Friday, March 11, 2016

சிறப்பு விருந்தினர் பகிர்வு 32- திருமதி. சிராஜ் முனீரா / ஆட்டுக்கால் பாயா / Guest Post 32 / Mrs.Siraj Muneera / Aatukaal Paya

இன்றைய சிறப்பு விருந்தினர் திருமதி.சிராஜ் முனீரா, இவர் எனக்கு அறுசுவை சமையல் தளத்தின் மூலம் அறிமுகமாகி பல வருடங்களாக மாறாத அன்போடு பழகி வருபவர். இந்தப் பகுதி ஆரம்பித்ததில் இருந்து குறிப்பு அனுப்புவதாக சொல்லி, இப்பொழுது தான் அனுப்பியிருக்கிறார்.
பகிர்வுக்கு நெஞ்சார்ந்த நன்றி மட்டும்.மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரே எழுதி அனுப்பிய சுய அறிமுகம் இதோ!

நான் சிராஜ் முனிரா. பிறந்து வளர்ந்தது மண் மனம் மாறாத எங்கள் நெல்லை". அம்மா வீடு கடலூர்.  படிப்பு வேலை எல்லாம் கடலூரில் தான்..திருமணம் முடிந்து கடந்த 9 ஆண்டுகளாக கணவருடன் அபுதாபியில்  வசித்து வருகிறேன். இரண்டு அருமையான பெண் குழந்தைகள். பெரியவள் 8 வயது அடுத்தவள் 3 வயது. அன்பான் குடும்ப வாழ்க்கை.

சமையல் பிடிக்கும். ரசித்து சமைப்பதுண்டு. ஆசியாக்கா அளவிற்கு ஆத்மார்த்தமாக கிடையாது. ஆசியாக்காவும் நானும் ஒரே ஊர். 7 வருட பழக்கம். நாங்க ஒன்னா பிறக்கல அதுதான் வித்யாசம். அத்தனை அன்பானவங்க. ஏதோ எழுத்துக்காக சொல்லல. சிரிச்ச முகம், குழந்தை மனசு. அது எப்பவும் அவங்க முகத்தில் தெரியும், சமையல் ராணி  நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.  இவங்க கிட்ட பிடிச்சது இவங்களோட தனித்துவம். உணவு வகைகளை தெளிவா படம் எடுத்து எல்லோருக்கும் புரியும் வகையில் வலைப்பூவில் ஒரு முழுநிறைவோடு போடுவது ஆசியாக்கா மட்டும் அறிந்த கலை. வாழ்த்துக்கள் ஆசியாக்கா. உங்கள் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.


(சுய அறிமுகத்தில் என்னைப் பற்றி பில்டப் கொஞ்சம் ஓவர் தான்.என்ன செய்ய ???? ஒரு வார்த்தை மாற்றக் கூடாதுன்னு ஆர்டர் போட்டு விட்டதால் அப்படியே பகிர்ந்து விட்டேன்.ஹி ஹி..)

இனி சிராஜ் முனீரா செய்த ஆட்டுக்கால் பாயாயாவை  படங்களுடன் பார்க்கலாம்.




தேவையான பொருட்கள்;-
ஆட்டுக்கால் - 6
வெங்காயம் - 2
தக்காளி - 1
ப. மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீ ஸ்பூன்
ஏலம்,பட்டை,கிராம் - தேவையானளவு
மல்லி கருவேப்பிலை -  தேவையானளவு
உப்பு - தேவையானளவு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்


அரைக்க

தேங்காய் - 3 துண்டு
முந்திரி பருப்பு - 7 
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் -  1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி பொடி - 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1ஸ்பூன்


செய்முறை:-

முதலில் குக்கரில்  சுத்தம் செய்து நன்கு அலசிய ஆட்டுக்கால் துண்டுகளைச் சேர்த்து தேவைக்கு தண்ணீர் விட்டு 10 விசில் வரும் வரை வேக விடவும்.




ஒரு சின்ன சட்டியில் மிளகு சீரகம் சோம்பு சேர்த்து வறுத்து கொள்ளவும். அதில் கடைசியாக தனியா பொடி சேர்த்து பிரட்டி அடுப்பை அணைத்து விடவும்


வறுத்ததை ஆறியதும் மிக்ஸியில் போட்டு தேங்காயும், முந்திரியும்,1ஏலக்காவும் சேர்த்து மையாக அரைக்கவும். முந்திரிக்கு பதிலாக கசகசா சேர்க்கலாம். நான் முந்திரி போட்டேன்.

குக்கரை திறந்து கால் வெந்ததை உறுதி செய்து பின்பு அரைத்த மசாலா சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும். தேவைக்கு உப்பு சேர்க்கவும்.


மசாலா வாடை போனதும் மற்றோரு சட்டியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, ஏலம், கிராம்பு, பச்சை மிளாய் சேர்த்து ,பின்பு வெங்காயம், மஞ்சப்பொடி, கறிவேப்பிலை சேர்க்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். இஞ்சி பூண்டு வாசனை போனதும், தக்காளி சேர்த்து மல்லி புதினா கொஞ்சம் சேர்க்கவும்.



தக்காளி நல்ல வதங்கியதும் கால் ஆனம் சேர்த்து 5-  10 நிமிடம் சிம்மில் வைக்கவும் .


நல்ல மணம் வந்ததும் அடுப்பை அணைத்து நறுக்கிய கொத்த மல்லி இலை போடவும். 1 மணி நேரம் கழித்து பரிமாறவும்

சுவையான பாயா ரெடி. 
இடியாப்பம், பரோட்டா, தோசை, ஆப்பம் உடன் பரிமாறலாம். 

க்ளீயர் சூப் வேண்டுமானால் தேங்காய், முந்திரி தவிர்க்கவும். மற்ற பொருட்களின் அளவையும் குறைத்துக் கொள்ளவும்

அருமையான பாயா..பிடித்திருந்தால் நீங்களும் செய்து அசத்துங்க!!!

சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து கொண்டு சிறப்பித்த திருமதி.சிராஜ் முனீராவிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்,நல்வாழ்த்துக்கள்.
மீண்டும் என் மகிழ்ச்சி கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

நீங்களும் சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து கொள்ள விரும்பினால்
விபரத்திற்கு இங்கு கிளிக்கவும்.

என்றென்றும் அன்புடன், 
ஆசியா உமர்.

1 comment:

பரிவை சே.குமார் said...

ஆட்டுக்கால் பாயா செய்முறை அருமை...
தங்களுக்கும் சமையல் குறிப்பு வழங்கிய சகோதரிக்கும் வாழ்த்துக்கள் அக்கா...