Monday, December 28, 2015

தால் தர்க்கா / Dhal Tarka

 தேவையான பொருட்கள்;
பருப்பு வேக வைக்க:
மசூர் தால் - 50 கிராம்
பாசிப்பருப்பு - 50 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவைக்கு.

தாளிக்க:
எண்ணெய் நெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு, சீரகம் - சிறிது
மிளகாய்வற்றல் -2
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி -1

அலங்கரிக்க: நறுக்கிய மல்லி புதினா சிறிது, நறுக்கிய பச்சை மிளகாய் - 1
செய்முறை:

குக்கரில் தேவைக்கு தண்ணீர் பருப்பிற்கு மேல் ஒரு இஞ்ச் அளவு தண்ணீர் வைக்க வேண்டும். அது தான் அளவு.மேற்சொன்ன பொருட்கள் சேர்த்து மூன்று விசில் வைத்து அடுப்பை அணைக்கவும்.


 வெந்த பின்பு ருசிக்கு உப்பு சேர்த்து மசித்து விடவும்.
 கெட்டியாக இருந்தால் தேவைக்கு அரை கப் கொதி நீர் சேர்த்து கலந்து விடவும்.
ஒரு பவுலில் வெந்த பருப்பை எடுத்து வைக்கவும்,

 தாளிக்க மேற்சொன்ன பொருட்கள் சேர்த்து பொன்னிறமானவுடன்
பருப்பின் மீது கொட்டவும்.

 கலந்து விடவும்.நறுக்கிய மல்லி,புதினா சிறிது நறுக்கிய மிளகாய் சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.
சுவையான சத்தான தால் தர்கா ரெடி. சூடான சாதம் சப்பாத்தியுடன் பரிமாறவும்.உடன் கீரீன் சாலட், பப்பட், ஊறுகாயும் பரிமாறலாம்.

Friday, December 25, 2015

சிறப்பு விருந்தினர் பகிர்வு - 31- திருமதி பாத்திமா இப்ராஹிம் - நர்கிஸ் கோஃப்தாவும் கிரிஸ்பி உன்னியப்பமும் / Guest Post 31 - Mrs. Fathima Ibrahim / Nargis Kofta and Crispy Unniappam

இன்றைய சிறப்பு விருந்தினர் திருமதி.பாத்திமா இப்ராஹிம் நெல்லையில் பிறந்து, பெங்களூருவில் வளர்ந்தவர், தற்சமயம் கணவரின் பணி நிமித்தமாக கொச்சியில் வசித்து வருகிறார். அன்பான கணவர், மாமியார், இனிமையான மகள்கள்  என்ற அழகான குடும்பம்.
இவர்  சமையலில் தனக்கு அதிக ஊக்கம் கொடுத்தவர்களாக தன்னுடைய அம்மாவையும், மாமியாரையும் குறிப்பிடுகிறார். சமையல் தவிர தையலிலும் அவருக்கு ஆர்வம் இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.
நல்வாழ்த்துக்கள் பாத்திமா.
இவர் இன்று நம்மோடு பகிரவிருக்கும் குறிப்பு நர்கிஸ் கோஃப்தா  மற்றும் கிரிஸ்பி உன்னியப்பம்.
பொதுவாக இந்த கோஃப்தா இறைச்சியில் செய்வதுண்டு. ஆனால் இவர் புதுமையாக முட்டையில் செய்து அசத்தியிருக்கிறார்.

இனி குறிப்பிற்குச் செல்வோம். 

நர்கிஸ் கோஃப்தா:

தேவையான பொருட்கள்;
வேகவைத்த முட்டை - 3
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
பொடியாக நறுக்கிய மீடியம் சைஸ் தக்காளி - 3
நறுக்கிய பச்சை மிளகாய் -1 அல்லது  2
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -ஒன்னரை டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
ப்ரெட் துண்டுகள் - 2
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
நறுக்கிய மல்லி இலை சிறிது.(அலங்கரிக்க)

செய்முறை:
தேவையான பொருட்களை நறுக்கி தயார் செய்து கொள்ளவும்.




அவித்த முட்டையை தோல் எடுத்து பாதியாக வெட்டி வைக்கவும்.
ப்ரெட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து நன்கு பிழிந்து எடுத்து வைக்கவும். அத்துடன் முட்டை மஞ்சள் கரு சிறிது வெங்காயம், நருக்கிய பச்சை மிளகாய் ,நெய்,சிறிது உப்பு  சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
ரெடி செய்த ப்ரெட் கலவையை முட்டை வெள்ளைக்கருவின் மேல் நிரப்பி பொதிந்து வைக்கவும். இதனை ஒவனை முற்சூடு செய்து 180 டிகிரில் பொன்னிறமாக   பேக் செய்து எடுக்கவும்.
இனி ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும், அடுத்து இஞ்சி பூண்டு போட்டு வதக்கியவுடன் தக்காளி, மிளகாய்த்தூள்,கரம் மசாலா சேர்த்து பிரட்டி தேவைக்கு உப்பு சேர்த்து மசிய விடவும்.அரை கப் தண்ணீர் சேர்த்து மசாலாவை நன்கு கொதிக்க விடவும்.
தயாரான மசாலாவை பேக் செய்த முட்டை கோஃப்தாவில் விட்டு மீண்டும் 10 நிமிடம் பேக் செய்யவும்.
பத்து நிமிடம் கழித்து எடுத்து மல்லி தூவி அலங்கரித்து பரிமாறவும்.
சுவையான  நர்கிஸ் கோஃப்தா ரெடி.
வித்தியாசமான முறையில் நர்கிஸ் கோஃப்தாவை  முட்டை மற்றும் ப்ரெட் வைத்து செய்து அசத்தியாச்சு. நீங்களும் செய்து பாருங்க.

இதனை நாண், ரொட்டி,பரோட்டாவுடன் பரிமாறலாம்.

அடுத்து பார்க்கப் போகும் குறிப்பு:

கிரிஸ்பி உன்னியப்பம்:

தேவையான பொருட்கள்;
அரிசி மாவு - 3 கப்
சிறிய வாழைப்பழம் - 6
 வெல்லப்பாகு - 2 கப்
காய்ந்த தேங்காய் - 1 கப் ( பொடியாக நறுக்கி பொன்னிறத்தில் வறுத்து வைக்கவும்)
ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் அல்லது நெய் - சுடுவதற்கு
செய்முறை:
தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளவும்.


அரிசி மாவுடன் வாழைப்பழம் சேர்த்து பிணைந்து ,அத்துடன் வறுத்த தேங்காய், வெல்லப்பாகையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.45 நிமிடம் மாவை மூடி வைக்கவும்.
பின்பு பனியாரச் சட்டியை சூடு செய்து நெய் அல்லது தேங்காய் எண்ணெய் விட்டு, மாவை பனியாரச் சட்டியில்  குழியில் முக்கால் அளவு விட்டு மூடி,கவனமாக  பொன்னிறாமாகச் சுட்டு எடுக்கவும்,.
ஆறிய பின்பு எடுத்துப் பரிமாறவும்.
சுவையான கிரிஸ்பி உன்னியப்பம் ரெடி.
இது கேரளாவில் பிரசித்தி பெற்ற ஸ்நாக் அயிட்டமாகும்.
நீங்களும் இம்முறையில் செய்து பாருங்க.அசத்தலாக வரும்.

இரண்டு அருமையான குறிப்புகளைப் பகிர்ந்த பாத்திமாவிற்கு நம்முடைய மனமார்ந்த மகிழ்ச்சி மற்றும் நன்றியைத் தெரிவிப்போம்.
மீண்டும் அடுத்த வாரம் நல்லதொரு சிறப்பு விருந்தினர் பகிர்வில் சந்திப்போம்.
என்றென்றும் அன்புடன்,
உங்கள் ஆசியா உமர்.

Wednesday, December 23, 2015

பீட்ரூட் பீஸ் பிரியாணி / Beetroot Peas Briyani


 தேவையான பொருட்கள்;
பாசுமதி ரைஸ் அல்லது சீரக சம்பா- 200 கிராம்
மீடியம் சைஸ் பீட்ரூட்  நறுக்கியது - 1
பச்சை பட்டாணி - கால் கப்
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
நறுக்கிய மல்லி,புதினா - சிறிது.
புளிக்காத தயிர் -  2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் -2 - 3 டேபிள்ஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன் குவியலாக
கரம் மசாலா - கால் டீஸ்பூன்(ஏலம் பட்டை கிராம்பு தூள்)
மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள் - தலா கால் டீஸ்பூன்
மல்லித்தூள் - அரை டீஸ்பூன்
லைம் ஜூஸ் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

பரிமாறும் அளவு - இரு நபர்கள்.
செய்முறை:

 நறுக்கிய வேண்டியவற்றை நறுக்கி தயார் செய்து கொள்ளவும்.
 குக்கர் அல்லது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விடவும்.
 வெங்காயம் வதக்கி,இஞ்சிபூண்டு கரம் மசாலா சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.
 தக்காளி,பச்சை மிளகாய் உப்பு சேர்த்து சுருள வதக்கவும்.அத்துடன் மசாலா தூள் வகைகள் சேர்க்கவும்.
 ஒரு சேர பிரட்டி விடவும்.
 பீட்ரூட்,பச்சை பட்டாணி சேர்க்கவும்.
 ஒரு சேர பிரட்டவும்.
 தயிர் சேர்க்கவும்.
 கலந்து விடவும்.சிறிது சிம்மில் இருக்கட்டும்.
 பின்பு அரிசி சேர்த்து பிரட்டவும்.

 தேவைக்கு ஒன்றுக்கு ஒன்றரை கப் கொதி நீர்  சேர்க்கவும்.
 உப்பு சரி பார்த்து நெய், நறுக்கிய மல்லி புதினா சேர்த்து குக்கரை மூடி சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.

ஆவியடங்கியவுடன் திறந்து பிரியாணியில், சோறு உடையாதவாறு பிரட்டவும். இல்லையெனில் அப்படியே பவுலில் கொட்டி லேசாக பிரட்டிப் பரிமாறவும்.
பாத்திரத்தில் சமைத்தால் சிறிது மூடி, தம் போட்டு இறக்கவும்.
சுவையான சத்தான பீட்ரூட் பீஸ் பிரியாணி ரெடி.
லஞ்ச் பாக்ஸ்க்கு செமையாக இருக்கும்.
உடன் சாப்பிட ஆனியன் ரைத்தா அல்லது ஒரு புதினா மல்லி துவையலோ பப்படமோ போதும்.
செய்து பாருங்க.

Tuesday, December 22, 2015

மலபார் நெய்ச் சோறு / Malabar Ghee Rice

 தேவையான பொருட்கள்;
சீரக சம்பா அரிசி - 1 கப்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி & கிஸ்மிஸ் - சிறிது
ஏலம் -3 ,பட்டை - 1 துண்டு, கிராம்பு - 4 ,பிரியாணி இலை - 1
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கொதிக்கும் நீர் - 2 கப்
உப்பு - தேவைக்கு.
நறுக்கிய மல்லி இலை - சிறிது.

செய்முறை:
அரிசியை நன்கு கழைந்து தண்ணீர் வடித்து விட்டு பின்பு தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும்.
அடுப்பில்  நெய்ச்சோறு செய்ய அடிகனமான பாத்திரம் வைத்து நெய் விடவும். முதலில் முந்திரி திராட்சை வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.
அதன் பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும்.


 அதே நெய்யில் ஏலம் பட்டை கிராம்பு, பிரியாணி இலை போட்டு வதக்கி சிறிது முந்திரி பருப்பும் ,இஞ்சி பூண்டு விழுதும் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து நன்கு பச்சை வாடை போகுமாறு வதக்கவும்.

 பின்பு ஊறிய அரிசியை தண்ணீர் வடித்து விட்டு சேர்த்து வதக்கவும்.

 அரிசியின் அளவிற்கு இரண்டு அளவு கொதி நீர் சேர்த்து தேவைக்கு உப்பு சேர்க்கவும்.நெய்ச்சோறு சாஃப்டாக இருக்க வேண்டும் என்றால்  கால் கப் தண்ணீர் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.மூடி வேக விடவும்.
 அரிசி வெந்து மேலே வரும் பொழுது திறந்து பிரட்டி  விடவும். தம் போடவும்.

தம் ஆனவுடன் திறந்து வறுத்த முந்திரி,கிஸ்மிஸ் நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.

தேவைப்பட்டால் ஒரு டீஸ்பூன் நெய் சேர்க்கவும். சிறிது மூடி வைக்கவும்.

 
 பின்பு திறந்து நன்கு பிரட்டி விடவும்.
சுவையான மலபார் நெய்ச் சோறு ரெடி.

பவுலில் நெய்சோறை எடுத்து சிக்கன் அல்லது மட்டன் கறியுடன் பரிமாறவும்.