கும் சூழலில்.. ஆங்காங்கே காணக் கிடைக்கும் பசுமையான தோட்டங்கள் மாபெரும் ஆறுதல்.

ஆனால்.. இவற்றை மனதார ரசித்துக் கொண்டிருக்கும்போதே.. என்னென்னவோ எண்ணங்கள்.

இதே பசுமை இன்னும் பத்துப் பதினைந்து வருடங்கள் கழித்தும் இருக்குமா? இல்லை இவற்றிலும் கட்டிடங்கள் முளைத்து நிற்குமா? 

இந்த விவசாயக் குடும்பத்தின் வாரிசுகள் எல்லோருமே வேறு வேலை தேடி சென்று கொண்டிருக்கும் நிலையில்.. இந்தத் தொழில் இன்னும் எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்கும்?

ஏன் எந்த அரசுமே இந்த விவசாயிகளைக் கண்டு கொள்வதில்லை?
உழவர் சந்தை என்ற ஒன்றை ஆரம்பித்ததன் நோக்கமே.. விவசாயிகள் அவர்களின் உற்பத்திப் பொருட்களை நேரடியாக மக்களிடம் விற்று, சிறிதளவேனும் லாபம் ஈட்டவும், நுகர்வோருக்கு நியாயமான விலையில் உணவுப் பொருட்கள் கிடைக்கவும்தானே?

ஆனால்.. இன்று உழவர் சந்தையில் வியாபாரம் செய்பவரில் எத்தனை பேர் விவசாயிகள்? 90% வியாபாரிகள் தானே?
அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் ஏன் இல்லை? அவரவரின் சுயலாபம் மட்டுமே குறிக்கோளாய்ப் போனது ஏன்?
இதெல்லாம் எங்கே போய் நிற்கும்..? விவசாயி என்ன ஆவான்? அதில் கல் நடப் படுமா நெல் நடப் படுமா என வேதனையான மனதோடு, தாக்குப் பிடிக்க முடியாத சூழலில் நிலத்தை விற்க வேண்டிய அவலம். இனி வரும் காலங்களில்
உணவுக்கு எங்கே போவது? .....
இன்னும் ....இன்னும் எத்தனை எத்தனையோ யோசனைகள்...
பின்னாளில், விவசாயம் என்பது லாபமீட்டும் தொழிலாக மாறும் என்பதில் ஐயமில்லை...
ஆனால் அதன் பலன் யாருக்குப் போய்ச் சேரும் .... ???? frown emoticon


இப்போது இல்லையென்றாலும்....
இனி வரும் காலத்தில்.. 
விவசாயம் என்பது, மிகுந்த மரியாதைக்குரிய மற்றும் அதிக பட்ச லாபமீட்டும் தொழிலாக மாறப்போவது சர்வ நிச்சயம்.


திருமதி.சண்முக வடிவு அவர்கள் என் அழைப்பையேற்று  சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து கொண்டு கண்ணியப்படுத்தி தன்னுடைய கருத்துக்களைத் தெரிவித்தமைக்கு மனமார்ந்த நன்றி, மகிழ்ச்சி.பாராட்டுக்கள், நல்வாழ்த்துக்கள் அக்கா.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

Tuesday, November 3, 2015

கத்திரிக்காய் வதக்கல் / Brinjal stir fry

தேவையான பொருட்கள்;
பொடியாக நறுக்கிய பெரிய கத்திரிக்காய் ஒன்று - 300 கிராம்
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
நறுக்கிய சிவப்பு மிளகாய் - 1
நறுக்கிய பூண்டு பற்கள் - 6
மிளகு சீரகத்தூள் - தலா 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
ஆலிவ் எண்ணெய் - 1-2 டேபிள்ஸ்பூன்
அலங்கரிக்க நறுக்கிய மல்லி இலை அல்லது வெங்காயத்தாள்.


 செய்முறை:
 கத்திரிக்காயை நன்கு அலசி நறுக்கிக் கொள்ளவும்.பூண்டு,வெங்காயம் ,மிளகாய் பொடியாக நருக்கி வைக்கவும்.

 ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன் வெங்காயம்,போட்டு சிறிது வதக்கவும்.அத்துடன் பூண்டு ,மிளகாய் சேர்க்கவும்.
 நன்கு பிரட்டி வதக்கவும்.
 நறுக்கிய கத்திரிக்காய் சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.
 ஓரளவு வதங்கிய பின் உப்பு சேர்த்து மீண்டும் சிறிது நேரம் வதங்க விடவும்.
 வதங்கிய பிம் மிளகு சீரகத்தூள் சேர்க்கவும்.
 பிரட்டி விடவும்.
 நறுக்கிய வெங்காய்த்தாள் அல்லது மல்லியிலை சேர்த்து பிரட்டி அடுப்பை அணைக்கவும்.விரும்பினால் துருவிய தேங்காய் சேர்க்கலாம்.
 இது ரொட்டி, குபூஸ் அல்லது ரைஸ் உடன் சாப்பிட அருமையாக இருக்கும்.