Monday, January 23, 2017

சிவப்பு டர்னிப் கூட்டு /நூல் கோல் / Red turnip kootu

 தேவையான பொருட்கள்:-
சிவப்பு டர்னிப் - கால் கிலோ
சிறுபருப்பு - 50 கிராம்
மஞ்சள் , சீரகம், பெருஞ்சீரகம் தூள் - தலா கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
அரைத்துச் சேர்க்க:-
தேங்காய்த்துருவல் - நான்கு டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
பூண்டு பல் - விரும்பினால் - 1
சீரகம் தாளிக்க சேர்க்காமல் இங்கு விரும்பினால் சேர்த்தும் அரைக்கலாம்.
தாளிக்க:- 
எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்
கடுகு,சீரகம் - தலா அரை டீஸ்பூன்
கிள்ளிய மிளகாய் வற்றல் - 1
கருவேப்பிலை - 2 இணுக்கு
நறுக்கிய  வெங்காயம் - சிறிது
நறுக்கிய மல்லி இலை - சிறிது.

செய்முறை:-
 சிவப்பு டர்னிப்பை நன்கு அலசி தோல் நீக்கி கொள்ளவும். உருண்டையாக இருந்தால் டர்னிப் என்றும், நீள் வாக்கில் இருந்தால் சிவப்பு முள்ளங்கி என்றும் சொல்வதுண்டு.

 சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
 ஊற வைத்த சிறுபருப்பை தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அதனுடன் நறுக்கிய ட்ரனிப்பை சேர்க்கவும்.
 மசாலா  தூள் வகைகள் சேர்த்து வேக விடவும்.
 தேங்காய், மிளகாய் பூண்டு(விரும்பினால்) சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

 பருப்பும் டர்னிப்பும் வெந்து வரும் பொழுது  தேங்காய் மிளகாய் அரவை சேர்க்கவும்..
 ஒன்று சேர்ந்து கொதித்து வரட்டும்.
 மேலே தாளிக்க சொன்னவற்றை தாளித்து கொட்டவும்.
 வெந்த டர்னிப்  பருப்பை சேர்த்து தேவைப் பட்டால் சிறிது வெந்நீர் சேர்த்து உப்பு சரிபார்த்து நறுக்கிய மல்லி இலை தூவவும்.

 மேலே ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

சுவையான சிவப்பு டர்னிப் கூட்டு தயார்.
சூடான சாதம் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்.
கூட்டு செய்வது உங்கள் விருப்பம் தான். நான் முறையை சிறிது மாற்றி மாற்றி முயற்சி செய்வதுண்டு.
நீங்களும் சிவப்பு டர்னிப் கூட்டு செய்து பாருங்க.
இல்லாட்டி அப்படியே சாலட் மாதிரியும் சாப்பிடலாம்.

Friday, January 20, 2017

டூனா மீன் கட்லெட் / Tuna Fish Cutlet

இந்த கட்லெட் செய்து பரிமாறினால்
சிக்கன் கட்லெட்டா என்று தான் கேட்பார்கள் அல்லது ஃப்ரெஷ் ஃபிஷ் கட்லெட்  என்று நினைத்துக் கொள்வார்கள்.டூனா மீனில் கட்லெட் செய்தேன் என்று நீங்கள் சொன்னால் தான் தெரியும்.
இனி கட்லெட் செய்முறை:-

தேவையான பொருட்கள்;-
டின் டூனா - 170 கிராம் ( நல்ல குவாலிட்டி பிராண்ட்)
பொடியாக நறுக்கிய  வெங்காயம் - கால் கிலோ
பொடியாக நறுக்கிய  பச்சை மிளகாய் - 2 
பொடியாக நறுக்கிய இஞ்சி - 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்
கால் டீஸ்பூன் - மஞ்சள்  தூள்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 அல்லது 2 டீஸ்பூன்
நறுக்கிய மல்லி இலை - சிறிது,  புதினா விரும்பினால் சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.
வேக வைத்த உருளைக்கிழங்கு -1 ( உருளைக்கிழங்கு பெயருக்கு கொஞ்சம் பிடிக்குமளவு சேர்த்தால் போதும்)
உப்பு - தேவைக்கு
முட்டை வெள்ளைக்கரு - 2
 ப்ரெட் துண்டுகள் - 4-6 ( ஃப்ரெஷ் ப்ரெட்  மிக்ஸி ஜாரில் பொடித்து வைக்கவும் - ஃப்ரெஷாக பொடித்து செய்வது தனிச் சுவையைத் தரும்)
எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை:-
ஒரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு சேர்த்து சிறிது உப்பும் சேர்த்து நன்கு வதங்க விடவும்.



வதங்கிய பின்பு டின்  டூனாவை எண்ணெய் அல்லது தண்ணீரில் இருக்கும், அதனை சுத்தமாக வடித்து எடுத்து கடாயில் போட்டு நன்கு வெங்காயத்தோடு சேர்த்து வதக்கவும்.

கரம் மசாலா, காரத்திற்கு ஏற்ப மிளகுத்தூள் சேர்க்கவும்.( தனித் தனியாக சீரகம், சோம்புத்தூள்  என்று உங்கள் விருப்பப்படியும் சேர்க்கலாம்.) நான் இதில்,மஞ்சள் தூள் கரம் மசாலா, மிளகுத்தூள் மட்டுமே சேர்த்தேன்.
நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.மசித்த உருளைக்கிழங்கு சேர்க்கவும். சேர்த்து பிடிக்குமளவு சேர்த்தால் போதும். உப்பு சரி பார்க்கவும்.
 ஒரே அளவான உருண்டையாக பிடித்து வைக்கவும்.
உருண்டையை எடுத்து முட்டை வெள்ளைக்கருவில் முக்கி எடுத்து, ப்ரெட் கிரம்ஸில் பிரட்டி நீளவாக்கிலோ அல்லது வட்டமாகவோ தட்டி  தயாராக வைக்கவும்.
கடாயில் எண்ணெய் நன்கு சூடானவுடன் நெருப்பை  மீடியமாக வைத்து பொன் முறுகலாக டீப் ஃப்ரை அல்லது சாலோ ஃப்ரை பொரித்து எடுக்கவும்.
சுவையான டூனா மீன் கட்லெட் தயார்.


Monday, January 16, 2017

மிக்ஸ்ட் பார்பிகியூ சிக்கன் / Mixed Chicken Barbecue


அமீரகத்தில் பொதுவாக  பார்க், பீச்சில் குளிர் காலத்தில் குடும்பத்தோடு உட்கார்ந்து  பார்பிகியூ செய்து சாப்பிடுவது சாதாரணமாக காணப்படும் ஒரு நிகழ்வு.
இங்கு வீட்டில் முன்னாடி,பின்னாடி, சைடில் திறந்த வெளி  இடம் இருப்பதால் செய்து பார்க்கலாம் என்று முயற்சி செய்தது தான் இது.

தந்தூரி சிக்கன் பார்பிகியூ:
தேவையான பொருட்கள்;-
சிக்கன் - 1 கிலோ
சிக்கனில் ஊற வைக்க மசாலா தயார் செய்ய வேண்டும்.
தந்தூரி மசாலா பேஸ்ட்  தயாரிக்க:-
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
கெட்டி தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை - 1
காஷ்மீரி மிள்காய்த்தூள் - 1  அல்லது 2 டீஸ்பூன்(காரம் அவரவர் விருப்பம்)
கரம் மசாலா -கால் -  அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - அரைடீஸ்பூன்
கஸ்தூரி மேத்தி - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு எண்ணெய் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு.
இறுதியாக மேலே தடவ:-
பட்டர் - சிறிய துண்டு.
செய்முறை:- 
முதலில் மேற்சொன்னபடி பேஸ்ட் தயார் செய்து  கொள்ளவும்.
 கழுவி, வடிகட்டிய சிக்கனை பேஸ்டில் ஊற வைக்க வேண்டும்.
குறைந்தது 3-4 மணி நேரம் இருக்கட்டும்.
பின்பு பார்பிகியூ செய்ய அடுப்பை தயார் செய்து கொண்டு சிக்கனை கம்பி தட்டில் அடுக்கி கனலில் இரு புறமும் வேகுமாறு சுட்டு எடுக்க வேண்டும்.



சுவையான பார்பிகியூ சிக்கன் தயார். சிக்கனை எடுத்து பட்டர் தடவி அலுமினியம் ஃபாயிலில் சுற்றி வைக்கவும். பரிமாறும் வரை வெது வெதுப்பாக இருக்கும்.
மசாலா ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி போடுவதுண்டு. ரெடி மேட் டிக்கா அல்லது பார்பிகியூ  மசாலா கூட உபயோகிக்கலாம்.

பார்பிகியூ ஹரியாலி சிக்கன் டிக்கா
தே.பொ:-
சிக்கன் போன்லெஸ் – அரைக்கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் குவியலாய் – 1 டீஸ்பூன்
கெட்டித்தயிர் – 2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா – கால் டீஸ்பூன்(ஏலம் பட்டை கிராம்புத்தூள்)
கசூரி மேத்தி – 1-2 டீஸ்பூன் (விரும்பினால் – நல்ல மணமாக இருக்கும்)
எண்ணெய் – 2 டீஸ்பூன்
அரைக்க:-
மல்லி, புதினா, கருவேப்பிலை – தலா ஒரு கையளவு
பச்சை மிளகாய் – 3 (காரம் அவரவர் விருப்பம்)
எலுமிச்சை பழம் ஜூஸ் (சிறியது )– 1
உப்பு – தேவைக்கு.
செய்முறை:-
போன்லெஸ் சிக்கன் துண்டுகளை ஒரே போல் கட் செய்து அலசி தண்ணீர் சுத்தமாக வடிய வைக்கவும்.
மரக்குச்சியை தண்ணீரில் ஊற விடவும்.
மல்லி,புதினா,கருவேப்பிலை,பச்சை மிளகாயை லெமன் ஜூஸ், சிறிது உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும். லெமன் ஜூஸ் சேர்த்து அரைத்தால் பச்சையாகவே இருக்கும்,நிறம் மாறாது.
சிக்கனுடன்,இஞ்சி பூண்டு பேஸ்ட், கெட்டி தயிர்,கரம் மசாலா,அரைத்த விழுது,கசூரி மேத்தி,எண்ணெய், உப்பு சிறிது தேவைக்கு சேர்த்து குறைந்தது 1-2 மணி நேரமாவது ஊற வைக்கவும். முதல் நாளே செய்தும் ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.
பின்பு பார்பிகியூ அடுப்பில் நெருப்பு கணல் வந்தவுடன் மரக்குச்சியில் சிக்கனை கோர்த்து கம்பி தட்டில் வைத்து இரு புறமும் நன்கு வேகுமாறு சுட்டு எடுக்கவும்.
சுவையான ஹரியாலி சிக்கன் டிக்கா தயார்.
 சுட்ட சிக்கன் கோஃப்தா கபாப் /BBQ chicken kofta kebab
தே.பொ:-
சிக்கன் போன்லெஸ் – கால் கிலோ
பொடியாக சாப் செய்த வெங்காயம் – 1 ( தண்ணீரை பிழிந்து கொள்ளவும்)
நறுக்கிய மல்லி புதினா – சிறிது
நறுக்கிய பச்சை மிளகாய் – 1
முட்டை வெள்ளைக்கரு – 1
இஞ்சி பூண்டு பொடியாக நறுக்கியது –தலா 1 டீஸ்பூன்
மிளகு,சோம்பு, சீரகத்தூள் – தலா கால் டீஸ்பூன்
கரம் மசாலா – கால் டீஸ்பூன்
ஆலிவ் ஆயில் – 2 டீஸ்பூன்
உப்பு- தேவைக்கு.
செய்முறை:
எல்லாம் சேர்த்து மிக்ஸியில் கலந்து அரைத்து எடுக்கவும்.மிக்ஸ் சிக்கென்று இருக்க வேண்டும்.
தளர்வாக இருந்தால் ப்ரெட் துண்டு ஒன்றை பொடித்து சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
மரக்குச்சியை அரைமணி தண்ணீரில் ஊற வைக்கவும்.
அனைத்தையும் கலந்து கபாப் போல் உருட்டி மரக்குச்சியில் வைத்து பார்பிகியூ அடுப்பில் கிரில் செய்து எடுக்கவும்.
சுவையான ஹெல்தி சுட்ட சிக்கன் கோஃப்தா கபாப் ரெடி.
வெஜ் சாலட்டுடன் பரிமாறவும்.

அடுப்பு கனலில் வெங்காயம் வைத்து சுட்டும் பரிமாறினால் சூப்பர்.இதே அடுப்பில் மக்காச்சோளம் சுடலாம். கெட்டில் வைத்து ப்ளாக் டீ  கூட போடலாம்..


Thursday, January 12, 2017

ஈசி ரஸ்மலாய் / Easy Rasmalai

 உங்களுக்கு கொஞ்சமாக முயற்சி செய்து பார்க்கும்படி இந்த குறிப்பைக் கொடுக்கிறேன். டேஸ்ட் சூப்பராக இருக்கு. ஆனால் இது முட்டை சேர்த்து செய்வது.முட்டை சேர்த்தேன்னு நீங்க சொன்னால் கூட நம்ப மாட்டாங்க. பிடிச்சவங்க முயற்சி செய்து பாருங்க.
தேவையான பொருட்கள் & செய்முறை:-
முதலில் செய்ய வேண்டியது.
பால் - 2 கப்
தண்ணீர் - ஒரு கப்
சர்க்கரை - அரை கப் - ஒரு கப்
சாஃப்ரான் - பெரிய பின்ச்

 மேற்சொன்ன அனைத்தையும் சேர்த்து கொதிக்க வைக்கவும். விரும்பினால் சிறிது ஏலக்காய்த்தூள் சேர்க்கலாம்.
 ஒரு கப் பால் மாவிற்கு  மாவிற்கு கால் டீஸ்பூன் பேக்கிங் பவுடர், ஒரு  சிறிய அளவிலான முட்டை  சேர்த்து சப்பாத்தி மாவு மாதிரி பிசைந்து கொள்ளவும்.
 நான் கொஞ்சம் அதிகமாக செய்ததால் இரண்டு முட்டை சேர்த்தேன்.
 மாவு பிசைந்து ரெடி செய்து சிறிய உருண்டையாகவோ அல்லது சிறிய வடை மாதிரியோ தட்டிக் கொள்ளவும்.
பிசு பிசுன்னு இருந்தால் சிறிது நெய் தொட்டு மாவை எடுத்து தட்டவும்.
 கொதிக்கும் பாலில் ஒவ்வொன்றாக போடவும்.
 அடுப்பில் சிம்மில் வைத்து 10 நிமிடம் வேக விடவும்.அகலமான பாத்திரத்தில் போடவும். இல்லையெனில் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டு நடுவில் வேகாமல் இருந்து விடும்.
வெந்த பின்பு இப்படி அழகான எலுமிச்சை நிறத்தில் வந்து விடும்.
சுவையான ரஸ்மலாய் தயார்.
பிஸ்தா பருப்பை ஊறவிட்டு தோல் எடுத்து பொடியாக நறுக்கி அலங்கரித்துப் பரிமாறவும்.
பிடித்திருந்தால் செய்து பாருங்க.பிள்ளைங்களுக்கு செய்து கொடுங்க.

Monday, January 9, 2017

எலும்புச் சாம்பார் / Elumbu sambar / Mutton bone sambar


ஊரில் இருந்து முருங்கை,மாங்காய், வெள்ளைக் கத்திரிக்காய் (இங்கே கிடைக்காது)  வந்தது. என்ன செய்யலாம்னு யோசிச்சப்ப கொஞ்சம்  ஆட்டு எலும்பு  ஃப்ரிட்ஜில் இருந்தது. தால்ச்சாவும் செய்யலாம்.ஆனால் எலும்பு சாம்பார் குறிப்பு முன்பு சிம்பிளாக அறுசுவையில் கொடுத்த நினைவு..இங்கே பகிரவில்லை,எனவே செய்து பகிர்ந்தாச்சு.கிட்டதட்ட தால்ச்சா மாதிரி தான்.
 தேவையான பொருட்கள்;-
துவரம் பருப்பு - 100 கிராம்
கத்திரி, முருங்கை, மாங்காய்,தடியங்காய் - சேர்த்து கால் கிலோ அல்லது உங்க தேவைக்கு.
எலும்பு - 150 கிராம்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
மல்லி,கருவேப்பிலை - சிறிது.
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட்  - 1டீஸ்பூன் குவியலாய்.
கரம் மசாலா - கால் டீஸ்பூன்(ஏலம் பட்டை கிராம்புத்தூள்)
புளித்தண்ணீர் - பெரிய நெல்லியளவு ஊற வைக்கவும்.
உப்பு - தேவைக்கு.
தாளிக்க :-
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு,உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
கருவேப்பிலை - 2 இணுக்கு
வெங்காயம் - நறுக்கியது - சிறிது
பெருங்காயப் பொடி - சிறிது

செய்முறை:-
காய்கறிகளை நறுக்கி வைக்கவும்.
 குக்கரில் தேவைக்கு தண்ணீர் விட்டு எலும்பு துண்டுகள், மஞ்சள் தூள்,இஞ்சி பூண்டு, கரம் மசாலா,சிறிது உப்பு சேர்த்து  மூன்று விசில் வேக வைக்கவும்.

 மட்டன் போன் வெந்த பின்பு அத்துடன் ஊறிய பருப்பு சேர்த்து இரண்டு விசில் விட்டு எடுத்து வைக்கவும்.

 இப்ப மட்டன் போனுடன் பருப்பும் வெந்து தயாராகி விட்டது.
 சாம்பார் பொடி போட்டு,மாங்காய் தவிர,  நறுக்கிய அனைத்து காய்கறிகள்,, வெங்காயம்,தக்காளி சேர்த்து வேக வைக்கவும்.
 காய்கள் வெந்த பின்பு கொஞ்சமாக புளித்தண்ணீர் விடவும்.
 கொதிவரும் பொழுது தேவைக்கு மாங்காய் சேர்க்கவும்.
 வேக வைத்த பருப்பு,மட்டன் எலும்பு சேர்க்கவும்.
 கலந்து விட்டு உப்பு சரிபார்த்து கொதிக்க விடவும். நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.

 தாளிக்க கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,உளுத்தம் பருப்பு,வற்றல், கருவேப்பிலை போட்டு வெடித்த பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி கொதித்த எலும்பு சாம்பாரில் கொட்டவும்.

சுவையான எலும்புச் சாம்பார் தயார். 

இதனை வெறும் சோறு, பிரியாணி, நெய்ச் சோறு,தேங்காய்ச்சோறு,இட்லி,தோசை எது கூட வேண்டுமானாலும் பரிமாறலாம்.