Friday, October 28, 2016

மட்டன் பிரியாணி / புலாவ் (குக்கர் முறை) / Mutton Briyani /Pulav( Pressure cooker method)

தேவையான பொருட்கள்;-
பாசுமதி அல்லது சீரக சம்பா அரிசி - அரைக்கிலோ
மட்டன் அரைக்கிலோ
எண்ணெய் - 50 மில்லி
நெய் - 50 மில்லி
ஏலம் - 2
கிராம்பு -2
பட்டை - 2 சிறிய துண்டு
பிரியாணி இலை - 1
பெரிய வெங்காயம் - 2
பெரிய தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
எலுமிச்சை - பாதி
மல்லி புதினா - பாதி கட்டு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒன்னரை + அரை டேபிள்ஸ்பூன்
தேங்காய்பால் - அரை கப் (விரும்பினால்)
தண்ணீர் - 1:2
உப்பு - தேவைக்கு.
மட்டனுடன் ஊற வைக்க:-
தயிர் - 100 மில்லி
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
இஞ்சி பூண்டு-    அரை டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா பொடித்துக் கொள்ளவும். ( சோம்பு அரை டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன்,ஏலம்  3, கிராம்பு-3, பட்டை,ஒரு துண்டு ) உங்கள் பிரியம் வேறு வாசனைப் பொருட்கள் வேண்டு மானாலும் சேர்க்கலாம்.
உப்பு - அரை டீஸ்பூன்.

செய்முறை:-

மட்டனுடன் ஊற வைக்க சொன்ன பொருட்கள்  சேர்த்து ஊற வைக்கவும்.
அரிசியை அலசி ஊற வைக்கவும்.
குக்கரில் எண்ணெய், நெய் விட்டு சூடானவுடன் ஏலம்,பட்டை கிராம்பு பிரியாணி இலை சேர்க்கவும்.நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது ஒன்னரை டேபிள்ஸ்பூன் சேர்க்கவும்.
நன்கு வதங்க விடவும்.
நறுக்கிய தக்காளி பச்சை மிளகாய், நறுக்கிய பாதி புதினா  மல்லி இலை சேர்க்கவும்.

பிரட்டி விட்டு உப்பு சேர்த்து மூடி வதங்க விடவும். காரம் அதிகம் விரும்புவோர் அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்க்கலாம்.மூடி நன்கு வதங்க விடவும்.
ஊறிய மட்டன் சேர்க்கவும்.
நன்கு பிரட்டி விடவும்.
பாதி தண்ணீர் சேர்த்து உப்பு சரி பார்த்து மூடவும். நெருப்பை மீடியமாக வைத்து 3 விசில் விடவும்.
அரை கப் தேங்காய்ப்பாலில் மீதி தண்ணீரை கலந்து வைக்கவும்.
மூன்று விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.கறி வெந்து இப்படி இருக்கும்.
ஆவியடங்கியவுடன் திறந்து தேங்காய்பால் கலந்த தன்ணீர் விடவும். ( தேங்காய்ப்பால் சேர்ப்பது விருப்பம் பொருத்து தான்)
ஊறிய அரிசியை நன்கு தன்ணீர் வடித்து விட்டு சேர்க்கவும்.
கொதி வரவும் நறுக்கிய மல்லி புதினா இலை, எலுமிச்சை பிழிந்து குக்கரை மூடி ஆவி வரவும் வெயிட் போட்டு குக்கரை சிம்மில் பத்து நிமிடம் வைத்து அணைக்கவும்.( மிகச் சிறிய தீ)

விரும்பினால் அடியில் சூடாக்கிய பழைய தோசைக்கல் வைக்கலாம்.அடி பிடிக்காமல் இருக்கும்.
ஆவியடங்கியவுடன் திறந்து பக்குவமாக   பிரட்டி விட்டு பரிமாறவும்.
சுவையான குக்கர் மட்டன் பிரியாணி தயார்.
குக்கரில் இருந்து மாற்றி ஹாட் பாக்ஸில் வைக்கவும்.
அசத்தலான பக்க உணவுடன் பரிமாறவும்.

டிப்ஸ் :
அரிசி நன்கு காய்ந்து பழைய அரிசியாக இருந்தால் மட்டுமே ஒன்றுக்கு இரண்டு தண்ணீர் அளவு.புது அரிசி என்றால் அரை கப் குறைத்துக் கொள்ளலாம்.