Friday, January 29, 2016

கோழி அவரைப் பொரியல் / Field beans poriyal

அவரைக்காயில் பல வகை இருக்கிறது. இன்று கோழி அவரைக்காயில் பொரியல் செய்திருக்கிறேன். பிடித்திருந்தால் நீங்களும் செய்து பாருங்க.

 தேவையான பொருட்கள்;
கோழி அவரை - 300 கிராம்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1
தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
வறுத்து பொடித்த வேர்க்கடலை 1 .1/2 - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
தாளிக்க :
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு,உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்
கிள்ளிய காய்ந்த மிளகாய் வற்றல் -1 
கருவேப்பிலை - 1இணுக்கு.
இந்த பொரியலிற்கு வறுத்து பொடித்து சேர்க்க வேண்டிய பொருட்கள்;

சிறிய மிளகாய் வற்றல் - 3
சீரகம் ,சோம்பு - தலா கால் டீஸ்பூன்
முழு மல்லி - அரை- 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 இணுக்கு.
விரும்பினால் இத்துடனும் வேர்க்கடலை சிறிது சேர்த்து வறுக்கலாம்.


செய்முறை:-


 கோழி அவரையை விளிம்பு ஒடித்து நார் எடுக்கவும்.பின்பு சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.


 மேற் சொன்னவற்றை வறுத்து பொடி செய்து வைக்கவும்.


 கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு,உளுத்தம் பருப்பு,வற்றல்,கருவேப்பிலை போட்டு வெடிக்க விடவும்.
 வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 நறுக்கிய அவரைக்காய் சேர்க்கவும்.நன்கு பிரட்டவும்.
 தேவைக்கு மஞ்சள் தூள் கால் டீஸ்பூன் சேர்க்கவும்.
சிறிது  உப்பு சேர்க்கவும்.
 நன்கு பிரட்டவும்.
 பொடித்த மசால் சேர்க்கவும்.
 பிரட்டி தண்ணீர் தெளித்து மூடி வேக விடவும்.

 வெந்த பின்பு தேங்காய்த் துருவல் வேர்க்கடலை பொடித்தது சேர்க்கவும்.
 ஒரு சேர பிரட்டவும். சிறிது அடுப்பை சிம்மில் வைத்து அணைக்கவும்.உப்பு சரி பார்க்கவும்.

 சுவையான சத்தான கோழி அவரைப் பொரியல் ரெடி.
இதனை சாதம்,சப்பாத்திக்கு  பக்க உணவாகப் பரிமாறலாம்.

Tuesday, January 19, 2016

மீன் பொளிச்சது / Meen Polichathu (steamed)

இக்குறிப்பை நமக்காக அனுப்பியவர் திருமதி.கசானா ரசூல்.பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி.
தேவையான பொருட்கள்;
முதலில் செய்யவேண்டியது:
பிடித்த மீன் மீடியம் சைஸ் - 2 ( ஐவாவல், கறிமீன், பாரை.சீலாமீன் துண்டு என்றுஏதாவது )
சிறிது மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள்,மிளகுத்தூள்,உப்பு,லெமன் ஜூஸ் சேர்த்து விரவி ஒரு அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
அடுத்து விரவிய மீனை தவாவில் சிறிது எண்ணெய் விட்டு லேசாக பொரித்து எடுக்கவும்.முறுக பொரிக்க வேண்டாம்.
இனி மசாலா செய்ய:
கடாயில்  மீன் பொரித்த எண்ணெய் விட்டு கடுகு,உளுத்தம் பருப்பு,சோம்பு, கருவேப்பிலை சேர்க்கவும்.
பின்பு நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் சிவந்து வரும் பொழுது நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.நன்கு மசியட்டும்.அத்துடன் சிறிது மஞ்சள் தூள், மிளகாய்த்தூள்,சிறிது கரம் மசாலா, மிளகுத்தூள்,உப்பு சேர்த்து கலந்து சிறிது பிரட்டவும்.
அத்துடன் கெட்டியான தேங்காய்ப்பால் சிறிது சேர்க்கவும்.நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.எண்ணெய் வெளியே வரும் வரை சிம்மில் வைக்கவும்.
தயார் ஆனவுடன் அடுப்பை  அணைத்து மசாலாவை ஆற விடவும்.

வாழையிலையை நன்கு அலசி துடைத்து வைக்கவும்.
வாழையிலையில் தயார் செய்த மசாலா வைத்து அதன் மேல் மீன் வைத்து மீண்டும் மீன் மேல் சிறிது மசாலா வைத்து வாழையிலை யை மடித்து டூத் பிக் வைத்து பிரிந்து விடாதபடி செய்யவும்.
இதனை இப்படியே தவாவில் வைத்து சுட்டும் எடுக்கலாம்.


அல்லது தயார் செய்த வாழையிலை மடிப்பை அலுமினிய ஃபாயில் கொண்டு கவர் செய்யவும். கவர் செய்ததை மீண்டும் இட்லி பாத்திரத்தில் வைத்தோ அல்லது ஸ்டீமரில் வைத்தோ ஆவியில்  வேக விட்டு எடுக்கவும்.
வெந்த பின்பு கவனமாக பிரித்தால்
கேரளாவின் மீன் பொளிச்சது தயார்.
சூப்பராக வாழையிலை மணத்துடன் இருக்கும். ருசியும் அசத்தலாக இருக்கும்.
இக்குறிப்பை நமக்காக அனுப்பியவர் திருமதி. கசானா ரசூல்.ஷார்ஜா.மிக்க நன்றி.
அவர் தேவையான பொருட்களின் அளவு கொடுக்கவில்லை. செய்முறையை மட்டுமே பகிர்ந்துள்ளார். உங்கள் சுவைக்கேற்ப பொருட்களை சேர்த்துக் கொள்ளவும்.

Thursday, January 14, 2016

சீமை சுரைக்காய் / சுக்கினி மசாலா/ Zucchini / Courgette Masala

 தேவையான பொருட்கள்;
நறுக்கிய சுக்கினி (சிறியது)- 3 எண்ணம் (கால் கிலோ)
நறுக்கிய  வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு,உ.பருப்பு - தலா அரை டீஸ்பூன்
தட்டிய பூண்டு - 3 பல்
கருவேப்பிலை- சிறிது
சாம்பார் பொடி அல்லது பொரியல் பொடி - 1- 2 டீஸ்பூன்
தேங்காய் துருவல்  - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
செய்முறை:

 சுக்கினியை இப்படி மெலிதாகவோ சிறிய துண்டாகவோ நறுக்கி கொள்ளலாம்.
 கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,உ.பருப்பு- தலா அரை டீஸ்பூன்
தட்டிய பூண்டு - 3 பல்
கருவேப்பிலை- சிறிது சேர்த்து தாளிக்கவும்.
பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். சுக்கினி சேர்க்கவும்.சிறிது உப்பு சேர்த்து பிரட்டி வேக விடவும்.
 வெந்து வரும் பொழுது சாம்பார் பொடி சிறிது சேர்க்கவும்.நன்கு பிரட்டவும்.
 நறுக்கிய தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் மூடவும்.

 திறந்து தேங்காய்த் துருவல் சேர்க்கவும்.
 பிரட்டி விடவும்.
 அடுப்பை அணைக்கவும்.
சுவையான சுக்கினி மசாலா ரெடி. 
சுக்கினியை தமிழில் சீமை சுரைக்காய் என்பர். பிடித்தால் செய்து பாருங்க.

Monday, January 11, 2016

கல்மி கபாப் / Kalmi Kebab

பல முறை செய்தாலும் இந்தக் குறிப்பு கொடுக்காமலே விட்டு போய்விட்டது.எனவே இப்ப பகிர்ந்தாச்சு.
தேவையான பொருட்கள்;
முதலில் ஊற வைக்க:
சிக்கன் லெக் பீஸ் - 12 - 15 எண்ணம் (பெரியதாக) ( ஒன்னரை - 2 கிலோ)
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ் - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
இரண்டாவது சேர்க்க வேண்டியவை:
கெட்டி தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
ஃப்ரெஷ் கிரீம் - 1 டேபிள்ஸ்பூன்
முட்டை வெள்ளைக்கரு - 1
விரும்பினால் - முந்திரி பேஸ்ட் 1 டேபிள்ஸ்பூன்
சீரகத்தூள் - 1டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
தந்தூரி மசாலா - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 1 -2 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவைக்கு.
இறுதியாக தடவ பட்டர் - ஒரு கியூப், அலங்கரிக்க எலுமிச்சை வெங்காய துண்டுகள்.
செய்முறை:

ஃப்ரெஷ் சிக்கன் லெக் பீஸ் தோல் நீக்கி நன்கு அலசி மசாலா உள்ளே இறங்க வசதியாக கீறி விட்டுக் கொள்ளவும்.
இறுதியாக மஞ்சள் நீரில் அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.
மேற்சொன்னபடி பொருட்கள் சேர்த்து முதலில் அரை மணி ஊற வைக்கவும்.
பின்பு இரண்டாவது சொன்ன பொருட்கள் சேர்த்து நன்கு கலந்து மீண்டும் சுமார் குறைந்தது 2 மணி நேரமாவது ஊற வைக்கவும்.

கேஸ் ஓவன் அல்லது பார்பிகியூ அடுப்பில் மீடியம் அனலில் சுட்டு எடுக்கவும்.
கேஸ் ஓவன் என்றால் ஒரு பக்கம் வேக அரைமணி நேரம் ,மறுபக்கம் வேக அரைமணி நேரம் மொத்தம் ஒரு மணி நேரம் ஆகும்.எலெக்ட்ரிக் ஓவனிலும் செய்யலாம்.
சுவையான கல்மி கபாப் ரெடி.
சுட்டு எடுத்த சிக்கன் கபாபில்  சிறிது பட்டர் தடவி, எலுமிச்சை வெங்காய துண்டுகள் அலங்கரித்து பரிமாறவும்.
இதனை ஒரு சிலர் மூர்க் மலாய் கபாப் அல்லது ரேஸ்மி கபாப் என்று கூட சொல்றாங்க.

Tuesday, January 5, 2016

புளியோதரை / Puliyotharai

 தேவையான பொருட்கள்;
வறுத்துப் பொடிக்க:
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடலை பருப்பு - 1டேபிள்ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
வெந்தயம் - கால் டீஸ்பூன்.

(முதலில் சிறிது வேர்க்கடலையை வறுத்து தனியே வைக்கவும், சாதத்தில் சேர்க்க..)

மேற்கூறியவற்றை அதே எண்ணெயில் வறுத்து ஆற விட்டு பொடிக்கவும்.

செய்முறை:
புளியோதரை செய்ய
 ஒரு கப் அளவு அரிசியில் சாதம் வடித்து வைக்கவும்.எலுமிச்சை அளவு புளியை கரைத்து வைக்கவும்.

ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு ஒரு டீஸ்பூன் கடுகு, வற்றல் -2, 2  இணுக்கு கருவேப்பிலை,கடலை பருப்பு,உளுந்தம்பருப்பு தலா ஒரு டீஸ்பூன் சேர்க்கவும், பெருங்காயம்,மஞ்சள் தூள் சிறிது சேர்க்கவும்.கரைத்து வைத்த புளித்தண்ணீர் ஒரு கப் சேர்க்கவும், வறுத்துப் பொடித்ததை சேர்க்கவும். உப்பு தேவைக்கு சேர்க்கவும்.நன்கு கொதித்து வற்றி வரும். ஏற்கனவே வறுத்த வேர்க்கடலை சேர்க்கவும்.

தொக்கு போல் ஆனவுடன் அடுப்பை அணைக்கவும்.
ஆறிய பின்பு பாட்டிலில் எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து பின்பும் பயன் படுத்தலாம்.
 இல்லையெனில் ரெடி செய்த புளியோதரை தொக்கில் வடித்த சாதம் போட்டு கிளறி மூடி வைத்து,  பொரித்த பப்படம்,வடகத்துடன் பரிமாறலாம்.
இதே முறையில் செய்து பாருங்க. சூப்பராக இருக்கும்.கட்டுசாதத்திற்கு இந்த முறை அருமை.

ரெசிப்பி பகிர்வு - திருமதி பாத்திமா இப்ராஹிம், கொச்சி. மிக்க நன்றி.