Monday, October 31, 2016

சீஸ் ஆம்லெட் / Cheese Omlette


தேவையான பொருட்கள்;-
முட்டை - 2
வெண்ணெய்- 1-2 டேபிள்ஸ்பூன்
மொசரல்லா சீஸ் - 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய கொடைமிளகாய் , சிவப்பு, மஞ்சள், பச்சை தலா 1-2 டேபிள்ஸ்பூன் ( தேவைக்கு சிறிது)
நறுக்கிய வெங்காயத்தாள் - 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய பார்ஸ்லி இலை அல்லது மல்லி இலை - 2 டேபிள்ஸ்பூன்
பொடித்த மிளகு, உப்பு - சுவைக்கு.
செய்முறை:-

முதலில் கொடைமிளகாய், வெங்காயத்தாள், வெங்காயம், பார்ஸ்லி அல்லது மல்லி இலை, பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.
ஒரு பவுலில் முட்டை அத்துடன் நறுக்கியவற்றை சேர்க்கவும்.சுவைக்கு உப்பு, பொடித்த மிளகு சேர்க்கவும்.நன்கு கலந்து கொள்ளவும்.
ஒரு கடாயில் வெண்ணெய் சேர்க்கவும். உருகி வரும் பொழுது முட்டை கலவையை சேர்க்கவும்.சிறிது மூடவும்.அடுப்பை மீடியமாக வைக்கவும்.
பின்பு திறந்து பிரட்டி விடவும்.
மேலே சீஸ் தூவவும்.சிறிது மூடவும்.
திறந்து தட்டிற்கு மாற்றி நறுக்கிய வெங்காயத்தாள் அலங்கரித்து பரிமாறவும்.
சுவையான சத்தான சீஸ் ஆம்லட் தயார்.
- ஆசியா உமர்.

Sunday, October 30, 2016

சப்போட்டா வெனிலா மில்க் ஷேக் / Chikoo / Sapota vanilla milk shake

தேவையான பொருட்கள்;-
சப்போட்டா பழம் - 2
( இது சேலத்து மாம்பழம் மாதிரி சேலத்து சப்போட்டா - செம , அன்புடன் நட்பு கொண்டு வந்தது)


தோல் எடுத்து துண்டு போட்டுக் கொள்ளவும்.
 200 மில்லி காய்ச்சிய பாலோடு இரண்டு பழம், 2 டீஸ்பூன்  பனங்கற்கண்டு, சில துளி வெனிலா எசன்ஸ் சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு கவனமாக அடித்து எடுக்கவும்.
சுவையான ஹெல்தி  சப்போட்டா வெனிலா மில்க் ஷேக் தயார். பிரியமானால் ஐஸ் கட்டிகள் சேர்த்து அடித்துக் கொள்ளலாம்.

Friday, October 28, 2016

மட்டன் பிரியாணி / புலாவ் (குக்கர் முறை) / Mutton Briyani /Pulav( Pressure cooker method)

தேவையான பொருட்கள்;-
பாசுமதி அல்லது சீரக சம்பா அரிசி - அரைக்கிலோ
மட்டன் அரைக்கிலோ
எண்ணெய் - 50 மில்லி
நெய் - 50 மில்லி
ஏலம் - 2
கிராம்பு -2
பட்டை - 2 சிறிய துண்டு
பிரியாணி இலை - 1
பெரிய வெங்காயம் - 2
பெரிய தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
எலுமிச்சை - பாதி
மல்லி புதினா - பாதி கட்டு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒன்னரை + அரை டேபிள்ஸ்பூன்
தேங்காய்பால் - அரை கப் (விரும்பினால்)
தண்ணீர் - 1:2
உப்பு - தேவைக்கு.
மட்டனுடன் ஊற வைக்க:-
தயிர் - 100 மில்லி
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
இஞ்சி பூண்டு-    அரை டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா பொடித்துக் கொள்ளவும். ( சோம்பு அரை டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன்,ஏலம்  3, கிராம்பு-3, பட்டை,ஒரு துண்டு ) உங்கள் பிரியம் வேறு வாசனைப் பொருட்கள் வேண்டு மானாலும் சேர்க்கலாம்.
உப்பு - அரை டீஸ்பூன்.

செய்முறை:-

மட்டனுடன் ஊற வைக்க சொன்ன பொருட்கள்  சேர்த்து ஊற வைக்கவும்.
அரிசியை அலசி ஊற வைக்கவும்.
குக்கரில் எண்ணெய், நெய் விட்டு சூடானவுடன் ஏலம்,பட்டை கிராம்பு பிரியாணி இலை சேர்க்கவும்.நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது ஒன்னரை டேபிள்ஸ்பூன் சேர்க்கவும்.
நன்கு வதங்க விடவும்.
நறுக்கிய தக்காளி பச்சை மிளகாய், நறுக்கிய பாதி புதினா  மல்லி இலை சேர்க்கவும்.

பிரட்டி விட்டு உப்பு சேர்த்து மூடி வதங்க விடவும். காரம் அதிகம் விரும்புவோர் அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்க்கலாம்.மூடி நன்கு வதங்க விடவும்.
ஊறிய மட்டன் சேர்க்கவும்.
நன்கு பிரட்டி விடவும்.
பாதி தண்ணீர் சேர்த்து உப்பு சரி பார்த்து மூடவும். நெருப்பை மீடியமாக வைத்து 3 விசில் விடவும்.
அரை கப் தேங்காய்ப்பாலில் மீதி தண்ணீரை கலந்து வைக்கவும்.
மூன்று விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.கறி வெந்து இப்படி இருக்கும்.
ஆவியடங்கியவுடன் திறந்து தேங்காய்பால் கலந்த தன்ணீர் விடவும். ( தேங்காய்ப்பால் சேர்ப்பது விருப்பம் பொருத்து தான்)
ஊறிய அரிசியை நன்கு தன்ணீர் வடித்து விட்டு சேர்க்கவும்.
கொதி வரவும் நறுக்கிய மல்லி புதினா இலை, எலுமிச்சை பிழிந்து குக்கரை மூடி ஆவி வரவும் வெயிட் போட்டு குக்கரை சிம்மில் பத்து நிமிடம் வைத்து அணைக்கவும்.( மிகச் சிறிய தீ)

விரும்பினால் அடியில் சூடாக்கிய பழைய தோசைக்கல் வைக்கலாம்.அடி பிடிக்காமல் இருக்கும்.
ஆவியடங்கியவுடன் திறந்து பக்குவமாக   பிரட்டி விட்டு பரிமாறவும்.
சுவையான குக்கர் மட்டன் பிரியாணி தயார்.
குக்கரில் இருந்து மாற்றி ஹாட் பாக்ஸில் வைக்கவும்.
அசத்தலான பக்க உணவுடன் பரிமாறவும்.

டிப்ஸ் :
அரிசி நன்கு காய்ந்து பழைய அரிசியாக இருந்தால் மட்டுமே ஒன்றுக்கு இரண்டு தண்ணீர் அளவு.புது அரிசி என்றால் அரை கப் குறைத்துக் கொள்ளலாம்.

நெய் மைசூர்பா / Ghee Mysorepa

 தேவையான பொருட்கள்;-
கடலை மாவு - கால் கப்
நெய் - அரை கப்
சீனி - அரை கப்
தண்ணீர் - கால் கப்
உப்பு -சிறிய பின்ச்.
செய்முறை:-
எண்ணெய் நெய் கூட 1:1 எடுத்துக் கொள்ளலாம்..
 வெது வெதுப்பாய் உருக்கிய நெய்யில்  கடலை மாவு சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து வைக்கவும்.

 ஒரு நான்ஸ்டிக் கடாயில் கால் கப் தண்ணீர், அரை கப் சீனி சேர்த்து  பாகு காய்ச்சவும். கரைந்தால் போதும்.
 துளி உப்பு சேர்க்கவும்.
 அத்துடன் நெய்யில் கரைத்த கடலை மாவை சேர்த்து கிண்டவும்.
 தீயை சிறிதாக வைத்து கை விடாமல் கிண்டவும்.
 சிறிது கெட்டியாகி நெய் ஓரத்தில் எட்டிப் பார்க்கும்.. துளி எடுத்துப் பார்த்தால் கெட்டிபடும்.

 உடனே நெய் தடவிய ஒரு தட்டில் அல்லது ட்ரேயில் சமமாக இடவும்.
 ஆறியவுடன் துண்டு போடவும்.

 கிட்ட தட்ட நானூறு கிராம் மைசூர்பா கிடைக்கும்.

வீட்டிலேயே நெய் மைசூர்பா. அசத்தியாச்சு. வாயில் போட்டால் அப்படியே கரைகிறது.ரொம்ப ஆசையாக இருந்தால் ஒரு நாளுக்கு ஒன்று சாப்பிடுங்க.
ரெசிப்பி உதவி :- நித்யா கந்தசாமி. மகிழ்ச்சி கலந்த நன்றிமா.
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.