Thursday, April 21, 2016

மேலப்பாளையம் கத்திரிக்காய் ஆணம் / சால்னா / kathirikai Aanam/ Brinjal Aanam / Salna

மேலப்பாளையத்தில் வெறும் சோறுடன் மட்டன் சால்னாவுடன் இந்த கத்திரிக்காய் ஆணமும் பரிமாறுவது பிரசித்தம்.
இதில் பருப்பு சேர்ப்பது இல்லை. நெய்ச்சோறு,தேங்காய்ச்சோறுக்கு பருப்பு கத்திரிக்காய் பரிமாறுவார்கள்.இதே முறை ஆனால் அரிசி மாவு கரைத்து விடுவதற்கு பதில் வேக வைத்த  துவரம் பருப்பு உடன் சேர்ப்பார்கள்.இது தான் வித்தியாசம்.

கத்திரிக்காய் ஆணம் செய்முறை இதோ!!
தேவையான பொருட்கள்:-
கத்திரிக்காய் - கால் கிலோ
விரும்பினால் தடியங்காய் - ஒரு சிறிய துண்டு
பெரிய வெங்காயம் - 1
பெரிய தக்காளி - 1
பச்சை மிளகாய் -2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
ஏலம் பட்டை கிராம்பு தூள் - கால்டீஸ்பூன்
ஊர் மசாலாத்தூள்-  ஒன்னரை - 2 டேபிள்ஸ்பூன்
கால்டீஸ்பூன் - மிளகாய்த்தூள் விரும்பினால்
புளி -  எலுமிச்சை அளவு
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
நறுக்கிய மல்லி புதினா இலை - சிறிது.
தாளிக்க:-
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு,வெந்தயம் - தலா அரைடீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1டீஸ்பூன்
கிள்ளிய மிளகாய் வற்றல் - 2
நறுக்கிய வெங்காயம் - சிறியது ஒன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட்- கால் டீஸ்பூன்
கருவேப்பிலை - 2 இணுக்கு.

செய்முறை:-
நறுக்கவேண்டியவற்றை நறுக்கி வைக்கவும்.

குக்கரில் நறுக்கிய கத்திரிக்காய், வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்,மல்லி புதினா ,இஞ்சி பூண்டு சேர்க்கவும்.
மசாலா தூள்,கரம் மசாலா, விரும்பினால் மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
  

புளி கரைத்து விட்டு உப்பு தேவைக்கு சேர்த்து குக்கரில் இரண்டு விசில் வந்தவுடன்,அடுப்பை அனைத்து ஆவியடங்கியவுடன் திறக்கவும்.
திறந்து 1 டேபிள்ஸ்பூன் கூட்டு மாவு(அரிசி மாவு) வை ஒரு கப் தண்ணீரில் கரைத்து விடவும்.
விரும்பினால் ஒரு கப் சோறு  வடித்த கஞ்சியும் சேர்க்கலாம்.கூட்டு மாவு கரைசல் அல்லது கஞ்சி எது விருப்பமோ அதை கெட்டிதன்மைக்கு சேர்க்கலாம்.
கொதி வரவும் அடுப்பை அணைக்கவும்.தாளிக்க மேற்சொன்னபடி சாமான் சேர்த்து தாளித்து கொட்டவும்.
சுவையான கத்திரிக்காய் ஆணம் ரெடி. இதனை வெறும் சோறு,மட்டன் சால்னாவுடன் பரிமாறலாம். முதலில் மட்டன் சால்னா சோறு,அடுத்து கத்திரிக்காய் ஆணம் விட்டு சாப்பிடுவது வழக்கம்.
திருமண விருந்து கூட இந்த காம்பினேஷனில் நடக்கும்.
வெறும் சோறு கறியாணம், கத்திரிக்காய் ஆணம்.
இது செமையாக இருக்கும்.

Tuesday, April 19, 2016

கருவேப்பிலை ஆம்லட் / Curry leaves omlette



தேவையான பொருட்கள்:-
முட்டை - 2
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொழுந்து கருவேப்பிலை - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு மிளகுத்தூள் - தேவைக்கு. 

மேற்சொன்ன பொருட்களை ஒரு பவுலில் போட்டு லகலந்து கொள்ளவும்.

 ஒரு கடாயில் தேவைக்கு எண்ணெய் வித்து சூடு ஆனவுடன் முட்டைக்கலவையை விடவும்.
 ஒரு பக்கம் வெந்தவுடன் மறுபக்கம் திருப்பி போட்டு எடுக்கவும்.
சுவையான சத்தான கருவேப்பிலை ஆம்லட் ரெடி.
பேலியோ டயட் இருக்கிறவங்க முட்டை எடுக்கும் பொழுது இந்த முறையை முயசிக்கலாம்.

ப்ரெஷ் கருவேப்பிலை கிடைத்தால் செய்து பாருங்க.

Friday, April 15, 2016

சிறப்பு விருந்தினர் பகிர்வு -34, திருமதி சுல்தானா நஸீம் / மலபார் மீன் பிரியாணி / Guest post -34 / Malabar Fish Briyani

இன்றைய சிறப்பு விருந்தினர் திருமதி.சுல்தானா நஸீம் , பிறந்தது வளர்ந்தது நெல்லை ஏர்வாடி, தகப்பனாரின் பிசினஸ் காரணமாக கொச்சினில் பள்ளி,கல்லூரி படிப்பு முடித்து, நெல்லையில் திருமணமாகி வந்து, கணவரின் பணி நிமித்தமாக சென்னையில் வசித்து வருகிறார். பொழுதுபோக்காக  நிறைய வாசிப்பது, தோட்டவேலை,ஆன்லைன் ட்ரேடிங் செய்வதாக சொல்கிறார்.விதம் விதமாக சமைப்பது மிகவும் பிடிக்குமென்றும் கணவர் கொடுக்கும் ஊக்கமே காரணம் என்கிறார்.அன்பான மாமா,அன்புத்தோழி போன்ற மாமி,மற்றும் கொழுந்தனார் என்ற இனிமையான குடும்பம். செல்லமான தன் தம்பி மீது மிகவும் பிரியம் என்கிறார்.கொச்சினில் படித்து வளர்ந்ததால் கேரள சமையல் மிகவும் பிடிக்குமாம்.
 நல்வாழ்த்துக்கள் சுல்தானா.
இவர் பகிரவிருக்கும் குறிப்பு:-
மலபார் மீன் பிரியாணி:

தேவையானபொருட்கள்:-
மீன் மசாலாவிற்கு:-
வஞ்சிரம் மீன் ,பாறை மீன், வாவல் அல்லது ஏதாவது பிரியாணிக்கு உகந்த மீன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2 பெரியது
தட்டிய இஞ்சி பூண்டு தலா- 1 டேபிள்ஸ்பூன்
தட்டிய பச்சை மிளகாய் - 1 டேபிள்ஸ்பூன்
தக்காளி 3 மீடியம் சைஸ்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
தயிர் - கால் கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கு.

மீன் பொரிக்க மசாலா தடவி ஊற வைக்க:
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் -1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சிபூண்டு பச்சை மிளகாய் பேஸ்ட்-1டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 4
உப்பு - தேவைக்கு.

அரைக்க:-
தேங்காய்த்துருவல் -2 டேபிள்ஸ்பூன்
கசகசா -1/2 டேபிள்ஸ்பூன்
தயிர் கால் கப்

ரைஸ் தயார் செய்ய:-
பாசுமதி ரைஸ் -2 கப்ஸ்
தண்ணீர் - 4 கப்
ஏலக்காய் -6
கிராம்பு -6
பட்டை - 2 துண்டு
நட்சத்திர மொக்கு -2
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய அன்னாசி துண்டுகள் சிறிது அல்லது எசென்ஸ்
நறுக்கிய புதினா - 2டேபிள் ஸ்பூன்
நறுக்கிய மல்லி - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

செய்முறை:-
மீன் பொரிக்க மேற்சொன்னபடி மசாலா தயார் செய்து அரைத்து சுத்தம் செய்த மீனில் தடவி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.அரைக்க சொன்ன தேங்காய் மசாலா அரைத்து வைக்கவும்.
மீனை சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு பேனில் பொரித்து எடுக்கவும்.அதே பேனில் நெய் சேர்த்து 


வெங்காயம் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
வெங்காயம் வறுத்த பின்பு அதே கடாயில் மீன் மசாலாவிற்கு தயார் செய்ய இஞ்சிபூண்டு மிளகாய் தத்தியது சேர்த்து வதக்கவும்.மிளகாய்த்தூள் மல்லித்தூள் சேர்க்கவும்.வதக்கி தக்காளி சேர்க்கவும்.
தக்காளி நன்கு மசிந்தவுடன் அரைத்த தேங்காய் பேஸ்ட் சேர்க்கவும்.

நன்கு பிரட்டி விடவும்.பொரித்த மீன் சேர்க்கவும்.மசாலாவில் மீன் மூழ்கி இருக்க வேண்டும்.நறுக்கிய மல்லி புதினா சேர்க்கவும்.

இனி ரைஸ்தயார் செய்ய வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விடவும்.சூடானவுடன் ஏலம்,பத்தை கிராம்வு சேர்க்கவும்.
ஊறவைத்த அரிசியை சேர்க்கவும்.பிரட்டி விடவும்.
நான்கு கப்  கொதி நீர் சேர்க்கவும்.உப்பு,மல்லி,புதினா சேர்க்கவும்.பைனாப்பிள் எசன்ஸ் சேர்க்கவும்.
சோறு நன்கு வெந்து வர வேண்டும்.மூடி வைக்கவும்.


பிரியாணி தம் போடும் பாத்திரத்தில் மீன் மசாலா அடுத்த   லேயர் சோறு அடுத்தலேயர் மீன் மசாலா, அடுத்து சோறு மேலே பொரித்த வெங்காயம்,வறுத்த முனந்திரி, கிஸ்மிஸ்,சிறிது கரம் மசாலா தூவி தம்மில் போடவும்.
தம் ஆனவுடன் திறந்து பிரட்டி பரிமாறவும்.
சுவையான அடி பொலி மலபார் மீன் பிரியாணி ரெடி.பச்சடி,பப்படத்துடன் பரிமாறவும்.
சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து அசத்தியமைக்கு சுல்தானாவிற்கு மனமார்ந்த நன்றி மற்றும் மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

Wednesday, April 13, 2016

அயிரை மீன் குழம்பு - முறை 2 / Ayirai meen Kuzhambu / method -2


தேவையான பொருட்கள்:-
அயிரை மீன்  - கால் கிலோ
நீள் வாக்கிள் நறுக்கிய பெரிய வெங்காயம் - கால் கிலோ
தக்காளி - 2
பச்சை மிளகாய் -  2
நறுக்கிய பூண்டு பற்கள் - 6
மல்லி,கருவேப்பிலை - சிறிது
எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன்
கடுகு,வெந்தயம் - தலா அரைடீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரைடீஸ்பூன்
வீட்டு மீன் மசாலா -2 டேபிள்ஸ்பூன்
புளி - சிறிய எலுமிச்சை அளவு ஊற வைக்கவும்.
உப்பு. - தேவைக்கு.
அரைக்க:-
தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
முந்திரி குருணை - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:-
அயிரை மீனை நன்கு உப்பு போட்டு மூடி வைக்கவும்.பின்பு நன்கு உலசி தண்ணீர் வைத்து அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.
மீன் மசாலா ஒரு டேபிள்ஸ்பூன் புளித்தண்ணீர்,உப்பு சிறிது சேர்த்து கலந்து வைக்கவும்.

நறுக்க வேண்டியவைகளை தயார் செய்து கொள்ளவும்.
 
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானவுடன் கடுகு,உளுத்தம்பருப்பு,வெந்தயம்,கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.அத்துடன் நறுக்கிய வெங்காயம்,தக்காளி, மிளகாய்,பூண்டு சேர்க்கவும்.
சிறிது உப்பு போட்டு வதங்க விடவும்.
மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
மீதி ஒரு டேபிள்ஸ்ப்பூன் மசாலா, புளித்தண்ணீர் சேர்க்கவும்.
கொதிக்க விடவும்.

மசாலா புளித்தண்ணீர் பிரட்டிய மீனைச் சேர்க்கவும்.இப்படி பிரட்டி வைப்பதால் உப்பு,புளி,மசாலா மீனில் பிடிக்கும்.மீன் உடையாது
மீன் வெந்து வரட்டும்
உப்பு சரி பார்க்கவும்.

தேங்காய் முந்திரி அரைத்த விழுது சேர்க்கவும்.

சிம்மில் வைத்து கொதிக்க வைக்கவும்.
அடுப்பை அணைக்கவும்.நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.
சுவையான அயிரை மீன் குழம்பு ரெடி.
இதனை வெறும் சோறு, ரசம், பொரித்த அப்பளம், கீரை பொரியல் இவற்றுடன் பரிமாறலாம் .அரிசி மாவு ரொட்டியுடன் பரிமாற செமையாக இருக்கும்.



ஆறு வருடங்களுக்கு முன் பகிர்ந்த அயிரை மீன் கூட்டு செய்முறையைக் காண இங்கே கிளிக்கவும்.

Friday, April 8, 2016

சிறப்பு விருந்தினர் பகிர்வு - 33, திருமதி ஹமீதா ஹாரிஸ் - மட்டன் சாப்ஸ் / Guest post / Mutton chops by Mrs.Hameedha Harris

இன்றைய சிறப்பு விருந்தினர் திருமதி ஹமீதா ஹாரிஸ்.
நெல்லையில் பிறந்து வளர்ந்து,படித்து திருமணத்திற்கு பின்பு கணவரின் பணி நிமித்தமாக பெங்களூருவில் வசித்து வருகிறார்.அன்பான கணவர்,இரண்டு செல்வ மகன்கள், பாசமான மாமனார் மாமியார் என்ற இனிமையான குடும்பம்.
நல்வாழ்த்துக்கள் ஹமீதா!!
தன்னுடைய செல்ல செல்வ மகன்களின் படத்தையும் பகிர்ந்துள்ளார்.
செல்லங்களுக்கு நம் அனைவர் சார்பாகவும் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.

இனி அவர் பகிரவிருக்கும் குறிப்பு : 
மட்டன் சாப்ஸ்:

 தேவையான பொருட்கள்:

குக்கரில் வேக வைக்க:
மட்டன் சாப்ஸ் செய்ய ஏதுவாக மட்டன் எலும்புடன் கட் செய்தது  - அரைக்கிலோ
நறுக்கிய வெங்காயம்,தக்காளி  - தலா 1
மல்லி,புதினா,இஞ்சி பூண்டு பேஸ்ட்
சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
வீட்டு கறிமசாலா - 2- 3 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவைக்கு.

டிப் செய்து பொரிக்க:
 முட்டை -2
மிளகு - தேவைக்கு.

 மேற்சொன்னபடி குக்கரில் மட்டனுடன் பொருட்கள் சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து வேக வைகவும்.
 வெந்த பின்பு சுண்ட வற்ற வைக்கவும்.

 பின்பு  மிளகு சேர்த்து அடித்த முட்டையில் டிப் செய்து
 ஒரு நாண்ஸ்டிக் பேனில் எண்ணெய் சூடு செய்து முறுக பொரித்து எடுக்கவும்.

சுவையான மட்டன் சாப்ஸ் ரெடி.
இதனை நெய்சோறு,தேங்காய்ச் சோறு,பிரியாணி அல்லது வெறும் சோற்றுடன் கூட பக்க உணவாகப் பரிமாறலாம்.

ஹமீதா சுவையான பகிர்வுக்கு நெஞ்சார்ந்த நன்றி.மகிழ்ச்சி.
மீண்டும் ஒரு சிறப்பு விருந்தினர் பகிர்வோடு சந்திக்கிறேன்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

Sunday, April 3, 2016

சாஃப்ரான் சோறு / சாஃப்ரான் ரைஸ் / Saffron rice / Yellow rice

சாப்ரான் ரைஸ் நல்ல மணமாக இருப்பதோடு ஆரோக்கியமானதும் கூட.இப்படி ரைஸ் செய்து கிரில்டு சிக்கன் அல்லது அவித்த சிக்கனுடன் அல்லது சிக்கன் மட்டன் கிரேவியுடன் கூட பரிமாறலாம். லேயர் பிரியாணி செய்யும் பொழுது கூட இப்படி ரைஸ் செய்து ஒரு அடுக்கு மட்டன் அல்லது சிக்கன் கிரேவி ,பின்பு சாப்ரான் ரைஸ் என்று வைத்து தம் போட்டும் எடுக்கலாம்.
தேவையான பொருட்கள்:
பாசுமதி அல்லது சீரக சம்பா - 2 கப்
எண்ணெய் நெய் கலந்து - 4 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1டேபிள்ஸ்பூன்
ஏலம் பட்டை கிராம்பு - தலா 2
தயிர் 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி -1(விரும்பினால்)
பச்சை மிளகாய் -2
நறுக்கிய மல்லி,புதினா சிறிது
உப்பு - தேவைக்கு.
சாப்ரான் - பெரிய பின்ச் பொடித்துவெது வெதுப்பான பாலில் அல்லது நீரில் ஊற வைக்கவும்.
செய்முறை:-
அரிசியை கழைந்து ஊற வைக்கவும்.
முதலில் பவுலில் தயிர்,இஞ்சி பூண்டு,பட்டை,ஏலம்,கிராம்பு,பச்சைமிளகாய்,மல்லி,புதினா கலந்து வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் நெய் விட்டு, நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் லேசாக வதங்கி வரும் போது பவுலில் ரெடியாக வைத்த கலவையை சேர்த்து வதக்கவும்.விரும்பினால் நான்காக நறுக்கிய சிறிய தக்காளி சேர்க்கவும்.
அரிசியின் அளவிற்கு இரண்டு மடங்கு தண்ணீர் விடவும்.உப்பு தேவைக்கு சேர்க்கவும்.

கொதிவரவும் அரிசி சேர்க்கவும். மூடி போட்டு சிம்மில் வைக்கவும்.
அரிசி மேலே வெந்து வரும் பொழுது சாப்ரான் கரைசலை தெளிக்கவும்.

மூடி போட்டு தம்மில் பத்து நிமிடம் வைக்கவும்.
அடுப்பை அணைத்து சிறிது நேரம் கழித்து பிரட்டிவிடவும்.
பார்ப்பதற்கு அழகான இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
விருப்பமான பக்க உணவுடன் பரிமாறவும்.