Thursday, March 9, 2017

ஏர் ஃப்ரைட் மீன் பிரியாணி / Air fried fish briyani

  மீன் பிரியாணி செய்யும் பொழுது மீனைப் பொரித்து சேர்ப்போம்,  இதில் மீனை ஏர் ஃப்ரை செய்து பிரியாணி செய்தேன். செமையாக வந்தது. ஆரோக்கியமும் கூட.
தேவையான பொருட்கள்;-
மீன் - அரைக்கிலோ
மீனில் விரவ: 1  டீஸ்பூன் குவியலாக சில்லி பவுடர்,கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் , உப்பு தேவைக்கு.சுத்தம் செய்த மீனில் தடவி   தயார் செய்து வைக்கவும்.
எண்ணெய் -5 டேபிள்ஸ்பூன்
நெய் - விரும்பினால் - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு டேபிள்ஸ்பூன்
ஏலம் பட்டை கிராம்புத்தூள் - முக்கால் டீஸ்பூன்
வெங்காயம்,தக்காளி - தலா - 150 அல்லது - 200 கிராம்
பச்சை மிளகாய் - 3
மல்லி ,புதினா - சிறிது
மிளகாய்த்தூள்,மல்லித்தூள்,சீரகம், சோம்புத்தூள் - தலா அரைடீஸ்பூன்
தயிர் - கால் கப் (விரும்பினால்)
எலுமிச்சை - 1
உப்பு - தேவைக்கு.

இந்த பிரியாணிக்கு நெய் சோறு போல் ஆக்கி எடுத்து தம் போடலாம்.
அதற்கு தே .பொ:-
சீரக சம்பா - 400 கிராம்
நெய், எண்ணெய்  -தலா  1டேபிள்ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் -1
ஏலம் பட்டை கிராம்பு - தலா 2
ரம்பை இலை - 2 துண்டு
இஞ்சி பூண்டு - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - 3 கப்
உப்பு - தேவைக்கு.
 செய்முறை:-
மசால் தடவிய மீனை 180  டிகிரிக்கு   முற்சூடு செய்து பின்பு 5 நிமிடம் வைத்து செய்து எடுக்கவும்.



 நன்றாக வெந்து காணப்படும்.
 அரிசியை அரைமணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து வைக்கவும்.
நெய் சோறு தாளிக்க மேற் சொன்னவற்றை சேர்த்து தாளிக்கவும்.

 தண்ணீர் அளந்து ஒன்றுக்கு ஒன்னரை வீதம் விடவும். உப்பு சரி பார்த்து கொதி வரவும் அரிசி சேர்க்கவும். மூடி சிம்மில் வைத்து வெந்து அடுப்பை அணைக்கவும்.
 இனி பிரியாணிக்கு மசாலா தாளிக்க வேண்டும்.
 ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விடவும், சூடானவுடன் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி, கரம் மசாலா சேர்க்கவும்.
 மிளகாய் மல்லி,புதினா சேர்க்கவும்.
 நன்கு சுருள வதக்கவும்.
 தக்காளி, உப்பு சேர்த்து மூடி வதங்க விடவும்.
 மேற்சொன்ன மசாலா வகைகள் சேர்க்கவும்.
 பிரட்டி விட்டு சிம்மில் வைக்கவும்.
 தயிர் சேர்க்கவும்.
 தயிர் சேர்ப்பது உங்கள் விருப்பம்.ஒன்று சேர கலந்து விடவும்.
 ஏர் ஃப்ரை செய்த மீன் சேர்க்கவும்.
 சிறிது நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.உப்பு,புளிப்பு சரி பார்க்கவும். எலுமிச்சை பிழியவும்.
 ஆக்கி வைத்த நெய் சோற்றை மேலே பரப்பி  விரும்பினால் சாஃப்ரான்  கலர், ரெட் கலர் கரைசல் தெளிக்கவும்.
 அலுமினியம் ஃபாயில் கவர் செய்யவும்.அடியில் வாணலி வைத்து பிரியாணி பாத்திரம் வைத்து கால் மணி நேரம் சிம்மில் வைத்து தம் போடவும். அடுப்பை அணைக்கவும்.
சிறிது நேரம் கழித்து மீன் உடையாதவாறு பிரட்டி விட்டுப் பரிமாறவும்.
சுவையான மீன் பிரியாணி தயார்.
ஆனியன் ரைத்தா ,தால்சாவுடன் பரிமாறவும்.
இந்த பிரியாணி மைல்டாக அருமையாக இருக்கும்.
முள் இல்லாத மீனாக இருக்க வேண்டும் அல்லது நடுமுள் உள்ள மீன் உபயோகித்தால் சாப்பிடும் போது கவனமாக முள் எடுத்து சாப்பிட வேண்டும்.