Monday, November 28, 2016

சிக்கன் பக்கோடா /Chicken Pakoda

 தேவையான பொருட்கள்;-
சிக்கன் போன்லெஸ் - அரைக்கிலோ (சிறியதாக கட் செய்தது)
( சிக்கனில் ஊற வைக்க 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், அரைடீஸ்பூன் மஞ்சள் தூள், கால் டீஸ்பூன் கரம் மசாலா தூள், ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு)
கடலை மாவு - 6 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு - 3 டேபிள்ஸ்பூன்
சோம்புத்தூள் - 2 டீஸ்பூன்
நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
நறுக்கிய பச்சை மிளகாய் - 3
 நறுக்கிய மல்லியிலை, கருவேப்பிலை
உப்பு - தேவைக்கு
பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை:-


 சிறிய துண்டுகளாக நறுக்கிய சிக்கன் துண்டுகளை நன்கு அலசி தண்ணீர் வடித்து எடுக்கவும்.
இத்துடன் 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், அரைடீஸ்பூன் மஞ்சள் தூள், கால் டீஸ்பூன் கரம் மசாலா தூள், ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிது உப்பு சேர்த்து கலந்து ஊற வைக்கவும்.
 ஊறிய சிக்கனுடன் கடலை மாவு, அரிசி மாவு,பொடித்த சோம்பு, நறுக்கிய வெங்காயம்,மிளகாய், மல்லியிலை, கருவேப்பிலை, சிறிது சுவைக்கு உப்பும் சேர்த்து நன்கு விரவி வைக்கவும்.
 தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து விரவலாம்.பக்கோடா போடும் பதத்தில் கலவை இருக்க வேண்டும்.
 ஒரு கடாயில் எண்ணெய் காய விட்டு சிறிது சிறிதாக எடுத்து போடவும்.
நன்கு பொன்னிறமாக ஒரு போல் பொரித்து எடுக்கவும்.
சுவையான சிக்கன் பக்கோடா தயார்.
ஸ்நாக்ஸ் ஆகவும் பரிமாறலாம் அல்லது பக்க உணவாகவோ ஸ்டார்டராகவோ செய்து அசத்தலாம்.

Saturday, November 19, 2016

கோங்கூரா பப்பு / Gongura Pappu


தேவையான பொருட்கள்;-
புளிச்சக்கீரை - 2 கப்
துவரம்   பருப்பு - 100 கிராம்
 நல்ல  எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு,சீரகம் - தலா அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
நறுக்கிய  பச்சை மிளகாய் -  4
பூண்டு - 5 பல்
மிளகாய் வற்றல் - 2
உப்பு - தேவைக்கு.
செய்முறை:-

வீட்டுப்பக்கம் ஃப்ரெஷாக வாக்கிங் போகும் பொழுது பறித்து வந்தேன்.

 புளிச்சக்கீரையை காம்பு நீக்கி அலசி சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.
 பருப்பை ஊற வைத்து, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து  குக்கரில் இரண்டு விசில் வைத்து வேகவிட்டு எடுக்கவும்.
 அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சூடானவுடன் கடுகு,சீரகம்,உ.பருப்பு வற்றல் போட்டு தாளிக்கவும்.
பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு  போட்டு
நன்கு வதக்கவும்.
கீரையை சேர்த்து நன்கு வதக்கவும். உப்பு தேவைக்கு சேர்க்கவும்.
கீரையே புளிக்கும். தக்காளியோ புளியோ சேர்க்க தேவையில்லை.

கீரை நன்கு வெந்து மசிந்ததும், பருப்பு சேர்க்கவும்.கலந்து விடவும்.உப்பு சரி பார்க்கவும்.ஒரு டீஸ்பூன் நெய் மேலே விடவும்.


சுவையான கோங்கூரா  பப்பு தயார்.
சூடான சாதத்துடன் பரிமாறவும்.
அப்பளம் பொரித்தோ அல்லது  ஏதாவது ஃப்ரை அயிட்டமுடன் பரிமாறவும்.

Friday, November 18, 2016

பள்ளிபாளையம் சிக்கன் / Pallipalayam chicken

 தேவையான பொருட்கள்;-
சிக்கன் - அரைக்கிலோ அல்லது முக்கால் கிலோ
நல்ல எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கிள்ளிய மிளகாய்வற்றல் - 10 (விதை நீக்கியது)
கருவேப்பிலை - 2 இணுக்கு
சின்ன வெங்காயம் - 100 - 150 கிராம்
இஞ்சி பூண்டு பொடியாக நறுக்கியது - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன் (காரம் அவரவர் விருப்பம்)
உப்பு - தேவைக்கு.
தேங்காய்த்துருவல் - 2-3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:-
சிக்கனை சுத்தம் செய்து நன்கு அலசி தண்ணீர் வடித்து வைக்கவும். நறுக்க வேண்டியவைகளை நறுக்கி தயார் செய்யவும்.
 வாணலியில் எண்ணெய் விட்டு சூடானவுடன், கடுகு வெடிக்கவிடவும்,கருவேப்பிலை,வற்றல் சேர்க்கவும்.
இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.


சின்ன வெங்காயம் சேர்க்கவும்.வதக்கவும்.மஞ்சள் தூள் சேர்க்கவும்.
பிரட்டி விடவும். சிக்கன் சேர்க்கவும்.

நன்கு பிரட்டி உப்பு சேர்த்து சிறிது வேக விடவும்.சிக்கனில் உள்ள  தண்ணீர் வற்றி வரும். சிறிது தண்ணீர் சேர்த்து  மூடி வேக விடவும்.
திறந்து சிக்கன் வெந்து, தண்ணீர் வற்றியவுடன் மிளகாய்த்தூள் சேர்க்கவும்.நன்கு பிரட்டி விடவும்.

தேங்காய்த்துருவல் சேர்த்து  மீண்டும் பிரட்டவும்.

விரும்பினால் கருவேப்பிலை அல்லது  மல்லியிலை   தூவி அலங்கரிக்கவும்.அடுப்பை அணைக்கவும்.

சுவையான பள்ளிபாளையம் சிக்கன் தயார்.
ரசம், சாம்பார்,தயிர் சாதம் அல்லது வெரைட்டி ரைஸ் உடன் சாப்பிட செம காம்பினேஷன்.

Thursday, November 17, 2016

புதினா சிக்கன் டிக்கா / Mint chicken tikka (pan grilled)

தேவையான பொருட்கள்;-
சிக்கன் நெஞ்சுக்கறி – அரைக் கிலோ
(சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்))
அரைத்து ஊற வைக்க தேவையானவை:-
புதினா – ஒரு கைப்பிடியளவு
பச்சை மிளகாய் – 3
நறுக்கிய இஞ்சி பூண்டு – தலா 1 டீஸ்பூன்
கரம் மசாலா – கால் டீஸ்பூன் (விரும்பினால்)
எலிமிச்சை பழம் – பாதி.
உப்பு – தேவைக்கு.
கெட்டி தயிர் – 100 மில்லி
ஆலிவ் எண்ணெய் – 1 - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:- 
சுத்தம் செய்து சிக்கன் துண்டுகளை நன்கு அலசி தண்ணீர் வடித்துக் கொள்ளவும்.

புதினா, பச்சை மிளகாய், இஞ்சி ,பூண்டு உப்பு லைம் ஜூஸ் சேர்த்து அரைக்கவும்.

ஒரு பவுலில் சிக்கனோடு அரைத்த விழுது கெட்டி தயிர் சேர்த்து கலந்து குறைந்தது 4 மணி நேரம் அல்லது முதல் நாலே தயார் செய்து ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.

கிரில் செய்வதற்கு முன் ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து வெளியே வைத்து குளிர் போக விட வேண்டும்.
தவாவில் சிறிது எண்ணெய் முழுவதும் படுமாறு விடவும். தவா நன்கு சூடாக வேண்டும்.

அதில் சிக்கன் துண்டுகளை வைக்கவும். நெருப்பை மீடியமாக வைக்கவும்.மூடி வைக்கவும். ஒரு பக்கம் வெந்ததும் சிக்கன் துண்டுகளை திருப்பி வைக்கவும்.
மறுபுறமும் வெநத பின்பு எடுக்கவும்.

நல்ல மணமாக சாஃப்டாக சாப்பிட சூப்பராக இருக்கும். தயிர் சேர்ப்பதால் ஜூஸியாக இருக்கும். கரிந்து போகாமல் பக்குவமாக தவாவில் இருபுறமும் கிரில் செய்து எடுக்க வேண்டும்.

சுவையான புதினா சிக்கன் டிக்கா தயார்.

-ஆசியா உமர்.

Tuesday, November 8, 2016

சுண்டைக்காய் சாம்பார் / Turkey berry sambar

சுண்டைக்காயில் பொதுவாக புளிக்குழம்பு வைப்பாங்க. நான் சாம்பார் செய்து பார்த்தேன். ஆனால் இதில் சுவைக்காக தேங்காய் அரைத்துச் சேர்த்தேன்.அருமையாக இருந்தது.
இதையே பருப்பு சேர்க்காமல் செய்தால் புளிக்குழம்பு அவ்வளவு தான்.

தேவையான பொருட்கள்;-
பச்சை சுண்டைக்காய் - அரை கப்
பருப்பு - 50 கிராம்
பெருங்காயத்தூள் - சிறிது
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
புளி பெரிய நெல்லியளவு
உப்பு - தேவைக்கு.

அரைக்க :- 
தேங்காய் - 4 டேபிள்ஸ்பூன்

தாளிக்க :
நல்ல எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
கருவேப்பிலை - 2 இணுக்கு
மிளகாய் வற்றல் - 1

சின்ன வெங்காயம் - 10
நாட்டு தக்காளி - 1
நறுக்கிய மல்லியிலை சிறிது.

செய்முறை:-
சுண்டைக்காயை காம்பு நீக்கி நன்கு அலசிக் கொள்ளவும்.
பின்பு இடி உரலில் போட்டு தட்டவும்.
தட்டிய சுண்டைக்காயை தண்ணீரில் அலசினால் விதை எல்லாம் அடியில் தங்கி விடும்.

சுண்டைக்காயை எடுத்து இனி சமைக்கலாம்.

பருப்பை மஞ்சள் தூள்,பெருங்காயம் விரும்பினால் பூண்டு இரண்டு பல், சீரகம் கால் டீஸ்பூன் சேர்த்து  குக்கரில் இரண்டு விசில் வைத்து எடுக்கவும்.
வெந்த பருப்பை தனியாக வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சாம்பார் பொடி சுண்டைக்காய் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
வெந்த பின்பு புளி சேர்க்கவும்.

உப்பு சேர்க்கவும். நன்கு கொதிக்க விடவும்.
அத்துடன் அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்.

பருப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
மேற் சொன்ன பொருட்கள் சேர்த்து தாளித்து கொட்டவும்.
நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கவும்.

சுவையான சுண்டைக்காய் சாம்பார் தயார்.
சூடான சாதத்துடன் பரிமாற செமையாக இருக்கும்.