Tuesday, November 8, 2016

சுண்டைக்காய் சாம்பார் / Turkey berry sambar

சுண்டைக்காயில் பொதுவாக புளிக்குழம்பு வைப்பாங்க. நான் சாம்பார் செய்து பார்த்தேன். ஆனால் இதில் சுவைக்காக தேங்காய் அரைத்துச் சேர்த்தேன்.அருமையாக இருந்தது.
இதையே பருப்பு சேர்க்காமல் செய்தால் புளிக்குழம்பு அவ்வளவு தான்.

தேவையான பொருட்கள்;-
பச்சை சுண்டைக்காய் - அரை கப்
பருப்பு - 50 கிராம்
பெருங்காயத்தூள் - சிறிது
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
புளி பெரிய நெல்லியளவு
உப்பு - தேவைக்கு.

அரைக்க :- 
தேங்காய் - 4 டேபிள்ஸ்பூன்

தாளிக்க :
நல்ல எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
கருவேப்பிலை - 2 இணுக்கு
மிளகாய் வற்றல் - 1

சின்ன வெங்காயம் - 10
நாட்டு தக்காளி - 1
நறுக்கிய மல்லியிலை சிறிது.

செய்முறை:-
சுண்டைக்காயை காம்பு நீக்கி நன்கு அலசிக் கொள்ளவும்.
பின்பு இடி உரலில் போட்டு தட்டவும்.
தட்டிய சுண்டைக்காயை தண்ணீரில் அலசினால் விதை எல்லாம் அடியில் தங்கி விடும்.

சுண்டைக்காயை எடுத்து இனி சமைக்கலாம்.

பருப்பை மஞ்சள் தூள்,பெருங்காயம் விரும்பினால் பூண்டு இரண்டு பல், சீரகம் கால் டீஸ்பூன் சேர்த்து  குக்கரில் இரண்டு விசில் வைத்து எடுக்கவும்.
வெந்த பருப்பை தனியாக வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சாம்பார் பொடி சுண்டைக்காய் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
வெந்த பின்பு புளி சேர்க்கவும்.

உப்பு சேர்க்கவும். நன்கு கொதிக்க விடவும்.
அத்துடன் அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்.

பருப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
மேற் சொன்ன பொருட்கள் சேர்த்து தாளித்து கொட்டவும்.
நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கவும்.

சுவையான சுண்டைக்காய் சாம்பார் தயார்.
சூடான சாதத்துடன் பரிமாற செமையாக இருக்கும்.

2 comments:

கோமதி அரசு said...

நாங்கள் சுண்டைக்காய் சாம்பார் வைப்போம்.
சுண்டைக்காயை அறிந்து கொண்டு அதை வெங்காயம், தக்காளியுடன் வதக்கி சாம்பார் செய்வேன்.
உங்கள் முறைப்படி செய்து பார்க்கிறேன்.

Asiya Omar said...

வாவ் ! நீங்க சொல்ற முறை சூப்பர். நான் வெங்காயம் தக்காளியை தாளித்து மேலே கொட்டினேன்.