Friday, March 24, 2017

ஈசி வெஜ் சூப் / Easy Veg Soup

தேவையான பொருட்கள்:-
கேரட்,கோஸ்,ப்ரோக்கலி, மஷ்ரூம்  எல்லாம் சேர்ந்து- கால் கிலோ,
பட்டர் - 1 டேபிள்ஸ்பூன் ( சிறிய கியூப்)
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
நறுக்கிய பூண்டு பற்கள் - 5
லைட் சோயா சாஸ் - 2 டீஸ்பூன்
வினிகர் - 1 டீஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கு.
செய்முறை:-

வாணலியில் பட்டர் போட்டு உருகவும் நறுக்கிய வெங்காயம் பூண்டு போட்டு வதக்கவும்.
காய்கறிகள் சேர்க்கவும்.
வதக்கி 4 கப் தண்ணீர் விடவும்.
காய்கறிகள் வெந்து வரும் போது சோயா சாஸ், வினிகர் சேர்க்கவும்.
அடுப்பை அணைக்கும் சமயம் மிளகுத்தூள் ,உப்பு தேவைக்கு சேர்க்கவும்.
சுவையான சத்தான வெஜ் சூப் தயார். 
ரா வீகன் ட்யட் இருக்கும் பொழுது  இரவு மட்டும் வேக வைத்த உணவு சாப்பிடலாம். ஒரு நாள் சூப், ஒரு நாள் சுண்டல் என்று சாப்பிட மெனு சொன்ன பொழுது செய்த சூப்.இன்று தான் பகிர நேரம் கிடைத்தது.
இதை இப்படியே சாப்பிட்டால் நல்ல ஃபில்லிங்காக இருக்கும்.
கிளியர் சூப்பாக வேண்டுமானால் வடிகட்டி குடிக்கலாம்.

Thursday, March 23, 2017

மலபார் செம்மீன் பிரியாணி / Malabar Prawn Briyani



தேவையான பொருட்கள்;
சீரக சம்பா அல்லது பாசுமதி அரிசி - அரைக்கிலோ
இறால் உறித்தது  - 500 கிராம்
வெங்காயம் - 4 மீடியம் சைஸ்(200 கிராம்) 
தக்காளி - 2 (100 கிராம்)
நறுக்கிய மல்லி,புதினா - தலா அரை கப்
ப்ரெஷ் கெட்டி தயிர் - அரை கப் 
எலுமிச்சை ஜூஸ் - ஒரு பழம் ( மீடியம் சைஸ்)
இஞ்சி பூண்டு  பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
ஏலம்,பட்டை, கிராம்பு - தலா இரண்டு
பிரியாணி இலை - 1
காஷ்மீரி சில்லி பவுடர் - அரைடீஸ்பூன் (காரம் அவரவர் விருப்பம்)
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 4 + 2  டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
பைனாப்பிள் எசன்ஸ் - விரும்பினால் - 1 டீஸ்பூன் ( நான் சேர்க்கவில்லை)
உப்பு - தேவைக்கு.
அலங்கரிக்க:
பெரிய வெங்காயம் சிவற வறுக்க - 1 
முந்திரி - 10 -15
கிஸ்மிஸ் - 15.

செய்முறை:-
முதலில் சுத்தம் செய்த இறாலை 1/2  டீஸ்பூன் மிளகாய்த்தூள் ,கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சுவைக்கு உப்பு, சிறிது எலுமிச்சை ஜூஸ் சேர்த்து கலந்து  வைக்கவும். 
தேவையான பொருட்களை நறுக்கி தயார் செய்து வைக்கவும்.

ஒரு கடாயில் 2 -3  டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு முந்திரி கிஸ்மிஸ் பக்குவமாக வறுத்து எடுக்கவும்.அதே எண்ணெயில் சிம்மில் வைத்து வெங்காயம் பொன்னிறமாக வறுத்து எண்ணெய் வடித்து தனியாக வைக்கவும்.

முந்திரி கிஸ்மிஸ் வெங்காயம் வறுத்த எண்ணெயில் இறாலை ரோஸ்ட் செய்து எடுக்கவும்.

இனி பிரியாணி ரைஸ் செய்ய:
2 டேபிள்ஸ்பூன் நெய் அடிகனமான பாத்திரத்தில் விடவும், ஏலம்,பட்டை கிராம்பு,பிரியாணி இலை போட்டு சிம்மில் வைத்து வெடிக்க விட்டு ஊறிய அரிசியை சேர்த்து மெதுவாக வதக்கவும்.அரிசியின் அளவிற்கு ஒன்றுக்கு ஒன்னரை அளவு கொதி நீரை விடவும் .தேவைக்கு உப்பு சேர்க்கவும்.
அடுப்பை சிம்மில் வைத்து மூடவும். தண்ணீர் வற்றி ரைஸ் பொல பொல வென்று வரும். அடுப்பை அணைக்கவும். ரைஸ் முக்கால் பதம் தான் வெந்திருக்கும்.
இனி பிரியாணிக்கு கிரேவி செய்ய:-
பிரியாணிக்கு கிரேவி செய்ய அடிகனமான பாத்திரம் எடுத்துக் கொள்ளவும்.
4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்து வரவும் .
நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.நன்கு பொன்னிறமாக வரவேண்டும்.இஞ்சி பூண்டு பேஸ்ட்  சேர்த்து வதக்கவும். நறுக்கிய தக்காளி, மல்லி, புதினா சேர்க்கவும்.சிறிது உப்பு சேர்த்து வதங்க விடவும்.தக்காளி நன்கு மசிந்து வர வேண்டும்.
.மிளகாய்த்தூள், மல்லித்தூள்,மிளகுத்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்க்கவும்.பிரட்டி விடவும். தயிர் எலுமிச்சை ஜூஸ் சேர்க்கவும்.தண்ணீர் சேர்க்கக் கூடாது.நன்கு பிரட்டி விட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்.ரோஸ்ட் செய்த இறாலைச் சேர்க்கவும்  கிரேவியில் உப்பு சரிபார்க்கவும். சிறிது எலுமிச்சை பிழிந்து விடவும்.

இனி பிரியாணிக்கு தம் செய்ய வேண்டும்.
இறால் ரெடி செய்ததில் பாதி கிரேவியோடு தனியாக எடுத்து வைக்கவும்.
மீதியுள்ள கிரேவி மீது ரெடி செய்த கீ ரைஸ் பாதி சேர்க்கவும்.விரும்பினால் அரை டீஸ்பூன் பைனாப்பிள்  எசன்ஸ் சேர்க்கவும்.அதன் மீது பாதி எடுத்து வைத்த இறால் கிரேவி சேர்க்கவும்.மீண்டும் ரைஸ் சேர்க்கவும்.வறுத்து வைத்த வெங்காயம்,முந்திரி திராட்சை சேர்க்கவும். எசன்ஸை பரவலாக விடவும். அலுமினியம் ஃபாயில் அல்லது மெல்லிய துணி கொண்டு மூடவும். தம் செய்ய ஒரு பழைய தோசைக்கலம் அல்லது தவாவை வைக்கவும். மேலே ரெடி செய்த பிரியாணி  பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் மிகச் சிறிய தீயில் தம் செய்யவும்.அடுப்பை அணைக்கவும்.10 நிமிடம் கழித்து திறக்கவும்.
கலந்து பரிமாறவும்.

சுவையான மலபார் செம்மீன் பிரியாணி தயார். ரைத்தா, பப்படம், சம்மந்தி, ஃபிஷ் ஃப்ரையுடன் பரிமாறலாம்.

Monday, March 20, 2017

காயல் மஞ்சச் சோறு ( கிச்சடி) / Kayal Yellow Rice

இது காயல் மக்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும்.
தேவையான பொருட்கள்:-
அரிசி - ஒரு கப் 
பாசிப் பருப்பு / சிறுபருப்பு - கால் கப்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
நெய் - ஒரு டீஸ்பூன்
ரம்பை இலை - சிறிது 
ஏலம், பட்டை,கிராம்பு - தலா 2
வெங்காயம் - 1 (விரும்பினால்)
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
தயிறு - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்பால் - அரை கப்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
 செய்முறை:-
அரிசி ,பாசிப்பருப்பை ஊற வைக்கவும்.விரும்பினால்  பாசி பருப்பை லேசாக மணம் வரும் படி வறுத்துக் கொள்ளலாம்.  தேங்காய்ப்பால் எடுத்து  வைக்கவும்.


 வாணலியில் எண்ணெய் விட்டு ஏலம்,பட்டை கிராம்பு, ரம்பையிலை வெங்காயம்,இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்,
 தயிர் சேர்க்கவும்.

 வதக்கி விடவும்.அளவுத்தண்ணீர், தேங்காய்ப்பால் சேர்க்கவும். மொத்தம் மூன்று கப் தண்ணீர் சேர்க்கவும்.
 மஞ்சள் தூள் சேர்க்கவும்.
 கிதிவரவும் அரிசி பருப்பு சேர்க்கவும்.
 உப்பு சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.


 புழுங்கி வரும் பொழுது அடுப்பை மிக சிறியதாக குறைத்து நெய் சேர்த்து தம் செய்யவும்.
 சுவையான காயல் மஞ்சச் சோறு தயார்.

 முட்டைக் கறி, மாசி சம்பல் உடன் பரிமாறவும்.இதனை காலை,மதியம், இரவு மூன்று வேளைகளுக்கும் ஏற்ற உணவு. விரும்பிய நேரம் செய்து சாப்பிடலாம்.இது காயல் மக்களின் பாரம்பரிய உணவு.

Wednesday, March 15, 2017

அரிசி பருப்பு சாதம்/ Arisi paruppu sadham (கொங்கு ஸ்பெஷல்)


 தேவையான பொருட்கள்;-
அரிசி - ஒரு கப்
துவரம் பருப்பு அல்லது பாசி பருப்பு - அரை கப்
நல்ல எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
கடுகு -1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம்  - 15 எண்ணம்
தக்காளி - 1
பூண்டுபற்கள் - 6
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
விரும்பினால் மிளகு சீரகம் பொடித்தது - தலா ஒரு டீஸ்பூன்
அல்லது மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
( நான் மிளகு சீரகம் பொடித்து போட்டேன் )
கருவேப்பிலை - 2 இணுக்கு
உப்பு - தேவைக்கு.
 செய்முறை:-
அரிசி பருப்பு  அலசி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
 குக்கரில் நல்ல எண்ணெய் விடவும். சூடானவுடன் கடுகு கருவேப்பிலை தாளிக்கவும்.
 சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய்,தக்காளி சேர்த்து வதக்கவும்.
 மஞ்சள் தூள் சேர்க்கவும்.மிளகு சீரகம் சேர்க்கவும். நான் மிளகாய்த்தூள் சேர்க்கவில்லை. நீங்கள் எது விருப்பமோ அது மட்டும் சேர்க்கவும்.
 உப்பும் சேர்த்து நன்கு வதக்கவும்.
 அரிசிக்கு இரண்டு அளவு தன்ணீரும் பருப்பிற்கு இரண்டு அளவு தன்ணீரும் வைக்கவும். மொத்தம் மூன்று கப் தண்ணீர் வைக்கலாம்.
 கொதி வரும் பொழுது ஊறிய அரிசி , பருப்பு சேர்க்கவும்.
 முதல் விசில் வரவும் நெருப்பைக் குறைத்து 7-10 நிமிடம் வைத்து அடுப்பை அணைக்கவும்.
 பாத்திரத்தில் செய்வதாய் இருந்தால் அடியில் பிடிக்காமல் இடையே பிரட்டி விட வேண்டும்.

 ஆவியடங்கியவுடன் திறக்கவும். சூடாகப் பரிமாறவும்.
சுவையான சத்தான அரிசி பருப்பு சாதம் தயார்.
துவையல், வடகம், அப்பளம் அல்லது ஏதாவது ஃப்ரை அயிட்டத்துடன்  பரிமாறவும்.
இது கொங்கு ஸ்பெஷல். நான் பாசிப்பருப்பு சேர்த்திருக்கிறேன். உங்கள் விருப்பம் துவரம் பருப்பு சேர்த்தும் செய்யலாம்.இல்லையெனில் இரண்டும் கலந்தும் செய்யலாம். மிளகு சீரகம் பதில் மிளகாய்த்தூள் சேர்க்கலாம்,விரும்பினால் நறுக்கிய தேங்காய் துண்டுகள் சேர்க்கலாம்.

Saturday, March 11, 2017

மண் பானைச்சோறு/ Clay pot rice

ஆரோக்கியமாக இப்படி மண் பானையில் சமைத்து மறுநாள் காலை தண்ணீர் விட்டு மோர், மிளகாய், நறுக்கிய மல்லி,கருவேப்பிலை, உப்பு போட்டு பிசைந்து சாப்பிட்டுப் பாருங்க. இந்தக் கோடைக்கு அது தான் பெஸ்ட்.
அரிசியை அரைமணி நேரம் ஊற வைக்கவும்.தண்ணீரைப் பானையில் கொதிக்க வைக்கவும்.
அரிசியை தட்டி உப்பு போடவும்.
கொதித்து வெளியே வடியும்.அதற்கு இப்படி ஒரு கரண்டியை மேலே வைத்து விடவும்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்த்தால் போதும்.
கொதி வந்தால் 20 நிமிடத்தில் வெந்து விடும்.வடித்துப் பரிமாறவும்.
மண் பானைச்சோறு தயார். சூடாகச் சாப்பிட்டாலும் சுவை, ஆறினாலும் ஆரோக்கியம். பழையது என்றால் மருத்துவ குணம் மிக்கது.
சுவையான கிராமத்து விருந்து தயார்.

Thursday, March 9, 2017

ஏர் ஃப்ரைட் மீன் பிரியாணி / Air fried fish briyani

  மீன் பிரியாணி செய்யும் பொழுது மீனைப் பொரித்து சேர்ப்போம்,  இதில் மீனை ஏர் ஃப்ரை செய்து பிரியாணி செய்தேன். செமையாக வந்தது. ஆரோக்கியமும் கூட.
தேவையான பொருட்கள்;-
மீன் - அரைக்கிலோ
மீனில் விரவ: 1  டீஸ்பூன் குவியலாக சில்லி பவுடர்,கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் , உப்பு தேவைக்கு.சுத்தம் செய்த மீனில் தடவி   தயார் செய்து வைக்கவும்.
எண்ணெய் -5 டேபிள்ஸ்பூன்
நெய் - விரும்பினால் - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு டேபிள்ஸ்பூன்
ஏலம் பட்டை கிராம்புத்தூள் - முக்கால் டீஸ்பூன்
வெங்காயம்,தக்காளி - தலா - 150 அல்லது - 200 கிராம்
பச்சை மிளகாய் - 3
மல்லி ,புதினா - சிறிது
மிளகாய்த்தூள்,மல்லித்தூள்,சீரகம், சோம்புத்தூள் - தலா அரைடீஸ்பூன்
தயிர் - கால் கப் (விரும்பினால்)
எலுமிச்சை - 1
உப்பு - தேவைக்கு.

இந்த பிரியாணிக்கு நெய் சோறு போல் ஆக்கி எடுத்து தம் போடலாம்.
அதற்கு தே .பொ:-
சீரக சம்பா - 400 கிராம்
நெய், எண்ணெய்  -தலா  1டேபிள்ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் -1
ஏலம் பட்டை கிராம்பு - தலா 2
ரம்பை இலை - 2 துண்டு
இஞ்சி பூண்டு - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - 3 கப்
உப்பு - தேவைக்கு.
 செய்முறை:-
மசால் தடவிய மீனை 180  டிகிரிக்கு   முற்சூடு செய்து பின்பு 5 நிமிடம் வைத்து செய்து எடுக்கவும்.



 நன்றாக வெந்து காணப்படும்.
 அரிசியை அரைமணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து வைக்கவும்.
நெய் சோறு தாளிக்க மேற் சொன்னவற்றை சேர்த்து தாளிக்கவும்.

 தண்ணீர் அளந்து ஒன்றுக்கு ஒன்னரை வீதம் விடவும். உப்பு சரி பார்த்து கொதி வரவும் அரிசி சேர்க்கவும். மூடி சிம்மில் வைத்து வெந்து அடுப்பை அணைக்கவும்.
 இனி பிரியாணிக்கு மசாலா தாளிக்க வேண்டும்.
 ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விடவும், சூடானவுடன் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி, கரம் மசாலா சேர்க்கவும்.
 மிளகாய் மல்லி,புதினா சேர்க்கவும்.
 நன்கு சுருள வதக்கவும்.
 தக்காளி, உப்பு சேர்த்து மூடி வதங்க விடவும்.
 மேற்சொன்ன மசாலா வகைகள் சேர்க்கவும்.
 பிரட்டி விட்டு சிம்மில் வைக்கவும்.
 தயிர் சேர்க்கவும்.
 தயிர் சேர்ப்பது உங்கள் விருப்பம்.ஒன்று சேர கலந்து விடவும்.
 ஏர் ஃப்ரை செய்த மீன் சேர்க்கவும்.
 சிறிது நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.உப்பு,புளிப்பு சரி பார்க்கவும். எலுமிச்சை பிழியவும்.
 ஆக்கி வைத்த நெய் சோற்றை மேலே பரப்பி  விரும்பினால் சாஃப்ரான்  கலர், ரெட் கலர் கரைசல் தெளிக்கவும்.
 அலுமினியம் ஃபாயில் கவர் செய்யவும்.அடியில் வாணலி வைத்து பிரியாணி பாத்திரம் வைத்து கால் மணி நேரம் சிம்மில் வைத்து தம் போடவும். அடுப்பை அணைக்கவும்.
சிறிது நேரம் கழித்து மீன் உடையாதவாறு பிரட்டி விட்டுப் பரிமாறவும்.
சுவையான மீன் பிரியாணி தயார்.
ஆனியன் ரைத்தா ,தால்சாவுடன் பரிமாறவும்.
இந்த பிரியாணி மைல்டாக அருமையாக இருக்கும்.
முள் இல்லாத மீனாக இருக்க வேண்டும் அல்லது நடுமுள் உள்ள மீன் உபயோகித்தால் சாப்பிடும் போது கவனமாக முள் எடுத்து சாப்பிட வேண்டும்.