Tuesday, December 27, 2016

கருவாட்டு கத்திரிக்காய் குழம்பு / Dried fish brinjal curry

தேவையான பொருட்கள்;-
கருவாடு - 100 கிராம்
கத்திரிக்காய் - 200 கிராம்
ஒரு முழு பூண்டு மீடியம் சைஸ்
உரித்த சின்ன வெங்காயம் - ஒரு கையளவு
கீரிய பச்சை மிளகாய் - 2
புளி - சிறிய எலுமிச்சை அளவு
தக்காளி விரும்பினால் - 1
உப்பு - தேவைக்கு.

தாளிக்க:-
நல்ல எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
கடுகு,உளுத்தம் பருப்பு - தலா அரை டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
கருவேப்பிலை - இரண்டு இணுக்கு.

மசாலா சேர்க்க வேண்டியது:-
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் ,சீரகம், மிளகுத்தூள் - தலா அரை டீஸ்பூன்.

அரைக்க:-
தேங்காய்த் துருவியது - 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை:- 
தேவையானதை தயார் செய்து கொள்ளவும்.

முழுசாக போடும் பூண்டு பற்கள், சின்ன வெங்காயம் குழம்பில் போட்டு எடுத்துச் சாப்பிட அருமையாக இருக்கும்.
ஒரு மண் சட்டியில் எண்ணெய் விட்டு சூடு செய்யவும்.கடுகு,வெந்தயம்,உ.பருப்பு பொரிய விடவும்.
கருவேப்பிலை போட்டு வெடிக்கவும்,பச்சை மிளகாய் ,உரித்த சின்ன வெங்காயம்,உரித்த பூண்டு சேர்க்கவும். நன்கு வதக்கவும்.
நறுக்கிய கத்திரிக்காய் சேர்க்கவும்.சிறிது உப்பும் சேர்த்து மூடி போட்டு வதங்க விடவும்.
.விரும்பினால் தக்காளி சேர்க்கவும்,
கருவாட்டில்  உப்பு இருக்கும்.உப்பு அளவாய் சேர்க்கவும்.
கத்திரிக்காய் வதங்கியதும்,மசாலா பொருட்கள் குறிப்பிட்டபடி சேர்க்கவும். அல்லது தேவைக்கு உங்க விருப்பதிற்குச் சேர்க்கவும்.

மசாலா சேர்த்து பிரட்டவும்.
இரண்டு கப் தண்ணீரில் புளி கரைத்து வைக்கவும், கருவாட்டை தண்ணீரில் அலசி வைக்கவும்.

மசாலா வதங்கியதும் புளித்தண்ணீரை விடவும்.
நன்கு கொதித்து புளி வாடை,மசாலா வாடை அடங்கி வர வேண்டும்.
கருவாட்டைச் சேர்க்கவும். சீலாக் கருவாடு அல்லது விருப்பமான கிடைத்த கருவாட்டைச் சேர்க்கலாம். முள் இல்லாமல் துண்டாக இருந்தால் நல்லது.
எல்லாம் சேர்ந்து கொதிக்கட்டும்.
தேங்காய் அரைத்தது சேர்க்கவும்.
கொதித்தவுடன் அணைக்கவும். விரும்பினால் நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.
சுவையான கருவாட்டு கத்திரிக்காய்க் குழம்பு தயார்.
சூடான சாதத்துடன் பரிமாறவும்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

யப்பா...! சூப்பருங்க...!!!