Thursday, April 21, 2016

மேலப்பாளையம் கத்திரிக்காய் ஆணம் / சால்னா / kathirikai Aanam/ Brinjal Aanam / Salna

மேலப்பாளையத்தில் வெறும் சோறுடன் மட்டன் சால்னாவுடன் இந்த கத்திரிக்காய் ஆணமும் பரிமாறுவது பிரசித்தம்.
இதில் பருப்பு சேர்ப்பது இல்லை. நெய்ச்சோறு,தேங்காய்ச்சோறுக்கு பருப்பு கத்திரிக்காய் பரிமாறுவார்கள்.இதே முறை ஆனால் அரிசி மாவு கரைத்து விடுவதற்கு பதில் வேக வைத்த  துவரம் பருப்பு உடன் சேர்ப்பார்கள்.இது தான் வித்தியாசம்.

கத்திரிக்காய் ஆணம் செய்முறை இதோ!!
தேவையான பொருட்கள்:-
கத்திரிக்காய் - கால் கிலோ
விரும்பினால் தடியங்காய் - ஒரு சிறிய துண்டு
பெரிய வெங்காயம் - 1
பெரிய தக்காளி - 1
பச்சை மிளகாய் -2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
ஏலம் பட்டை கிராம்பு தூள் - கால்டீஸ்பூன்
ஊர் மசாலாத்தூள்-  ஒன்னரை - 2 டேபிள்ஸ்பூன்
கால்டீஸ்பூன் - மிளகாய்த்தூள் விரும்பினால்
புளி -  எலுமிச்சை அளவு
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
நறுக்கிய மல்லி புதினா இலை - சிறிது.
தாளிக்க:-
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு,வெந்தயம் - தலா அரைடீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1டீஸ்பூன்
கிள்ளிய மிளகாய் வற்றல் - 2
நறுக்கிய வெங்காயம் - சிறியது ஒன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட்- கால் டீஸ்பூன்
கருவேப்பிலை - 2 இணுக்கு.

செய்முறை:-
நறுக்கவேண்டியவற்றை நறுக்கி வைக்கவும்.

குக்கரில் நறுக்கிய கத்திரிக்காய், வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்,மல்லி புதினா ,இஞ்சி பூண்டு சேர்க்கவும்.
மசாலா தூள்,கரம் மசாலா, விரும்பினால் மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
  

புளி கரைத்து விட்டு உப்பு தேவைக்கு சேர்த்து குக்கரில் இரண்டு விசில் வந்தவுடன்,அடுப்பை அனைத்து ஆவியடங்கியவுடன் திறக்கவும்.
திறந்து 1 டேபிள்ஸ்பூன் கூட்டு மாவு(அரிசி மாவு) வை ஒரு கப் தண்ணீரில் கரைத்து விடவும்.
விரும்பினால் ஒரு கப் சோறு  வடித்த கஞ்சியும் சேர்க்கலாம்.கூட்டு மாவு கரைசல் அல்லது கஞ்சி எது விருப்பமோ அதை கெட்டிதன்மைக்கு சேர்க்கலாம்.
கொதி வரவும் அடுப்பை அணைக்கவும்.தாளிக்க மேற்சொன்னபடி சாமான் சேர்த்து தாளித்து கொட்டவும்.
சுவையான கத்திரிக்காய் ஆணம் ரெடி. இதனை வெறும் சோறு,மட்டன் சால்னாவுடன் பரிமாறலாம். முதலில் மட்டன் சால்னா சோறு,அடுத்து கத்திரிக்காய் ஆணம் விட்டு சாப்பிடுவது வழக்கம்.
திருமண விருந்து கூட இந்த காம்பினேஷனில் நடக்கும்.
வெறும் சோறு கறியாணம், கத்திரிக்காய் ஆணம்.
இது செமையாக இருக்கும்.

No comments: