Thursday, March 23, 2017

மலபார் செம்மீன் பிரியாணி / Malabar Prawn Briyani



தேவையான பொருட்கள்;
சீரக சம்பா அல்லது பாசுமதி அரிசி - அரைக்கிலோ
இறால் உறித்தது  - 500 கிராம்
வெங்காயம் - 4 மீடியம் சைஸ்(200 கிராம்) 
தக்காளி - 2 (100 கிராம்)
நறுக்கிய மல்லி,புதினா - தலா அரை கப்
ப்ரெஷ் கெட்டி தயிர் - அரை கப் 
எலுமிச்சை ஜூஸ் - ஒரு பழம் ( மீடியம் சைஸ்)
இஞ்சி பூண்டு  பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
ஏலம்,பட்டை, கிராம்பு - தலா இரண்டு
பிரியாணி இலை - 1
காஷ்மீரி சில்லி பவுடர் - அரைடீஸ்பூன் (காரம் அவரவர் விருப்பம்)
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 4 + 2  டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
பைனாப்பிள் எசன்ஸ் - விரும்பினால் - 1 டீஸ்பூன் ( நான் சேர்க்கவில்லை)
உப்பு - தேவைக்கு.
அலங்கரிக்க:
பெரிய வெங்காயம் சிவற வறுக்க - 1 
முந்திரி - 10 -15
கிஸ்மிஸ் - 15.

செய்முறை:-
முதலில் சுத்தம் செய்த இறாலை 1/2  டீஸ்பூன் மிளகாய்த்தூள் ,கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சுவைக்கு உப்பு, சிறிது எலுமிச்சை ஜூஸ் சேர்த்து கலந்து  வைக்கவும். 
தேவையான பொருட்களை நறுக்கி தயார் செய்து வைக்கவும்.

ஒரு கடாயில் 2 -3  டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு முந்திரி கிஸ்மிஸ் பக்குவமாக வறுத்து எடுக்கவும்.அதே எண்ணெயில் சிம்மில் வைத்து வெங்காயம் பொன்னிறமாக வறுத்து எண்ணெய் வடித்து தனியாக வைக்கவும்.

முந்திரி கிஸ்மிஸ் வெங்காயம் வறுத்த எண்ணெயில் இறாலை ரோஸ்ட் செய்து எடுக்கவும்.

இனி பிரியாணி ரைஸ் செய்ய:
2 டேபிள்ஸ்பூன் நெய் அடிகனமான பாத்திரத்தில் விடவும், ஏலம்,பட்டை கிராம்பு,பிரியாணி இலை போட்டு சிம்மில் வைத்து வெடிக்க விட்டு ஊறிய அரிசியை சேர்த்து மெதுவாக வதக்கவும்.அரிசியின் அளவிற்கு ஒன்றுக்கு ஒன்னரை அளவு கொதி நீரை விடவும் .தேவைக்கு உப்பு சேர்க்கவும்.
அடுப்பை சிம்மில் வைத்து மூடவும். தண்ணீர் வற்றி ரைஸ் பொல பொல வென்று வரும். அடுப்பை அணைக்கவும். ரைஸ் முக்கால் பதம் தான் வெந்திருக்கும்.
இனி பிரியாணிக்கு கிரேவி செய்ய:-
பிரியாணிக்கு கிரேவி செய்ய அடிகனமான பாத்திரம் எடுத்துக் கொள்ளவும்.
4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்து வரவும் .
நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.நன்கு பொன்னிறமாக வரவேண்டும்.இஞ்சி பூண்டு பேஸ்ட்  சேர்த்து வதக்கவும். நறுக்கிய தக்காளி, மல்லி, புதினா சேர்க்கவும்.சிறிது உப்பு சேர்த்து வதங்க விடவும்.தக்காளி நன்கு மசிந்து வர வேண்டும்.
.மிளகாய்த்தூள், மல்லித்தூள்,மிளகுத்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்க்கவும்.பிரட்டி விடவும். தயிர் எலுமிச்சை ஜூஸ் சேர்க்கவும்.தண்ணீர் சேர்க்கக் கூடாது.நன்கு பிரட்டி விட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்.ரோஸ்ட் செய்த இறாலைச் சேர்க்கவும்  கிரேவியில் உப்பு சரிபார்க்கவும். சிறிது எலுமிச்சை பிழிந்து விடவும்.

இனி பிரியாணிக்கு தம் செய்ய வேண்டும்.
இறால் ரெடி செய்ததில் பாதி கிரேவியோடு தனியாக எடுத்து வைக்கவும்.
மீதியுள்ள கிரேவி மீது ரெடி செய்த கீ ரைஸ் பாதி சேர்க்கவும்.விரும்பினால் அரை டீஸ்பூன் பைனாப்பிள்  எசன்ஸ் சேர்க்கவும்.அதன் மீது பாதி எடுத்து வைத்த இறால் கிரேவி சேர்க்கவும்.மீண்டும் ரைஸ் சேர்க்கவும்.வறுத்து வைத்த வெங்காயம்,முந்திரி திராட்சை சேர்க்கவும். எசன்ஸை பரவலாக விடவும். அலுமினியம் ஃபாயில் அல்லது மெல்லிய துணி கொண்டு மூடவும். தம் செய்ய ஒரு பழைய தோசைக்கலம் அல்லது தவாவை வைக்கவும். மேலே ரெடி செய்த பிரியாணி  பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் மிகச் சிறிய தீயில் தம் செய்யவும்.அடுப்பை அணைக்கவும்.10 நிமிடம் கழித்து திறக்கவும்.
கலந்து பரிமாறவும்.

சுவையான மலபார் செம்மீன் பிரியாணி தயார். ரைத்தா, பப்படம், சம்மந்தி, ஃபிஷ் ஃப்ரையுடன் பரிமாறலாம்.

No comments: