Tuesday, February 14, 2017

பூசணி ஹல்வா / Pumpkin halwa

இன்று எல்லோரும் கொண்டாடுகிறாங்க.நானும் கொண்டாடிட்டேன் எதுக்கு..?
நீங்கள் நினைப்பது போல் பெரிய விஷயம் ஏதுமில்லை.சிறிய சந்தோஷப் பகிர்வு.
ஏழு வருடங்கள் இந்த வலைப்பூ ஆரம்பித்து  பூர்த்தியாகிவிட்டது.
தொய்வில்லாமல் நானும் என்னால் முடிந்தளவு குறிப்புகளை பகிர்ந்து வந்திருக்கிறேன்.
வலைப்பூ தொடங்கிய ஆரம்பம், அது ஒரு வசந்த காலம்..அனைவரும் வலைப்பூக்களில் தூள் கிளப்பிக் கொண்டிருந்தார்கள்.இப்பொழுது?
முகநூல், வாட்ஸ் அப்,டுவிட்டர் என்று அங்கே போயாச்சு. விடாமல் நாங்களும்  அங்கே கடையை பரப்பியாச்சில்ல.
இன்று ஏதாவது பகிர வேண்டும் என்ற ஆசை.சமைக்கிற மூடும் இல்லை. ஃப்ரிட்ஜில் ஒரு பெரிய பூசணி உட்கார்ந்திருந்தது.இனிப்பு செய்ய வேண்டும். என்ன செய்யலாம் ? ஈசியாக   ஒரு ஹல்வா செய்து பகிர்ந்தாச்சு.
இன்று வரை வருகை புரியும் அனைத்து அன்பான நட்புள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.  மகிழ்ச்சி.
கருத்திடாவிட்டாலும் , பார்வையிடுவதை வருகை எண்ணிக்கையைப் பார்த்து தெரிந்து கொள்ள முடிகிறது.எனவே  சிறிய மகிழ்ச்சி ஏற்படத்தான் செய்கிறது.அந்த ஆர்வம் தான் குறிப்புகள் கொடுக்க உந்துதலாக இருந்து வருவதால் என் மன மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இனி குறிப்பு:-



 தேவையான பொருட்கள்:-
தோல் சீவி துண்டாக்கிய வெள்ளைப் பூசணி - அரைக்கிலோ
சீனி - 200 கிராம் ( சுவைக்கு ஏற்ப)
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி, கிஸ்மிஸ் - தேவைக்கு
ஏலக்காய்த்தூள் - 4 (சிறிது சீனியுடன் சேர்த்து பொடித்துக் கொள்ளவும்)
சாஃப்ரான் - பின்ச் ( கையால் பொடித்து வெந்நீரில் ஊற விடவும்)
உப்பு - பின்ச்.
 செய்முறை:-
 தோல் சீவி விதைகள் நீக்கி துண்டாக்கிக் கொள்ளவும்.
 பின்பு துருவிக் கொள்ளவும்.
 ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து துருவிய பூசணியைச் சேர்க்கவும்.
வேக விடவும். வெந்து தண்ணீர் வற்றி வரும்.
 சீனியைச் சேர்க்கவும்.
 பின்ச் உப்பு சேர்க்கவும்.
 சீனி கரைந்து சுண்டி வரும் பொழுது ஏலக்காய்த்தூள், சாஃப்ரான் கரைசல் சேர்க்கவும்.
 சேர்த்து கிளறினால் அழகிய எலுமிச்சை நிறம் வரும்.
 ஒரு கடாயில் நெய் விட்டு முந்திரி திராட்சை லேசாக சிவற வறுத்து எடுக்கவும்..
 தயார் ஆன பூசணி ஹல்வாவில் கொட்டவும்.
 கலந்து விட்டு ஒரு பவுலில் எடுத்துப் பரிமாறவும்.
 சுவையான பூசணி ஹல்வா தயார்.
ஒரு டப்பாவில் எடுத்து  மூடி வைத்து தேவைக்கு எடுத்து சாப்பிடலாம்.
நீங்களும் செய்து பாருங்க.
 சுவை அபாரமாக இருக்கும்.
பிரியாணிக்கு எப்பவும் தக்காளி ஸ்வீட் செய்வோம், ஒரு மாறுதலுக்கு இந்த ஹல்வா செய்து பரிமாறலாம். இல்லயெனில் சும்மாவே சாப்பிடலாம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.



4 comments:

Angelin said...

ஏழு வருஷமாச்சா !! வாவ் வாழ்த்துக்கள் ..முன்பெல்லாம் இங்கே நாம் கூட்டமா கும்மியடிக்க வருவோம் ஆரம்பநாளில் எனக்கு தமிழ் எழுத்துக்கள் வராதது அப்புறம் பழகி நானும் தமிழில் எழுத ஆரம்பிச்சி சந்தோஷமா இருந்தது முகநூல் வந்து எல்லாத்தையும் குழப்பிடுச்சி .// கமெண்ட் போடலைன்னாலும் அடிக்கடி ரெஃபெரென்ஸ் செய்ய இங்கே வரேன் நான் :) சமையல் குறிப்புகளுக்கு மிக நன்றி ஆசியா ..தொடர்ந்து எழுதவும்

இந்த பூசணி இலங்கை தமிழ் கடைல இருக்கு வாங்கி செய்துபார்க்கிறேன்

Saratha J said...

ஏழாம் ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள் ! இன்னும் நீங்கள் நிறைய பதிவுகள் வழங்கிட வாழ்த்துக்கள் ஆசியா !

athira said...

வாழ்த்துக்கள் ஆசியா... காலம் கடகடவென ஓடுகிறது.

கோமதி அரசு said...

வாழ்த்துக்கள் ஆசியா! வாழ்க வளமுடன்.
பூசணி ஹ்ல்வா அருமையாக இருக்கிறது.