Friday, April 28, 2017

வெட்டு கேக் / Vettu cake

தேவையான பொருட்கள்:-
மைதா - 350 கிராம்
சீனி - 150 கிராம்  + 2 ஏலக்காய் பொடித்துக் கொள்ளவும்
முட்டை - 1
வெண்ணெய் - 50 கிராம்
பால் - 50 மில்லி
சோடா உப்பு - 1/4 டீஸ்பூன்
உப்பு - பின்ச்.
ரெசிப்பி பகிர்வு :-
சிராஜ் முனீரா. Share your recipes பகிர்வுக்கு மிக்க நன்றி.

செய்முறை:-
நான் முயற்சி செய்தேன் சூப்பராக வந்தது.  இதோ படங்களுடன் குறிப்பு.
மேற்சொன்ன அளவில்  பவுலில் மைதா , சோடா உப்பு நன்கு கலந்து கொள்ளவும்.
பின்பு வெண்ணெய்,முட்டை, சீனி, பால் சேர்த்து மாவை பிணைந்து கொள்ளவும்.
 அரை மணி நேரம் மூடி வைக்கவும்.
பின்பு ஒரு போல் உருண்டைகளாக பிரிக்கவும்.

 எண்ணெய் சூடு செய்யவும். மிதமான சூட்டில் உருண்டைகளைப் போட்டு சுடவும். கேக் வெட்டு பட்டது போல் பிளந்து காணப்படும்.
பொன்னிறமாக சிவந்து வெந்து வரும் பொழுது எண்ணெய் வடித்து எடுக்கவும்.சுவையான வெட்டு கேக் தயார்.
ஊரில் டீக்கடையில் வடையுடன் இதுவும் விற்பனைக்கு இருக்கும்.
எப்பவாவது விரும்பினால் வீட்டில் செய்து சாப்பிடலாம்.

சூப்பர் டேஸ்ட் :) !

Sunday, April 23, 2017

ட்ரிஃபில் புட்டிங் / Trifle Pudding


தேவையான பொருட்கள்;-
வெனிலா ஸ்பாஞ்ச் கேக் ( முதல் லேயர்)
மிக்ஸ்ட் ஃப்ரூட்ஸ்
ஜெல்லி
கஸ்டர்ட்
விரும்பினால் நட்ஸ் விப்பிங் கிரீம் ( மேல் அடுக்கு).
செய்முறை:-


முதலில் அரை லிட்டர் பாலை காய்ச்சவும். அத்துடன்  வெனிலா ஃப்லேவர் கஸ்டர்ட் பவுடர் 2 டேபிள்ஸ்பூன் சிறிது பாலில் கலந்து மிக்ஸ் செய்யவும். சீனி 4 டேபிள்ஸ்பூன் சேர்க்கவும். நன்கு மிக்ஸ் செய்யவும்.அடுப்பை அணைக்கவும்.


அடுத்து ஏதாவது ஒரு ஃப்லேவர் ஜெல்லி ரெடிமேட் வாங்கி பேக்கில் சொன்ன படி காய்ச்சி  ஆற வைத்து செட் ஆனதும் துண்டு போட்டு வைக்கவும்.
ஒரு கண்ணாடி பவுலில் முதலில் கேக் துண்டுகளாகவோ கட் செய்தோ வைக்கவும்.
அடுத்து ஜெல்லி வைக்கவும், ஃப்ரூட்ஸ் போடவும், பின்பு காய்ச்சி ஆறிய கஸ்டர்ட் சேர்க்கவும்.

செட் ஆக ஃப்ரிட்ஜில் குறைந்தது ஒரு மணி நேரம் வைக்கவும்.
செட் ஆனவுடன் பரிமாறவும்.
தனித்தனியாக பவுலில் எடுத்து பரிமாற வேண்டும்.
சுவையான ட்ரிஃபில் புட்டிங் ரெடி. விரும்பினால் விப்பிங் கிரீம் ஒரு லேயர் வைத்து மேலே ரோஸ்ட்டட்  நட்ஸ் தூவி அலங்கரித்துப் பரிமாறலாம்.
Wednesday, April 19, 2017

கிரீன் / பிரியாணி ஆம்லெட் / Green / Briyani omlette

 ஒரு சில நேரம் டிஃபன் செய்ய சோம்பல் வரும் பொழுது ஈசியாக முட்டை ஆம்லெட் செய்து சாப்பிடுவதுண்டு.சிறிய சிறிய மாற்றத்துடன் செய்வேன்.
முட்டை ஆம்லட் தானேன்னு கிளிக் செய்வதில்லை.முட்டை பொரிக்கிற கலத்தில் ஆம்லட் கலவையை ஊற்றும் பொழுது தான் திடீர்னு நினைவு வந்து கிளிக் செய்தேன்.
தேவையான பொருட்கள்:-
பெரிய முட்டை - 2 அல்லது 4
எண்ணெய் அல்லது நெய் - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
மல்லி,புதினா, கருவேப்பிலை - சிறிது
வெங்காயம் - சிறியது 1
( பச்சை மிளகாய்,மல்லி,புதினா,கருவேப்பிலை,வெங்காயம் சேர்த்து பரபரவென  மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - கால் டீஸ்பூன்
கரம் மசாலா விரும்பினால் ( பின்ச்)
சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரைடீஸ்பூன்
விரும்பினால் பொடியாக தக்காளி நறுக்கி சேர்க்கலாம்.(நான் இதில் சேர்க்கவில்லை ..அது தனியாக தக்காளி ஆம்லெட் செய்து சாப்பிடலாம்)
உப்பு தேவைக்கு.
செய்முறை:-
 முட்டையுடன் அரைத்த கலவை, உப்பு,மிளகு, சீரகம், இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா(விரும்பினால்) சேர்த்து கலந்து அடித்து வைக்கவும்.
 முட்டை பொரிக்கிற கலம் சூடானவுடன் நெய் விடவும்.கலம் முழுவதும்
கலவையை பரவலாக விடவும்.

 திருப்பி போடவும். இரு புறமும் திருப்பி  வெந்தவுடன் எடுக்கவும்.
 அப்படியே சூடாக தட்டில் எடுத்து பரிமாறவும்.
இதனை பிரியாணி ஆம்லெட் என்று கூட சொல்லலாம்.
பச்சையாக இருப்பதால் கிரீன் ஆம்லெட் என்றேன்.

Thursday, April 13, 2017

பராசப்பம் / Parasappam

பராசப்பத்தை ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாகச் செய்வார்கள். இது எங்க ஊரு ஸ்பெஷல்.தேவையான பொருட்கள்:-
மாவு தயாரிக்க:-
புழுங்கல் அரிசி - ஒரு கப்
பச்சை அரிசி - ஒரு கப்
உளுந்து - அரை கப்
கடலை பருப்பு - கால் கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - பாதி காய்.  

முதலில் அரிசி,உளுந்து வெந்தயம்,கடலை பருப்பு சேர்த்து ஊற வைக்கவும். தேங்காய் துருவி வைத்துக் கொள்ளவும்.
நன்கு சுமார் 4 மணி நேரம் ஊறிய பின்பு முதலில் ஊறிய வற்றை சேர்த்து அரைக்கவும்.அத்துடன் தேங்காய் சேர்த்து அரைத்து  எடுத்து மூடி வைக்கவும். எட்டு மணி நேரம் இருக்க வேண்டும்.

 மாவுடன் சேர்க்க மறுநாள் ;-
முட்டை  1 அல்லது 2
ரவை - ஊறவிட்டது - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

தயார் ஆன அரைத்த மாவுடன் முட்டை,ரவையைச் சேர்த்து  கலக்கவும்.


இனி கொத்துக்கறி மசாலா தயார் செய்ய வேண்டும்.
மட்டன் அல்லது சிக்கன் கொத்தியது - 200 கிராம்  எடுத்துக் கொள்ளலாம்,
ஒரு குக்கரில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விடவும்.
கால் கிலோ பொடியாக நறுக்கிய வெங்காயம்  சேர்த்து வதக்கவும். 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்  சேர்க்கவும், கரம் மசாலா அரைடீஸ்பூன் சேர்க்கவும். நன்கு வதக்கவும்.பொடியாக நறுக்கிய 2 பச்சை மிளகாய், ஒரு தக்காளி  சேர்க்கவும்  நறுக்கிய மல்லி, புதினா இலை சேர்க்கவும். கொத்துக்கறி சேர்க்கவும்.  ஊர் மசாலா 1 டேபிள்ஸ்பூன் சேர்த்து நன்கு வதக்கிய பின்பு மூடி, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து  2  -3 விசில் விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
ஆறிய பின்பு  நாம் முட்டை ,ரவை கலந்த ஆட்டிய மாவில் தயார் செய்த கொத்துக்கறி மசாலாவைக் கொட்டவும்.
நன்கு ஒரு சேரக் கலந்து தோசை மாவு பதத்தில் வருமாறு தயார் செய்யவும்,உப்பு சரிபார்க்கவும். நல்ல மணமாக இருக்கும்.

இனி எண்ணெய் நெய் கலந்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.

தோசைச் கலத்தில்  மாவை விட்டு வட்டமாக மெல்லிய அல்லது கனத்த பராசப்பமாகச் சுட்டு எண்ணெய் நெய் மேலே லேசாக விட்டு சிவற பராசப்பத்தைச் சுட்டு அடுக்கவும்.
சுவையான பராசப்பம் தயார்.

இது கறி சால்னாவுடன் பரிமாற சூப்பராக இருக்கும்.