Monday, February 29, 2016

குவிக் கிரீமி ஃப்ரூட் சாலட் / Quick creamy fruit salad

 தேவையான பொருட்கள்;-
ஆப்பிள் தோல் நீக்கி நறுக்கியது - 2
பச்சை திராட்சை - விதையிருந்தால் நீக்கி பாதி பாதியாக நறுக்கி எடுத்தது - அரை கப்
கருப்பு திராட்சை - நறுக்கியது - அரை கப்
மாம்பழம் - 1 நறுக்கியது.
மாதுளை - 1 (விரும்பினால்)
அன்னாசி சிறு துண்டாக நறுக்கியது - 1 கப்
வாழைப்பழம் - நறுக்கியது 1 கப்
கடற்பாசி காய்ச்சி சிறியதாக துண்டு போட்டது(ஆரஞ்சு ப்லேவர்) - 1 கப் (விரும்பினால்)
நெஸ்லே கிரீம் - ஒரு சிறிய டின்
ஸ்வீட்டண்ட் கண்டன்ஸ்ட் மில்க் - 1 சிறிய டின்
வெனிலா ஐஸ்கிரீம் - தேவைக்கு.

செய்முறை:-
ஃப்ரூட் சாலட்டில் பழங்கள் தவிர சுவைக்கு உங்கள் விருப்பம் தான் எது வேண்டுமானாலும் சேர்க்கலாம்.


 மேற்குறிப்பிட்ட  அனைத்தும் சேர்த்து கலந்தால் சுவையான ஃப்ரூட் சாலட் தயார்.
பார்ட்டியில் செய்து பரிமாற ஏதுவானது. சுவைக்கு நான் கேரண்டி.
நான் ஐஸ்கிரீம் குறைவாக சேர்த்தேன். நீங்கள் பாதிக்கு பாதி ஐஸ்கிரீம் சேர்த்தால் செமையாக இருக்கும்.

நான்கு வருடங்களுக்கு ஒரு முறை வரும் நாள்.பிப்ரவரி - 29. அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

Sunday, February 14, 2016

நன்றி சொல்ல எனக்கு வார்த்தையில்லை ..

ஆறாம் ஆண்டு நிறைவு - சமைத்து அசத்தலாம்.
கடந்த இரண்டு வருடங்களாகவே வலைப்பூவிற்குச் செலவழித்த நேரம் போதும் என்ற எண்ணம் மேலோங்கிக் கொண்டு தான் இருக்கிறது.
அதன் பின் வருகையாளர்கள் எண்ணிக்கையைப் பார்ப்பேன்.
என்னையும் நம்பி ஒரு நாளைக்கு 1000, 1500. 2000  என்ற எண்ணிக்கையில்  நபர்கள் வருகை தருவதை கருத்தில் கொண்டு வீட்டில் எது புதிதாக முயற்சி செய்தாலும் பகிர்ந்து வந்தேன்.
இப்பொழுது சமையல், சாப்பாடு புகைப்படங்களை படம் பிடிப்பது என்பது இரத்தத்தில் ஊறிய ஒன்றாகவே ஆகிவிட்டதோ என்ற எண்ணம். நான் வேண்டாம் என்று நினைத்தாலும் என் கணவரே, படம் எடுக்கலையா என்று கேட்கும்  அளவிற்கு போய்விட்டது.
நாமே தான் எத்தனை நாட்கள் சமைத்துப் பகிர்வது என்று சிறப்பு விருந்தினர்கள் பகிர்வு ஆரம்பித்தேன்.படங்கள், குறிப்புகள் இன்றும் வந்து குவிந்து கொண்டு தான் இருக்கிறது.
எனக்குத்தான் போஸ்டிங் செய்ய சலிப்பு ஏற்பட்டுவிட்டது.அதனால் ஃபேஸ்புக்கில் Share Your Recipes என்ற பக்கம் ஆரம்பித்து அங்கு மற்றவர்கள் பகிர்வை நாள் ஒன்றுக்கு, ஒன்றாகவாவது பகிர்வது என்று முயற்சி செய்கிறேன். அதுவும் இயலவில்லை. ஒரு உதவியாளர் இருந்தால் எவ்வளவு அருமையாக இருக்கும்.ஹி.ஹி. இது கொஞ்சம் ஓவராத்தான் தெரியும் உங்களுக்கு. உடலும் மனமும் ஒத்துழைக்கவில்லை. அரை நூற்றாண்டை நெருங்கும் தருவாயில் இரூப்பதால் இருக்குமோ !

இங்கு மூன்று நான்கு வருடங்களாக, மாதம்  2 டாலர் கூகிள் என் கணக்கில் இருந்து பிடித்துக் கொள்கிறது.
ஆனால் இரண்டு மாதம் முன்பு  கூகிளிடம் இருந்து, நீங்கள் இலவசமாகப் பகிரலாம் என்று மெயில் வந்தது. ஆனால் எனக்குத்தான் பகிர ஒரு விதமான சலிப்பு,சோம்பல். ஃபைலில் படங்களும் குறிப்புகளும் தேங்கிக் கிடக்கிறது. அவற்றை gallery அமைத்து பார்த்து மகிழ்வதோடு சரி.

ஒரு நேரம் இந்த உழைப்பிற்கு எந்த பலனும் இல்லையே என்று நினைக்கும் பொழுது சிறிது வருத்தமாக இருந்தாலும்..இன்று உலகெங்கும் உள்ள அனபான நட்புகளைப் பெற்றதே போதும்  என்ற என்ணமே என் மனசை நிறைவடையச் செய்து விட்டது. அந்தப் பிரியம் ஒன்றே இத்தனை ஆண்டு காலம் நான் சம்பாதித்தது.
எனக்கு மீண்டும் ஆர்வம் வரும் பட்சத்தில் என் பயணம் தொடரும்.
ஆர்வம் நாளையோ, மறுநாளோ அல்லது அடுத்த வாரமோ, அடுத்த மாதமோ கூட வரலாம். பொறுத்திருப்போம்.
அன்பான வருகையாளர்களுக்கும், ப்ரியமுள்ள நட்புகளுக்கும் என் நெஞ்சார்ந்த மகிழ்ச்சி கலந்த நன்றி.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.